TNPSC Thervupettagam

மனநலப் பாதிப்புகள் சமூக இகழ்ச்சி தவிர்ப்போம்

November 28 , 2023 412 days 295 0
  • மனநலக் கோளாறுகள் குறித்த புள்ளிவிவரங்களும் காரணிகளும் பலராலும் புறந்தள்ளப் படுவது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மனநலத்தைப் பாதுகாப்பதும், மனநோய்க்கு உடனடி சிகிச்சைபெறுவதும் பெரும்பாலும் புறக்கணிக்கப் படுகிறது. இதன் விளைவாக, சமூகத்தில் மனநலக் கோளாறுகளின் சுமை அதிகரித்து ‘சிகிச்சை இடைவெளி’ ஏற்படுகிறது. மனநல பாதிப்பும் பிறநோய்களைப் போல ஒரு நோய்தான் என்பதைஏற்றுக்கொள்வதில் தயக்கம், மனநோயை ஓர்அவமானம் என்று நினைப்பது, மூடநம்பிக்கைகள் போன்றவை இதற்கான காரணிகள்.

மனநலத்தின் முக்கியத்துவம்

  • 2015-2016இல் நடத்தப்பட்ட, தேசிய மனநலக் கணக்கெடுப்பின்படி மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இந்தியாவின் மக்கள்தொகையில் 10% (14 கோடிப் பேர்) எனத் தெரியவந்துள்ளது. மேலும், உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வில், இந்தியா போன்ற குறைந்த-நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 5 பேரில் 4 பேர், தீவிரமான மனநலக் கோளாறுக்குக் கூட உதவியை நாடுவதில்லை என்று தெரியவந்திருக்கிறது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ‘ஒரு தனிநபரின் மனநலம் என்பது தன்னுடைய முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துதல், அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களைத் தாங்கி முன்னேறுதல், திறம்படப் பணியாற்றுதல், சமூகத்துக்குத் தன்னாலான பங்களிப்பைச் சரியாக அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்’. ஆனால், மனநோயால் பாதிக்கப் பட்ட ஒருவர் சிந்தனை, நடத்தை, உணர்ச்சிகளில் சிரமம் ஏற்பட்டு, சமூகத்தில் தனது பங்களிப்பைச் செய்ய இயலாமல் தினசரி நிகழ்வுகளைக்கூட நிர்வகிக்க முடியாமல் சிரமத்தை அனுபவிக்கிறார். எனவே, அந்நபரின் வாழ்க்கை அவரை மட்டும் சார்ந்ததல்ல; மற்றவர்களையும் உள்ளடக்கியது. ஆக, தனிமனிதரின் மனநல ஆரோக்கியம் குடும்பம்,சமூகம், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, உயர்வு ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியமானது.

முட்டுக்கட்டை போடும் சமூக இகழ்ச்சி

  • மனநோய்களில் தீவிர மனநோய், மிதமான மனநோய் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. இரு பிரிவுகளிலும் பல உப பிரிவுகளும் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் மனநோய்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு, நோயின் அறிகுறிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். ஆனால், சிகிச்சை எடுப்பதற்கு சமூக இகழ்ச்சி (Stigma) மிகப்பெரிய ஒரு தடைக்கல்லாக உள்ளது.
  • சமூக இகழ்ச்சி என்பதை மனநலம், உடல்நலம் அல்லது இயலாமை போன்ற தனித்துவமான பண்புகளின் அடிப்படையில் ஒருவருக்கு எதிரான எதிர்மறையான அணுகுமுறை அல்லது பாகுபாடு என வரையறுக்கலாம். மோசமான மனநலப் பாதிப்புக்குப் பங்களிக்கும் முக்கிய ஆபத்துக் காரணிகளில் சமூக இகழ்ச்சியும் ஒன்று. மனநலம்பாதிக்கப்பட்ட ஒருவருக்குச் சிகிச்சை வழங்குவதில்தாமதம் ஏற்படவும், சிகிச்சைக்கான வாய்ப்பே இல்லாத நிலைக்கும் சமூக இகழ்ச்சி காரணமாகிறது. சமூகத்தின் பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களுடன் தொடர் புடையது சமூக இகழ்ச்சி.
  • மனநலப் பாதிப்புகள் குறித்துப் பொதுச் சமூகத்தில் நிலவும் தவறான கண்ணோட்டம், மனநலப் பாதிப்புகள் குறித்த சமூக இகழ்ச்சிக்குக் காரணமாகிறது. மனநோயால் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்பான ஊடகச் சித்தரிப்புகளும் சமூக இகழ்ச்சியை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபரின் உள்ளார்ந்த இகழ்ச்சியை உள்ளடக்கியது சுய இகழ்ச்சி என அழைக்கப்படுகிறது. அவமானம், நம்பிக்கையின்மை, தனிமை உணர்வு, உதவி கேட்க அல்லது சிகிச்சை பெறத் தயக்கம், மனநோயாளி என்று முத்திரை குத்தப்படுவோம் என்கிற பயம் எனப் பல காரணிகள் இதன் பின்னணியில் உள்ளன.

சமூக இகழ்ச்சியை எப்படிச் சமாளிக்கலாம்

  • மனநோயின் அறிகுறிகள் தெரியவரும்போதே அதைப் பற்றி குடும்ப நபர்கள், உறவினர்கள், நண்பர்களிடம் சொல்வது அவசியம். மனநோயாளிகளைப் பாதுகாப்பதில் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு முதன்மையானது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணத்தை முற்றிலும் விட்டுவிட வேண்டும். மனநோயால் பாதிக்கப்பட்ட நபரின் சிந்தனைகள், நடவடிக்கைகளில் மாறுபாடு ஏற்படும்போதே தாமதிக்காமல் உடனே மனநலமருத்துவக் குழுவினரிடம் அழைத்துச் செல்லவேண்டும். நோயாளி மருந்துகளை உட்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்; அதற்காக அப்படியே விட்டுவிடக் கூடாது. மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரைகளை நோயாளி எடுத்துக்கொள்வதை உறுதிசெய்வது முக்கியம்.
  • இடைவெளி இன்றி சிகிச்சையைப் பின்தொடர்தல் முக்கியமானது. மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ, மாற்றிக்கொடுக்கவோ, நிறுத்தவோ கூடாது. மேலும், மருந்துகளின் பக்கவிளைவுகளைக் கண்காணித்து மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அது மட்டுமின்றி, குடும்ப நல ஆலோசனை -நோயாளியின் மறுவாழ்வு குறித்த சந்தேகங்கள், ஆலோசனைகளை மனநல சமூகப் பணியாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நன்மை அளிக்கும். மனநோய்க்கான அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம்.
  • மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். அவர்களின் மறுவாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும். அவர்கள் அனுபவிக்கும் சமூக இகழ்ச்சி, பாகுபாடு நோயின் தீவிரத்தை அதிகமாக்குவதோடு, மீள்வதையும் கடினமாக்குகிறது. இந்த உண்மையை சரியாகப் புரிந்துகொண்டால், மனநலப் பாதிப்புகளைக் கணிசமாகக் குறைக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories