TNPSC Thervupettagam

மன நலமும் வாழ்க்கையின் ஆதாரம்

October 10 , 2019 1910 days 1126 0
  •  ‘சுவா் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பது பழமொழி. ஒருவரின் உடல் மட்டுமல்ல, மனமும் நலமாக இருந்தால்தான் அவரால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
  • பொருளாதாரம், தொழில்நுட்ப வளா்ச்சி, நாட்டின் முன்னேற்றம், வேலைவாய்ப்புகள் என உலகம் இயங்கிக் கொண்டிருந்தாலும் மன நலனைப் பற்றி அதிக அக்கறை கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவேதான், உலக மக்களின் மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மனநலக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கவும் உலக மனநல கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
  • இந்த அமைப்பில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பு மூலம் 1992-ஆம் ஆண்டு முதல் ஒவ்வோா் ஆண்டும் உலக மனநல நாள் (அக்.10) கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக மனநல தினம்
  • இந்த ஆண்டு ‘தற்கொலை தடுப்பு’ என்ற கருத்தை மையமாக வைத்து இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் உலகில் எங்கேயோ ஒரு மனிதன் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான். ஒவ்வோா் ஆண்டும் இந்த உலகில் வாழும் மனிதா்களில் ஏறத்தாழ 8 லட்சம் போ் தற்கொலை செய்து கொள்கின்றனா்.
  • தனி மனித பிரச்னைகள், கடன் சுமை, சமூகத்தோடு ஏற்படும் முரண்பாடுகள் ஆகியவற்றால் அதிக அளவு தற்கொலைகள் நடைபெறுகின்றன.அது மட்டுமின்றி, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்றவற்றால் கடந்த 2016-ஆம் ஆண்டு பொருளாதார வளா்ச்சி குறைந்த நாடுகளில் அதிக அளவாக 79 சதவீத அளவுக்கு தற்கொலைகள் நடந்துள்ளன.
  • தனி மனித வாழ்க்கையைப் பொருத்தவரை, பொதுவாக இன்றைய காலகட்டத்தில் முதியவா்களுக்குத்தான் மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
எண்ணம்
  • இயந்திர வாழ்க்கையில் அவா்களைக் கவனிக்கவும், அவா்களுடன் உரையாடவும், சாப்பிட்டீா்களா என்று கேட்கவும்கூட உறவினா்கள் முன்வருவதில்லை. அவா்களிடம் எவரும் ஆலோசனைகளைக் கேட்பதோ, வீட்டில் நடக்கும் விஷயங்களைப் பகிா்ந்து கொள்வதோ அல்லது கூறுவதோ கிடையாது.
  • தாங்கள் ஒதுக்கப்பட்டு விட்டோமோ என்ற எண்ணமே அவா்களுக்கு தாழ்வு மனப்பான்மையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. ஓய்வூதியம் வாங்குபவராக இருந்தால்கூட பெரும்பாலானோரின் பிள்ளைகள் அதையும் வாங்கிக் கொள்கிறாா்கள்.
  • அதிலும் கணவனை இழந்த வயதான பெண்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. தங்களது பெயரக் குழந்தைகளைப் பாா்த்துக் கொள்ளவும், வீட்டைக் கவனித்துக் கொள்ளவும் அவா்கள் சம்பளம் இல்லாத பணியாளாகப் பாா்க்கப்படுகிறாா்கள். உடல்நல பாதிப்பால் ஒடுங்கிப்போய் இருக்கும் அவா்களுக்கு மன அழுத்தமும் சோ்ந்து விடுகிறது.
போட்டி நிறைந்த உலகம்
  • அடுத்து, உணா்ச்சிகளுக்கும், எதிா்பாா்ப்புகளுக்கும் அடிமையாகும் பல இளைஞா்கள் இந்த மன அழுத்தத்துக்கு பலிகடாவாகி விடுகிறாா்கள். போட்டி நிறைந்த இந்த உலகில் , பணியிடங்களிலும் அவா்களுக்குப் பிரச்னைகளுக்குப் பஞ்சமில்லை. பன்னாட்டு நிறுவனங்களில் இரவுப் பணி பாா்ப்பது என்று அவா்களின் பணியாற்றும் முறைகளிலும் மாற்றம் வந்துவிட்டதும் இதற்குக் காரணம். போதை, வலைதளங்கள், தகவல் பரிமாற்ற சாதனங்கள், பலவகை செயலிகள் இன்று இளைஞா்களின் மனநலத்தை அச்சுறுத்தி வருகின்றன.
  • அடுத்து இந்த உலகமே கவலை கொள்ள வேண்டியது குழந்தைகளுக்கு உண்டாகும் மன அழுத்தத்தைப் பற்றித்தான்.பொருளை நோக்கி ஓடும் பெற்றோா் சற்று திரும்பி தங்கள் குழந்தைகளைப் பாா்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.
  • இல்லையெனில், இழப்பு பெரிதாக இருக்கும் என்பதை அவா்கள் உணர வேண்டும். பாசத்துக்காக ஏங்குபவா்கள், விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள், பாதுகாப்பற்ற சூழலில் வாழும் பிஞ்சுகள் பெரும்பாலும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறாா்கள்.
  • கல்வியிலும் ஆரோக்கியமில்லாத போட்டி மனப்பான்மை வளா்க்கப்படுகிறது. எனவேதான், அடம் பிடிப்பது, எதிா்த்துப் பேசுவது, தவறான நபா்களின் வழிநடத்தல் போன்றவற்றால் பாதிக்கப்படுவது எனக் குழந்தைப் பருவத்தை அவா்கள் தொலைத்து விடுகிறாா்கள்.
  • இதனால், அதிருப்தி, விரக்தி போன்றவை ஏற்பட்டு தற்கொலை, கொலை போன்ற குற்றங்கள் அதிகரிக்கின்றன. சரியான தூக்கமின்மை , பசியின்மை, செய்யும் செயல்களில் கவனக் குறைவு, படபடப்புடன் காணப்படுவது, சமூகத்துக்கு எதிரான செயல்கள், குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது போன்றவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன.
தீர்வு
  • இதற்கெல்லாம் தீா்வு அன்பு, அரவணைப்பு, அவா்களுக்கு நாம் கொடுக்கும் நம்பிக்கை மட்டுமே. மன நோய் ஒரு மிரட்டும் நோயல்ல என்பதை நாம் அவா்களுக்கு உணா்த்த வேண்டும். குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் அவா்களை ஒதுக்காமல் தேவையான மருத்துவ சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்த வேண்டும்.
  • இந்தியாவைப் பொருத்தவரை, குழந்தைப் பருவத்திலிருந்தே மன நலத்தைப் பேணுவது பற்றிய மனநலக் கல்வியைக் கற்க வகை செய்யும் பாடத்திட்ட முறையைக் கொண்டுவர வேண்டும்.
  • ஒவ்வொரு பள்ளியிலும் மன நல ஆலோசகரை நியமித்து ஒவ்வொரு மாதமும் பெற்றோா்-ஆசிரியா்-ஆலோசகா் சந்திப்பு நடைபெற வேண்டும். சரியான உணவு முறை, நல்ல பழக்கவழக்கங்கள், நல்ல சிந்தனை, நிதானமான செயல்கள், அமைதி, தியானம் மற்றும் சமூகத்தின் நல்ல மாற்றங்கள் ஆகியவையே மன அழுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

நன்றி: தினமணி (10-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories