மது போதை: மீள்வது எப்படி?
- புகைப்பழக்கத்தை நிறுத்த வழி சொல்லும்போது, ‘புகைப்பழக்கத்தைப் படிப்படியாக நிறுத்துவது நல்லது’ என்று ‘இதயம் போற்று’ தொடரில் சொல்லியிருந்தேன். இதைப் பின்பற்றிக் ‘குடிப்பதைப் படிப்படியாக நிறுத்தி விடுவேன்’ என்று குடிநோயாளி சொன்னால் நம்பாதீர்கள். மருத்துவரீதியாகவும் மனரீதியாகவும் இது சாத்தியமில்லை.
- ‘குடி’ என்னும் நோய்: ஒருவரைக் ‘குடி நோயாளி’ (Alcoholic) என்று அழைப்பதற்குக் காரணமே அவருக்குக் ‘குடி’ என்னும் நோய் இருக்கிறது என்பதால்தான். எப்படி, ஒருவருக்குச் சர்க்கரை நோய், இதய நோய் என்று வந்து விட்டால் அதற்கு மருத்துவச் சிகிச்சை அவசியமோ, அப்படித்தான் குடிநோய்க்கும் மருத்துவம் பார்க்க வேண்டியது அவசியம்.
- இன்னொன்று, மதுவுக்கென்றே ஒரு தனித்தன்மை உண்டு. ஒவ்வொருமுறை குடிக்கும் போதும் கொஞ்சமாவது கூடுதலாகக் குடிக்க வேண்டும் என்னும் அடக்க முடியாத ஆவலைத் தூண்டக்கூடிய மோசமான வஸ்து அது. அதனால், குடியைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தும் எண்ணம் சாத்தியப்படாது.
தீர்க்கமான முடிவு தேவை:
- ‘ஒன்றே செய். நன்றே செய். அதையும் இன்றே செய்’ என்பதுபோல், இந்த நொடியிலேயே குடிப்பதை நிறுத்திவிடுகிறேன் என்கிற தீர்க்கமான முடிவைக் குடிநோயாளிகள் எடுக்க வேண்டும்; அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவரிடம் அல்லது மது போதை ஒழிப்பு – மறுவாழ்வு மையத் துக்குச் செல்ல வேண்டும். மனநலச் சிறப்பு மருத்துவர் அல்லது குடிநோய் மீட்புச் சிகிச்சைக்குச் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்து வரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
- அங்கு குடிநோயாளி யிடம் அவர் குடிக்கும் மதுவின் அளவு, குடித்த பின்பு ஏற்படும் போதையின் விளைவு, போதை தெளியும் காலத்தின் அளவு எனப் பல கேள்விகளைக் கேட்பார்கள். எல்லாவற்றுக்கும் மனம் திறந்து பதில் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் நிலைமையில் குடிநோயாளி இல்லையென்றால், அவரை அழைத்து வரும் மனைவி அல்லது உறவினர்கள் சொல்ல வேண்டும். இதன் அடிப் படையில் குடிநோயாளியை வகை பிரித்துச் சிகிச்சையைத் தொடங்கு வார்கள்.
போலிகளிடம் ஏமாறாதீர்கள்:
- இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம். இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்துவிட்டீர்கள். மகிழ்ச்சிதான். அதேநேரம், ஒற்றை ஊசியில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவசரப்படக் கூடாது. மது போதை மீட்பு என்பது பல படிகளைத் தாண்டித்தான் முழுமை அடைய முடியும். காரணம், நம் நாட்டில் எங்கும் எதிலும் போலிகளுக்குப் பஞ்சம் இல்லை. மது போதை மீட்பு சிகிச்சை அதற்கு விலக்கு அல்ல. ‘ஒரே நாளில் குடிப்பதை நிறுத்திவிடலாம்!’ என்று விளம்பரம் செய்து ஏமாற்று வதற்கும் ஒரு கூட்டம் இருக் கிறது. இது முறையான மருத்துவம் அல்ல.
விஷமுறிப்பு சிகிச்சை:
- குடிநோயாளிக்கு நான்கு வாரங் களுக்குச் சிகிச்சை தேவைப்படும். குடிப்பதை நிறுத்துவது முதற்கட்ட சிகிச்சை. அப்படிக் குடிப்பதை நிறுத்தியதும் இதுவரை கிடைத்துக் கொண்டிருந்த ஆல்கஹால் இல்லாமல் போவதால் மூளை செல் தொடங்கி உடலில் ஒவ்வொரு செல் லும் கதறும். இதனால், சிகிச்சையின் இரண்டாம் நாளிலேயே சில விரும்பத்தகாத அறிகுறிகள் (Alcohol withdrawal symptoms) ஆரம்பமாகும். கை விரல்கள் நடுங்கும். பதற்றம் ஏற்படும். குமட்டல், வாந்தி வரும். எந்த நேரமும் நெஞ்சு படபடப்பாக இருக்கும். தலை வலிக்கும். உறக்கம் வராது.
- பலருக்கும் காதில் மாயக் குரல்கள் கேட்கும். கண்களில் மாயக் காட்சிகள் தோன்றும். சிலருக்கு வலிப்பு (Rum Fits) வரும். புத்தி பேதலித்து விடும் (Delirium tremens). இதற்குப் பயந்தே பலரும் சிகிச்சை எடுக்க மறுப்பார்கள். மிரட்டும் இந்தத் தொல்லைகளுக்குக் குடிநோயாளிகள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த ‘அவசரநிலை’க்கு உடனடியாக சிகிச்சை கிடைத்துவிடும். அதிகபட்சம் இரண்டு நாள்களில் இந்தத் தொல் லைகள் நீங்கிவிடும்.
- இதைத் தொடர்ந்து குடிநோயாளி யின் உடலில் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவி அதன் அங்கமாகவே மாறிவிட்ட ஆல்கஹால் என்னும் விஷத்தைப் பிரித்து அகற்றும் பணியை மருத்துவர்கள் மேற் கொள்கிறார்கள். இதற்கு ‘விஷமுறிப்பு சிகிச்சை’ (Detoxification) என்று பெயர்.
பொது ஆரோக்கியத்துக்குச் சிகிச்சை:
- அடுத்து, குடிநோயாளியின் ரத்தம், சிறுநீரைப் பரிசோதிப்பார்கள். வயிற்றை ஸ்கேன் எடுத்துப்பார்ப்பார்கள். கல்லீரல்/கணையச் சுரப்பிகளில் பாதிப்பு கள் தெரிந்தால் அவற்றுக்குரிய சிகிச்சைகளைக் கொடுப்பார் கள். இவ்வளவு காலமாக டெபாசிட் இழந்திருந்த ‘பி1’ வைட்டமினை ஊசி மூலம் செலுத்துவார்கள். குளுக்கோஸ் சலைன் ஏற்றுவார்கள். ஆல்கஹால் மூலம் குடிநோயாளி இழந்திருந்த புரதச் சத்தை மீட்டெடுப்பார்கள். இவை எல்லாமே முதல் வார சிகிச்சையில் நிகழும் அற்புதங்கள்.
மனநல மேம்பாட்டுக்குச் சிகிச்சை:
- இரண்டாவது வாரத்தில், குடி நோயாளியின் முகம், கண்கள் தெளிவாகி அவரது தோற்றத்தை அவரே நம்ப முடியாத அதிசயம் நிகழும். பழையனவற்றை நினைத்துக் குற்றஉணர்வு கொள்வார். குடியை விலக்கிய விஷயத்தை நினைத்து அவரது வெளி மனம் மகிழ்ந்தாலும் உள் மனம் அவரைக் கரித்துக் கொட்டும். ‘ஆல்கஹால் என்னும் ஆனந்தப் பொருள் இல்லாமல் ஒரு வாழ்க்கையா?’ என்று காதுக்குள் சொல்லும். இதனால், சிலருக்கு மனநலப் பிரச்சினைகள் தலைகாட்டும்.
- இந்த நேரத்தில் மனநல மருத்து வர்களும் மனநல ஆலோ சகர்களும் குடி நோயாளி யின் மனதுக்குள் புகுந்து அவரது ஆழ்மன வருத்தங்களை, பிரச்சினைகளை, ரகசியங் களை அவரது வாயாலேயே வெளியில் கொண்டு வரு வார்கள். இவற்றிலிருந்து குடிநோயாளி குடிக்கக் காரண மான ஆணி வேரைப் பிடித்து விடுவார்கள். அடுத்த கட்டமாக அந்த வேரைப் பிடுங்கி எறிவதற்குச் சிகிச்சை தருவார்கள். இந்தச் சிகிச்சை மட்டும் ஆளுக்கு ஆள் வேறுபடும்.
கைகொடுக்கும் குழு சிகிச்சை:
- மூன்றாவது வாரம் குடிநோயாளிக் குத்தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பார் கள். ஆரோக்கிய உணவு சாப்பிடு வது, கேரம், செஸ் விளையாடுவது, நல்ல உரைகளை/ இசையைக் கேட்பது, சினிமா பார்ப்பது, புத்தகம் வாசிப்பது எனக் குடிநோயாளியின் வாழ்க்கை முறையையே மாற்றி விடுவார்கள்.
- அறிதிறன் நடத்தைகளை மேம்படுத்தும் விதமாகவும் சிகிச்சை (Cognitive behaviour therapy - CBT) அளிப்பார்கள். குறிப்பாக, உடல்/சமூகம் சார்ந்த பிரச்சினைகளைச் சமாளிக்கும் வழிகளையும், மனச் சோர்வு/மன அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் வகுப்பெடுத்துக் கற்றுத் தருவார்கள். இவை எல்லாமே ஒரு குழுவாக (Group therapy) நிகழும்.
குடும்பத்தினருக்கும் சிகிச்சை:
- நான்காவது வாரம் குடிநோயா ளிக்கு எவ்வாறு குடும்ப ஆதரவை வழங்க வேண்டும் என்பதை அவரது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் கற்றுத் தருவார்கள். காரணம், குடிநோய் ஒன்றுதான் குடும்ப நோய். குடிப்பவரை மட்டும் குடி பாதிப்பதில்லை; அவரது குடும்பத்தையே பாதிக்கிறது. இதனால் குடும்பத்தாருக்கும் ஆலோசனை தேவைப்படுகிறது.
- சிகிச்சைக்குப் பிறகு, ‘எப்படி இருந்த மனுஷன் இப்படி ஜம்முன்னு மாறிட்டாரே!’ என்று ஊரே பார்த்து வியக்கும் வண்ணம் குடிநோயாளி மாறியிருப்பார். ஆனால், அந்த அற்புதம் தொடர்வதும் சவாலான விஷயம்தான். ஏனென்றால், மற்ற எல்லா நோயாளிகளைவிடவும் குடிநோயாளிக்குத்தான் மறுபடியும் மறுபடியும் மது போதை என்னும் புதைகுழிக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் அதிகம். இதனால், சிகிச்சை பெற்ற பத்துப் பேரில் சுமார் ஏழு பேர் மீண்டும் இடறிவிடுவார்கள்.
- அப்படிப்பட்டவர்களுக்குக் குடிக்கும் ஆவலை அடக்கும் (Anticraving) மாத்திரைகளைக் கொடுப் பார்கள். ‘வெறுப்புச் சிகிச்சை’ (Aversion therapy) தருவார்கள். அவரது ஆழ்மனதில் குடியிருக்கும் குடி விருப்பு என்பது தவறானது என்ப தைப் புரியவைக்க ‘ஏஏ’ (Alcoholics Anonymous) சமூகக் குழுவில் சேர்த்து விடுவார்கள். அந்தச் சமூகத்துடன் பழகும்போது குடியின் மீதான விருப்பு குடிநோயாளிக்குக் குறைந்துவிடும். மதுவின் கொடிய கரங்களுக்குள் மறுபடியும் அவர் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துவிடுவார்; குடிநோயிலிருந்து மீண்டுவிடுவார்.
உதவிக்கு வரும் ‘ஏஏ’ – அல் அனான்:
- ‘ஏஏ’ என்பது ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ (Alcoholics Anonymous) என்னும் அமைப்பு. முழு நேரமும் குடிநோயாளிகளாக இருந்து மீண்டிருப்ப வர்கள்தான் இதில் உறுப்பினர்கள். இவர்கள் முறையாகக் கூட்டங்கள் போட்டு, குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். குடியின் மீதான விருப்பத்தைக் குறைத்து, அதை வெறுப்பதற்குக் கற்றுத் தருகிறார்கள். இது முழுவதும் இலவச சேவை.
- ‘ஏஏ’ (AA) அமைப்பின் ஒருங்கிணைப்பு பொதுச்சேவை மையத்தை எண் 17, பால்ஃபோர் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்கிற முகவரியில் நேரிலோ, 044 – 26441941 என்கிற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டியவர்களின் விவரங்களைக் கூறுவார்கள்.
- ‘அல் அனான்’ (Al-anon) என்பது குடிநோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் ஓர் அமைப்பு. இதை ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸின் தோழமை அமைப்பு என்று கூறலாம். இதன் தொடர்பு எண்கள்: 89391 83594, 86820 80064, 94894 47100. மத்திய அரசின் தேசிய இலவச உதவி எண்ணும் இருக்கிறது: 14446. இதையும் அழைக்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 03 – 2025)