மதுவுக்கு மயங்கும் இதயம்
- இன்றைய தினம் உலகிலேயே அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள்! குடிப்பழக்கத்தால் கல்லீரல்/கணையம்/இரைப்பை ஆகியவை கெட்டு, புற்றுநோய் வந்து நேரடியாகவும், குடி போதையில் விபத்து, வன்முறை, தற்கொலை போன்றவற்றால் மறைமுகமாகவும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு இரண்டு லட்சத்தைத் தாண்டுகிறது.
- தமிழகத்தில் இந்த நிலைமை மிகவும் மோசம். இங்கு சுமார் ஒரு கோடி பேர் ‘ஆல்கஹால் அடிமைகள்’. இந்த எண்ணிக்கையில் 10லிருந்து 15 வயதுக்கு உள்பட்ட சிறாரும் இருக்கின்றனர்.
அடிமை ஆவது ஏன்?
- ஆக்ஸிஜனைப் போன்று ஆல்கஹாலும் குடிநோயாளிகளுக்கு அன்றாடம் அவசியம். என்ன காரணம்? ஆல்கஹால் கொடுக்கும் போதை! அறிவியல் முறைப்படி சொன்னால், ‘என்டார்ஃபின்’ (Endorphin) என்னும் ‘மகிழ்ச்சி’ ஹார்மோன் போடும் பாதை; ‘டோபமைன்’ (Dopamine) என்னும் ‘பழக்கதோஷ’ ஹார்மோன் தூண்டும் போதை.
அது என்ன என்டார்ஃபின் / டோபமைன்?
- சுருக்கமாகச் சொன்னால், பெரு மகிழ்ச்சியில் திளைக்கும்போது நம் மூளையில் பிறக்கும் ஒரு வேதிப்பொருள்தான் என்டார்ஃபின். நீங்கள் நன்றிப் பெருக்கில் நண்பரைக் கட்டி அணைக்கும்போது, உங்கள் காதலைக் காதலி ஏற்றுக்கொள்ளும் போது, பிடித்த இணையுடன் உறவில் உச்சத்தை எட்டும்போது… இப்படி நீங்கள் பரவசப்படும்போதெல்லாம் உடலில் அமுதசுரபியாகச் சுரக்கிறது என்டார்ஃபின் ஹார்மோன்.
- மூளையில் ‘பரிசு மையம்’ (Reward centre) இருக்கிறது. இங்கு டோபமைன் சுரக்கிறது. டோபமைன் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் விருப்பங்களைப் பழக்கத்துக்குக் கொண்டுவரும் ஹார்மோன். உதாரணத்துக்கு, துரித உணவில் விருப்பமென்றால் அடிக்கடி அதைச் சாப்பிடத் தூண்டும். ‘குடி’ப்ப தில் விருப்பமென்றால், மீண்டும் மீண்டும் குடிக்கத் தூண்டும். பலரும் துரித உணவுக்கும் குடிக்கும் அடிமை யாவது இப்படித்தான்.
குடி போதை ஏற்படுவது எப்படி?
- மது அருந்தும்போது ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால், மூளையில் என்டார்ஃபின் சுரப்பதைத் தூண்ட, உடல் காற்றில் பறப்பதுபோல் ஒரு போதை தலைக்குள் ஏறுகிறது. என்டார்ஃபின் கொடுக்கும் இந்த தனி சுகத்தை மூளை, தனது அழிக்க முடியாத நினைவுத் தொகுப்பில் நிரந்தரமாகப் பதிவு செய்து கொள்கிறது. போகப்போக அந்தச் சுகபோக அனுபவத் துக்கு மூளை பழகிவிட, குறிப்பிட்ட நேரத்தில்/சூழலில், அந்தச் சுகத்தைத் தேடி அலைகிறது. இந்த நேரத்தில் டோபமைன் சுரக்கிறது. இது ‘குடி’க்கத் தூண்டுகிறது.
- மதுவைக் குடித்ததும், ஆல்கஹால் நேராகச் சிறுமூளைக்கு (Cerebellum) சென்று “ஹலோ” சொல்கிறது. வீட்டுக்குப் புதிய விருந்தாளி வந்து விட்டால் கொஞ்ச நேரம் அம்மாவை மறந்துவிடும் குழந்தை மாதிரி, இந்தப் புதிய நட்பில் பெருமூளை என்னும் எஜமானரின் கட்டுப்பாட்டில் இருந்து சிறுமூளை விலகிவிடுகிறது.
- தான் செய்ய வேண்டிய இயல்பான உடலியல் விஷயங்களை அது மறந்து விடுகிறது. மது குடிப்பவர்களுக்குக் கண்களில் போதை தெரிவதும், கால்கள் பின்னுவதும், பேச்சு குழறுவதும், மயக்கத்தில் திளைப்பதும் இதனால்தான்! மூளை சரி, மதுவுக்கும் இதயத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? இருக்கிறது. எப்படி?
மதுவும் இதயநோயும் – ஓர் ஆராய்ச்சி:
- “டாக்டர், மது அருந்தினால் இதய நோய் வராது என்று ஒரு கட்டுரையில் படித்தேன். அதனால்தான் நான் மது அருந்துகிறேன். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத என் மனைவி பிரச்சினை செய் கிறாள். நீங்களே அவளிடம் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்துங்கள்” என்று மனைவியோடு வரும் குடிநோயாளிகளை நான் அதிகம் பார்த்திருக் கிறேன். அப்படியானால், ‘மது அருந்தினால் இதய நோய் வராது’ என்பது உண்மையா? இதற்கு விளக்கம் சொல்ல, 1963இல் சிகாகோவில் நடந்த ஓர் ஆராய்ச்சியை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். மதுவுக்கும் இதய நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சி அது.
- ‘தினமும் 60 மி.லி. ‘ரெட் ஒயின்’ என்னும் மதுவைக் குடிப்பவர்களுக்கு மாரடைப்புக்கான சாத்தியம் குறைவு’ என்று அந்த ஆராய்ச்சி சொன்னது. ஆல்கஹாலில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் (Antioxidants), ஃபிளேவனாய்டுகள் (Flavonoids) என்னும் இரண்டு வகை நுண்ணூட்டச் சத்துகள் இருப்பதால், அவை இதயத்துக்குப் பாதுகாப்பு தருவதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டி ருந்தார்கள். இதைக் குடிநோயாளிகள் இன்றைக்கும் உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
- இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் ‘மதுவை அருந்துவ தால் கிடைக்கும் நன்மைகளைவிடக் கெடுதல்கள்தான் அதிகம். ஆகவே, மது எந்த அளவில் உடலுக்குள் போனாலும் ஏதாவது ஒரு வழியில் அது ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்’ என்பதாகவே தெரிவித்துள்ளன.
- மேலும், ஆல்கஹாலில் இருந்து கிடைக்கும் ஆன்டிஆக்ஸிடன்டு களையும் ஃபிளேவனாய்டுகளையும் நாம் சாப்பிடும் திராட்சைப் பழத்திலும், நெல்லிக்காயிலும், நாவல் பழத்திலும், நாட்டுக் காய்கறிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவை குறிப்பிட்டுள்ளன. ஆனால், இம்மாதிரியான ‘நல்ல’ முடிவுகளைக் குடிநோயாளிகள் தங்கள் வசதிக்காக மறந்துவிடுகிறார்கள் அல்லது மறைத்துக்கொள்கிறார்கள்.
- நடைமுறையில், மதுவை ஒரு மருந்தாக எந்தவொரு மருத்துவரும் பரிந்துரைப்பதில்லை. எதையும் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ளும் மக்களின் மனோநிலை தான் இதற்குக் காரணம். மரபு ரீதி யாகவும் மதுவுக்கு எளிதில் அடிமை யாகிவிடுகிற குணம் இந்தியர்களுக்கு உண்டு. ஆகவே, தினமும் 60 மி.லி. என்று குடிக்க ஆரம்பித்து, ‘ஒரு ஃபுல் இல்லாமல் உறக்கம் வராது’ என்று குடிக்கு அடிமையாகிப் போனவர்களே நம் நாட்டில் அதிகம். அப்படி ஆல்கஹாலுக்கு அடிமையாகி விட்டால் அதிலிருந்து மீள்வது படுசிரமம்.
மது என்ன செய்யும்?
- மதுவால் மூளை மட்டும் மயங்குவ தில்லை, இதயமும் ‘மயங்கி’விடும். அப்போது திடீர் மரணங்களுக்குப் பல வழிகளில் அது பாதை போடும். எப்படி? மதுவில் இருக்கும் ஆல்கஹால் குடிநோயாளியின் ரத்த அழுத்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எகிற வைக்கும். இதனால், ரத்தக் குழாய்களில் உள்காயங்கள் (Inflammation) ஏற்படும்.
- இதைத் தொடர்ந்து, ரத்தத்தில் டிரைகிளிச ரைட்ஸ் (Triglycerides) வகை கொலஸ்டிரால் அளவை ஆல்கஹால் அதிகப்படுத்திவிடும்; போகப்போக கெட்ட கொலஸ்டிராலோடு கூட்டு சேர்ந்துகொள்ளும்; புதிதாகச் சாலை கள் போடும்போது, ஆங்காங்கே குவிக்கப்படும் ஜல்லி-மணல் குவியல் களைப்போல, ரத்தக் குழாய்களில் இயல்பாக சுற்றிக்கொண்டிருக்கும் கொலஸ்டிராலை உள்காயங்களில் ஆங்காங்கே குவித்து, கூடுகட்ட ஏற்பாடு செய்யும். இந்த ஏற்பாடு இதயத் தமனியில் நிகழ்ந்தால், மாரடைப்பு வரும்; மூளையில் நிகழ்ந்தால் பக்கவாதம் (Stroke) வரும்.
அமைப்பு மாறும் இதயம்:
- நாள்பட்ட குடிநோயாளிகளுக்கு இதயத்தில் தசை அமைப்பு மாறி விடும். இதயம் விரிந்துவிடும். இதனால், இதயத் தசை நலிவடையும். இதை ‘விரிந்த இதயத் தசைநோய்’ (Dilated cardiomyopathy) என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த நிலைமையில் இதயம் இருந்தால், இதயத்தில் மின்னோட்டம் தடைபடும்.
- அப்போது இதயத் துடிப்பில் பிரச்சினை ஏற்படும். கடிவாளம் இல்லாத குதிரை ஓடுகிற மாதிரி இதயமும் சுயகட்டுப்பாட்டை இழந்து இயங்கும். ‘லப்.. டப்…’ என ஒரே சீராகத் துடிக்க வேண்டிய இதயம், ‘தடதட’வெனத் துடிக்க (Cardiac arrhythmia) ஆரம்பிக்கும். இதன் விளைவால், நெஞ்சில் படபடப்பு, நெஞ்சு வலி, மயக்கம், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, திடீர் மரணம் என உயிருக்கு வரும் ஆபத்துகள் அணிவகுக் கும்; பக்கவாதமும் எட்டிப் பார்க்கும்.
சர்க்கரை நோயாளிகள் கவனிக்க...
- ஆல்கஹாலில் உணவு கலோரிகள் அதிகம். 100 மி.லி. பீர் அல்லது ஒயினில் 150 கலோரி இருக்கிறது. ஒரு ‘காக்டெய்ல்’ பார்ட்டியில் குறைந்தது 500 கலோரி அதிகரித்துவிடும். மதுவோடு சோடா அல்லது செயற் கைச் சர்க்கரை கலந்த இனிப்பு பானங்கள் கலக்கப்படும்போது, கலோரிகள் இன்னும் அதி கரித்து விடும். இதனால் உடல் பருமன் ஏற்படும். இது உடலில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையை (Insulin resistance) அதிகப்படுத்தும்.
- அப்போது சந்தடியில்லாமல் சர்க்கரை நோய் வந்துசேரும். ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோய் மாத்திரைகளோடு ஆல்கஹால் விரோதிபோல் வினைபுரியும். அப்போது, அந்த மாத்திரைகள் செயலிழக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதற்குத் தாமதமாகும். சில நேரம் சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் போகும். இதனால், ரத்தக் குழாய்களில் உள்காயங்கள் ஏற்பட்டு மாரடைப்புக்கு வழி தேடும்.
கட்டாயம் ‘குடி’க்கக் கூடாதவர்கள் யார்?
- கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள்.
- இரைப்பைப் புண், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் உள்ளவர்கள்.
- குடும்ப வரலாற்றில் இதயநோய் உள்ளவர்கள்.
- இதயநோயாளிகள். இதயத் துடிப்பில் பிரச்சினை உள்ளவர்கள்.
- ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள்.
- ஆஸ்பிரின், ‘ஸ்டாடின்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறவர்கள்.
- கல்லீரல்/கணையம் பாதிக்கப்பட்டவர்கள். அதாவது, ‘கொழுப்புக் கல்லீரல்’ (Fatty liver), ‘கல்லீரல் சுருக்க நோய்’ (Liver cirrhosis), கல்லீரல் செயலிழப்பு, கணைய அழற்சி போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 02 – 2025)