TNPSC Thervupettagam

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான கொள்கை: வரவேற்கத்தக்க பணி!

March 7 , 2025 5 days 24 0

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான கொள்கை: வரவேற்கத்தக்க பணி!

  • வீடற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்காகத் தமிழக அரசு அண்மையில் கொள்கையை வெளியிட்டுள்ளது. சமூகத்தில் மிக மிகக் கீழடுக்கில் இருக்கும் இப்பிரிவினர் மீதான தனது அக்கறையை உறுதிப்படுத்தியுள்ள தமிழக அரசின் செயல் பாராட்டுக்குரியது.
  • 2016ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர். இந்திய அளவில் நமது மாநிலம் ஐந்தாவது இடத்தில் இருந்தது. இவர்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 50%க்கும் அதிகம் எனக் கருதப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் பிப்ரவரி, 2025இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், வீடற்ற மக்களில் ஏறக்குறைய 70% பேர் பெண்கள், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டோராக இருப்பது தெரியவந்துள்ளது.
  • மனநலப் பராமரிப்புப் பணிகளுக்கான புதிய சட்டம் 2017இல் இயற்றப்பட்டது. வீடற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோரைப் பராமரிப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகளில் நீதிமன்ற நடைமுறைகளை இச்சட்டம் நீக்கியது. இத்தகைய நபர் ஒருவரைக் காவல் துறை அதிகாரி தன் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கண்டால், முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யவும் அவரைக் குடும்பத்தில் சேர்க்கவும், அதற்கு வாய்ப்பு இல்லாத சூழலில், அருகில் உள்ள பொது மருத்துவமனையில் சேர்க்கவும் இச்சட்டம் உரிமை அளிக்கிறது. சம்பந்தப்பட்டவரை மீட்டெடுப்பதில் அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாட்டையும் இச்சட்டம் கட்டாயம் ஆக்கியுள்ளது.
  • வீடற்ற மனநலம் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்காக 2018இல் தேசிய உடல்நலத் திட்டத்தின் (என்.ஹெச்.எம்.) ஒரு பகுதியாகத் தமிழகத்தில் ‘அவசரகாலப் பராமரிப்பு - மறுவாழ்வுக்கான மையங்கள்’ (ஈசிஆர்சி) தொடங்கப்பட்டன. அரசுசாரா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கூடிய மையங்களும் திறக்கப்பட்டன.
  • 2021-2022இல் மட்டும் ஏறக்குறைய 18 மையங்களில், வீடற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோர் 864 பேர் சேர்க்கப்பட்டனர்; 1,632 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டுத் தங்கள் குடும்பத்தினருடன் சேர்த்துவைக்கப்பட்டனர். எனினும், நிலைமை முற்றிலுமாக மாறிவிடவில்லை.
  • இத்தகைய சூழலில், பிப்ரவரி 27இல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ‘வீடற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு - நடைமுறைப்படுத்துதலுக்கான திட்டம் - 2024’, இத்தகையோரை மீட்பதற்காக ஒரு நிரந்தரமான செயல்பாட்டு நடைமுறையை முன்வைக்கிறது.
  • மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்பது, மனம்-உடல்நலம் சார்ந்த அவசரக் காலப் பராமரிப்பு, மறுவாழ்வுக்கான நீண்ட கால நடவடிக்கை, உறவினர்கள் உள்ளிட்ட பொதுச் சமூகத்தோடு சேர்ப்பது ஆகிய நான்கு கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மாநில மனநல ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தொண்டு நிறுவனங்கள், காவல் துறை, வெவ்வேறு அரசுத் துறைகளின் பிரதிநிதிகள், மக்கள் ஆகியோரை இந்தப் பணிக்காக ஒருங்கிணைப்பார். ஆதார், பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜனா, தமிழக முதல்வரின் முழுமையான உடல்நலன் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பலன்களை இம்மக்கள் பெறவைப்பது கொள்கையின் இன்னொரு சிறப்பு.
  • மனநலம் பேணுவதில் தமிழகம் பிற மாநிலங்களைவிட முன்னணியில் இருந்தாலும், பணியாளர்கள், கட்டமைப்பு ஆகியவற்றில் பற்றாக்குறை இருப்பதை மறுக்க இயலாது. 2016இல் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகைக்கும் 350 உளவியல் மருத்துவ ஆலோசகர்களே இருந்தனர். இப்போதும் இந்த எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை. கட்டமைப்பை உறுதிப்படுத்துவதே இந்த உன்னதமான கொள்கை அறிவிப்புக்கு உயிர் கொடுக்கும்.
  • பாதிக்கப்பட்டோரை மீட்பது, மக்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவிப்பதிலிருந்துதான் இதில் தொடங்குகிறது. காவல் நிலையத்தைத் தயக்கமின்றி மக்கள் அணுகுவது, மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்பதில் வழக்கமான பணிச்சுமைக்கு இடையே காவல் துறை ஈடுபடுவது போன்றவற்றில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இத்தகையோர் மீது பரிதாபத்தை வெளிப்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், இதுபோன்ற திட்டங்களில் அரசோடு மக்களும் கைகோப்பது முக்கியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories