மதுபானக் கடைகள் குறைக்கப்படுவது எப்போது?
- மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய சூழலில், டாஸ்மாக் நிறுவனம் புதிய கடைகளைத் திறந்துகொண்டே போவது வருந்தத்தக்கது. தேனி மாவட்டம் பூத்திபுரம் கிராமத்தில் ராஜபூபால சமுத்திரக் கண்மாய் அருகே டாஸ்மாக் புதிய கடை ஒன்றைத் திறக்க இருந்தது.
- இதை எதிர்த்து அவ்வூரைச் சேர்ந்த வழக்கறிஞர் குமாரலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார். ‘மதுபானக் கடை தொடங்க உள்ள இடத்தின் அருகில் பெண்களுக்கான பொதுக்கழிப்பிடம் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையும் ரயில் பாதையும் இருப்பதால், மதுபானம் அருந்துபவர்கள் போதையில் விபத்துக்குள்ளாக வாய்ப்பு இருக்கிறது. முன்பு இருந்த மதுபானக் கடை அகற்றப்பட்ட இடமாகவும் இது உள்ளது.
- ஏற்கெனவே மூன்று மதுபானக் கடைகள் இப்பகுதியில் நடத்தப்படுகின்றன. நான்காவதாக இன்னொன்றை டாஸ்மாக் தொடங்க முயல்கிறது. மதுபானச் சில்லறை விற்பனைக் கட்டிட விதிமுறைகளுக்கு முரணாக அமையவுள்ள இந்தக் கடையை அனுமதிக்கக் கூடாது’ என்பதே அவரது முறையீடு. டிசம்பர் 27இல் மனுவை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ஜோதி ராமன் ஆகியோர், கடை திறக்கத் தடை விதித்தனர். “தற்போது மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானக் கடைகள் உள்ளன.
- பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலும் இவை திறக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் குடிக்கு எதிராக அரசு விழிப்புணர்வு விளம்பரம் செய்வது முரணாக உள்ளது. கடைகளை அதிகப்படுத்திவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்? மதுபானக் கடைகளைக் குறைப்பதற்கு வழி பாருங்கள்” என அரசுக்குச் சில அறிவுறுத்தல்களையும் நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.
- 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக செப்டம்பர், 2024இல் தமிழகத்தின் அப்போதைய மதுவிலக்கு - ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ். முத்துசாமி தெரிவித்தார். ஒரு கடையை மூடினால், மது அருந்துவோர் அதே பகுதியில் உள்ள இன்னொரு கடைக்குச் சென்று மது அருந்துவதைத் தடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குடிப் பழக்கத்தைக் கைவிட அரசு சார்பில் ஆலோசனைகள் வழங்குவதாகவும் கூறினார்.
- ஒரே நாளில் அனைவரும் குடியை விட்டுவிட முடியாது; அனைத்துக் கடைகளையும் அரசு ஒரே நாளில் மூடிவிடவும் முடியாது என்கிற நடைமுறைச் சாத்தியங்களுக்கு உட்பட்டுதான் நிர்வாகம் இந்தப் பிரச்சினையில் செயல்பட இயலும். எனினும், ஏற்கெனவே கடை மூடப்பட்ட பகுதியில் மீண்டும் கடை திறக்க டாஸ்மாக் முயல்வது, தவறான நடவடிக்கை. தீர்வை நோக்கிய அரசின் நடவடிக்கைகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழப்பதற்கு இது வழிவகுக்கும்.
- 2022-2023இல் டாஸ்மாக் ஈட்டிய வருமானம் ஏறக்குறைய 44,121 கோடி ரூபாய். இதை ஈடுகட்டும்வகையில் மாற்று வருவாய்க்கு வழி காண்பது, டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப் பணிகள் ஒதுக்கீடு செய்வது உள்பட பெரும்பணிகள் அரசின் முன் உள்ளன. குடிநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது என்கிற இலக்கை அடைவது மிகக் கடினமான பயணம். குறுகிய கால லாபத்துக்காகப் புதிய கடைகளைத் திறந்து, அந்தப் பயணத்தை டாஸ்மாக் கூடுதல் சிக்கல் ஆக்கிக்கொள்ளக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 01 – 2025)