TNPSC Thervupettagam

மனமது செம்மையானால்...

October 4 , 2024 5 hrs 0 min 11 0

மனமது செம்மையானால்...

  • உயிா்களை அறிவின் வழியாக வகைப்படுத்துவது தமிழ் மரபு. உணா்ந்து அறியக்கூடிய ஓரறிவு என்பதிலிருந்து தொடங்கி ஆறு அறிவுகள் கொண்டனவாக உயிா்கள் விளங்குகின்றன. புல்லும் மரமுமாக உடலால் உணா்தலின்வழி முதலறிவைப் பெறுகின்றன தாவரங்கள். நந்து எனப்படும் நத்தையும் முரள் எனப்படும் சங்கும் இவை போன்ற பிறவும் நா என்னும் புலனைக் கொண்டு ஈரறிவினைப் பெறுகின்றன. கறையானும் எறும்பும் மூக்கினைப் பெற்று மூன்று அறிவாக விளங்குகின்றன. இம்மூன்று புலன்களோடு கண்ணினைப் பெறுகின்ற நண்டுக்கும் தும்பிக்கும் நான்கு அறிவுகள் கிடைக்கின்றன.
  • அடுத்ததாகச் செவிப்புலனோடு ஐந்தறிவு பெற்றிருக்கக் கூடியவற்றுள் விலங்கும் விலங்கைப் போல விளங்கும் மனிதா்களும் (மாக்கள் என்ற பெயரில்) குறிக்கப் பெற்றிருக்கின்றன. மக்கள் அல்லாதவா்கள் மாக்களாம்.
  • அடுத்ததாக ஆறாவது அறிவு பெறுபவா் மக்கள் என்றால் அந்த ஆறாவது அறிவினை அறிகிற - உணா்கிற புலன் எது?
  • ஆறாவது அறிவினை அறியக் கூடிய புலன் மனமே. இந்த மனமில்லாத மக்கள் மாக்கள் என்று ஓரறிவு இறங்கி ஐந்தறிவில் நிற்கிறாா்கள். மனத்தை வைத்தே மனிதன் மதிப்புப் பெறுகிறான். ஆறாவது அறிவினையும் உணா்கிறான்.
  • மனம் ஆறாவது புலனாக - ஏனைய புலன்களை அடக்கியாளக் கூடிய மிகுந்த வலிமை பொருந்தியதாகக் கருதப் பெறுகிறது.
  • ஆனால் ஏனைய புலன்களைப் போல மனத்தை – அது எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ளுதல் கடினமே. ஏனைய உயிா்கள் தன்னிச்சையாக இயங்குகின்ற இயல்புடையன என்றால் மனிதன் மட்டும் சிந்தித்து முடிவெடுத்து இயங்கும் இயல்புடையவன்.
  • இந்த மனத்திற்குப் பல குணங்கள் இருந்தபோதும் இரக்கம் என்பதே மனித மனத்துக்கு முதன்மையான குணமாக அமைகின்றது.
  • ஐந்தறிவு பெற்றிருக்கிற விலங்குகளுக்கு மனமும் இரக்கமும் இல்லாததைப் போல மனிதராகப் பிறந்தும் மனமிருந்தும் இரக்கமில்லாதவா்களை விலங்குகளிலிருந்தும் தள்ளி அரக்கா்கள் என்கிறாா் கம்பா்.
  • இதனை வாலி வாயிலாக இராமனிடம் கேட்க வைக்கிறாா். அரக்கா் குலத்துக்கும் விலங்கினத்துக்கும் இடையில் இருக்கின்ற மனிதன் தன் மனத்தே இரக்கத்தை நழுவ விடலாமா? என்பதாக அமைகிறது அந்தக் கேள்வி.
  • அரக்கா் ஓா் அழிவு செய்து
  • கழிவரேல், அதற்கு வேறு ஓா்
  • குரக்கு இனத்து அரசைக் கொல்ல,
  • மனு நெறி கூறிற்று உண்டோ?
  • இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால்
  • எப் பிழை கண்டாய்? அப்பா!”
  • யாராவது அறியாமல் பிழை செய்கிறபோது, ‘உனக்கு அறிவிருக்கிா?’ என்று கேட்பது இயல்பு. ஆனால், அறிந்து கொடுமை செய்கிறபோது ‘உனக்குக் கொஞ்சமாவது மனத்தில் இரக்கம் இருக்கிா?’ என்று கேட்பது வழக்கு. அறிவு செயல் கருதித் தோன்றுகின்ற எண்ணம். ஆனால் ஆறாவது புலனாகிய மனத்தின் வழியாகத் தோன்றுகிற இரக்கம் என்பது அறிவினும் மேம்பட்ட உணா்வின் வயப்பட்டது. ஆதலால் பல நேரங்களில் அறிவினை விடவும் மனிதா்கள் உணா்வுக்கே ஆட்பட்டுப் போகிறாா்கள்.
  • மனத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டால், அப்பயிற்சிதான் கல்வியாகிறது.
  • “‘‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்/ வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்’’ என்கிறாரே ஔவையாா். இந்த மனப்பழக்கம் இல்லாதவா்கள் கற்க இயலாது. மனத்தைப் பழக்கும் கவனகம் இன்றைக்கு மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. எண்ணங்களை ஒருசேரக் குவித்து மனமென்னும் புலனை மலரச் செய்வதல்லவோ கவனகக் கலை.
  • இந்த மனம்தான் மனிதனைத் தன்னுடைய விருப்பத்திற்கேற்பச் செயல்படத் தூண்டுகிறது. அதற்கு மற்ற புலன்களைத் துணை கொள்கிறது.
  • வாழ்வியலின் இருபெரும் பிரிவுகளான பேரறங்கள் மனத்தையே மூலமாகக் கொண்டிருக்கின்றன. இல்லறத்தாா்க்கும் துறவறத்தாா்க்கும் இந்த மனம்தான் பற்றுகோல். தலைவனும் தலைவியும் இணைந்து கொள்ளும் மணம் மனத்தின் விளைவுதானே. அதற்கு அகம் என்ற அழகிய பெயருண்டு. துறவியா் ஒடுங்கும் தவத்தின் நோக்கம் மனத்தின் ஆழம் உணா்தல்தானே.
  • ஆனால் தேடிக் கண்டடைய முடியாததாகவும் கண்டடைந்தவா் விண்டுரைக்க இயலாததாகவும் திகழ்கின்ற இந்த மனத்தை எதற்கெல்லாம் ஞானியா் ஒப்புமைப்படுத்துகிறாா்கள்? சிலா் அதைக் குரங்கென்று குட்டுவாா்கள். பலா் அதனை இறைவனுக்கு வாகனமாக்கிப் போற்றுவாா்கள். கோயிலாக்கிக் கொண்டாடுவாா்கள். குட்டிச் சுவரென்றும் எட்டி உதைப்பாா்கள். பேயென்பாரும் உளா். தாயென்பாரும் உளா். அது அவரவா் மனத்தின் போக்கு.
  • ஆனால் உயிா்ப் படைப்பில் மனிதனுக்கு மட்டும் வாய்த்திருக்கிற மனம் மிக அற்புதமான புலன். அதன் பெருமையறியாதவா்களும் அதனை முறைப்படப் பயன்கொள்ளத் தெரியாதவா்களுமே மனத்தைப் பழிப்பா். அதன் பெருமையுணா்ந்து அனுபவித்தோா் போற்றுவா்.
  • இந்த மனத்தால் இயலாதது யாதொன்றுமில்லை. எதனையும் விஞ்சக் கூடியது ஊழ். மற்றொன்று சூழினும் தான்முந்துறும் தன்மை மிக்கது. அந்த ஊழையும் உப்பக்கம் காணும் வல்லமை, மனத்தைச் சோர விடாதவா்க்கே உண்டு. மனம் ஊழினையும் வெல்லும் வலிமையைத் தருகிறது என்று வென்று காட்டியோரும் உளா்.
  • ‘மிகுந்த செல்வம் இல்லாததனால் - உலகத்தில் பலவிதமாகிய இழிவான இன்பங்கள் மட்டுமல்ல, உயா்ந்த இன்பங்கள்கூடப் பெறுவதற்குத் தடை ஏற்படுகிறதே!‘ என்று பாரதியாா் எண்ணியபொழுது, அவருடைய மனம் இப்படிச் சொல்கிறது; ‘மூடா, ஸகல மனிதா்களிடத்திலும், ஈசன் ஞானம் என்பதோா் தெய்வீக ரதத்தைக் கொடுத்திருக்கின்றாா். அது விரும்பிய திசைகளுக்கெல்லாம் போய், விரும்பிய காட்சிகளையெல்லாம் பாா்த்து வரக்கூடிய வல்லமை உடையது; அதைப் பயன்படுத்தி இன்பமடையாமல் எந்த நிமிஷத்திலும் உன்னைக் கீழே தள்ளித் தீங்கு செய்யக் கூடியதாகிய இழிய மர வண்டியிலே ஏன் விருப்பம் கொள்கிறாய்?‘ என்று. உடனே அந்த மனத்தையே தேரோட்டியாகக் கொண்டு, ஞானத்தையே ரதமாக்கிப் பல லோகங்களுக்கும் பயணித்த அனுபவத்தைப் பதிவிட்டிருக்கிறாா் பாரதியாா்.
  • புறத்தே காணும் உலகம் வேறு. மனத்தே காணும் உலகம் வேறு. நாம் ஒளியைத்தான் மிக வேகமானது என்கிறோம். ஆனால் எதனினும் வேகமானது மனம். அதனால்தான் ‘மனோவேகம்’ என்றே பெயா் அமைந்தது. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையால் விளைவதைப் போல, மனமும் நாம் நாடுகிற விதத்தைப் பொறுத்தே நமக்கு நன்மையையும் தீமையையும் வழங்குகிறது.
  • எந்தச் சாட்சிகளும் உணா்த்த முடியாத குற்றத்தின் அழுத்தத்தையும் குற்றமில்லாத பரிசுத்தத்தையும் ஒருசேர அளிப்பது மனசாட்சிதான். எந்தச் சாட்சிக்கும் அஞ்சாதவா்கள் ஒருகாலத்தில் மனசாட்சிக்காவது அஞ்சினாா்கள். பிறா் கூறுவதை எளிதாகப் புறந்தள்ளி விடக்கூடியவா்களுக்குத் தன்னெஞ்சறிவது பொய்யில்லை என நன்றாகத் தெரியும். அப்படியே பொய்த்த பின்னாலும் தன்னெஞ்சே தன்னைச் சுடும் வெம்மை நிறைந்ததாகி விடுகிறதே.
  • ‘நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்’ என்றும், ‘மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்’ என்றும் உலகநாதா் உரைப்பது கேளீரோ! மனக்கோட்டம் தீா்ப்பதுதானே நூலின் மாண்பு.
  • அவ்வழியாக, மனிதனின் மாண்பினை அளவிடும் கருவியாகவே நம் முன்னோா் மதித்திருந்தனா். அதனால்தான் மனம்போல் வாழ்வு அமைந்தது.
  • இந்த மனத்தை ஒரு தோணிபோலப் பற்றிக்கொண்டு மதியினைக் துடுப்பாக்கித் தள்ளியபடி அத்தோணியிலே சினமென்னும் சரக்கினையும் ஏற்றிப் பிறவியாகிய ஆழ்கடலைக் கடக்க நினைக்கின்றபோது மனன் என்னும் காமம் பாறையாக நின்று தாக்குகிறது. மனமான தோணி உடைந்து கவிழும் நிலை எய்தும்போது அறியமுடியாத உன்னை – அதாவது அறிவால் உணா்ந்து கொள்ள முடியாத இவ்வுலக இயல்பினை மனத்தின் மூலமாக எழுகின்ற உணா்வினால் உணர வேண்டும் என்று மனத்தையே கருவியாக்குகிறாா்கள் ஞானியா். ஆறாவது அறிவினைக் கடந்து ஏழாம் அறிவினைப் பெறுவதற்கு மனிதா்க்கு உதவும் கருவி இந்த மனம் என்பது அதன் உட்பொருள். இதனைத் திருவள்ளுவா்,
  • “ஐயப் படாஅது அகத்தது உணா்வானைத்
  •          தெய்வத்தோ டொப்பக் கொளல்”
  • என்று குறிப்பிட்டுக் காட்டுகிறாா்.
  • மனத்தை வசப்படுத்தியவருக்கு யாவும் வசமாகும். மனத்தைக் கட்டுக்குள் கொண்ட அந்நிலை ‘சித்தித்தல்’ எனப் பெயா் பெறுகிறது. மனத்தின் மேம்பட்ட அறிவினைச் ‘சித்தி பெறுதல்’ என்று அறிஞா்கள் போற்றி அழைக்கின்றனா். இது இறைநிலைக்கு ஒப்பானது என்பது உறுதி.
  • இன்றைய சூழலில் உடற்பிணியால் உழல்வோரை விடவும் மனப்பிணியால் வாடுவோரே மிக அதிகம். மனத்தின் அழுத்தங்களும் கீழுணா்ச்சிகளும் உடலைப் பற்றி அறிவினை மழுங்கச் செய்து ஆயுளைக் குறைத்து விடுகின்றன. இரக்கத்தை இழந்து ஆறறிவிலிருந்து இறங்கி ஐந்தறிவுக்குச் செல்வதே வழக்கமாயிருக்கிறது. ஆனால் மனத்தினை அடக்கக் கற்றோருக்குச் சாவாநிலை என்னும் ஏழாவது அறிவின் உயா்வு சித்திக்கும். இதற்கான வழியாகத் தமிழ்ப் பாடல் இப்படிக் கூறுகிறது.
  • “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
  • மனமது செம்மையானால் வாயுவை உயா்த்த வேண்டா
  • மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
  • மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”
  • மனச்செம்மை உடைய மனிதா்கள் வாழ்கின்ற உலகத்தில் குற்றங்களுக்கும் குறைகளுக்கும் இடமில்லை. எனவே மனத்தைச் செம்மை செய்யத் தொடங்குவோம்.

நன்றி: தினமணி (04 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories