TNPSC Thervupettagam

மதுக் கடைகள் மூடல்: முழுமையான தீர்வுக்கு முதல் படி

June 26 , 2023 509 days 357 0
  • தமிழ்நாட்டில் 500 மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. சமூக அளவிலும் அரசியல் களத்திலும் மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் சூழலில், திமுக அரசின் இந்நடவடிக்கை ஒரு முக்கியமான நகர்வு.
  • தமிழ்நாட்டில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கிவரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, 500 மதுக் கடைகள் மூடப்படும் என மதுவிலக்கு-ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் மண்டலங்களில் இயங்கிவந்த 500 கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. குறைந்த வருவாய் கடைகள்; வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களில் அருகில் செயல்பட்டுவந்த கடைகள்; மக்களின் அதிருப்திக்கு உள்ளான கடைகள், நீதிமன்ற வழக்குகளில் தொடர்புடைய கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, தங்கள் பகுதிகளில் உள்ள மதுக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்னும் கோரிக்கை பல்வேறு பகுதி மக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது.
  • மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பது ஏறத்தாழ அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்திவரும் விஷயம்தான். எனினும், எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. சில அரசியல் தலைவர்களே மதுபான உற்பத்தி நிறுவனங்களை நடத்துவதும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.
  • அரசியல் அழுத்தங்கள்தான் மூடல் முடிவை நோக்கி அரசுகளைத் தள்ளுகின்றன. முந்தைய அதிமுக ஆட்சியில், 2016இல் 500 மதுக் கடைகள்; 2017இல் 500 கடைகள் மூடப்பட்டது அப்படித்தான். 2016 சட்டமன்றத் தேர்தலில், பூரண மதுவிலக்கு என்னும் வாக்குறுதியை முன்வைத்துப் போட்டியிட்ட திமுக, அந்தத் தேர்தலில் தோல்வியடைந்ததாலோ என்னவோ, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, மதுக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என வாக்குறுதி அளித்தது. எனினும், ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
  • இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களாக அதிகரித்த கள்ளச்சாராய மரணங்கள், டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அருந்திய சிலர் - பல்வேறு காரணங்களால் - மரணமடைந்தது, மது விற்பனையில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகார்கள் எனப் பல்வேறு எதிர்மறைச் செய்திகளுக்குப் பின்னர் அந்த வாக்குறுதிக்கான முக்கியத்துவம் கூடியிருக்கிறது.
  • பல குற்றச் செயல்கள், விபத்துகளின் முக்கியக் கண்ணியாக குடிப்பழக்கம் இருக்கிறது. 2021இல் மதுவால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கையில் சென்னை இரண்டாவது இடத்தில் இருந்தது ஓர் உதாரணம். மதுவால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். எனினும், தமிழ்நாட்டில் சுலபமாக மதுபானம் வாங்க முடியும் என்னும் சூழல் நிலவுவதால், இப்பிரச்சினை தொடர்கிறது.
  • இந்நிலையில், தாமதமான நடவடிக்கை என்றாலும், இது ஓர் ஆக்கபூர்வமான தொடக்கம். மதுக் கடைகளை மூடுவது குறித்து தொடர்ந்து வலியுறுத்திவந்த பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இதை வரவேற்றிருக்கின்றன. அரசின் இந்நடவடிக்கை, விரைவில் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண்பதன் மூலம், மது இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றும் பயணம் வெற்றிகரமாக அமையும்!

நன்றி: தி இந்து (26  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories