- இன்று (செப்.27) உலக சுற்றுலா தினம். உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் 1980-ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 1979-இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
- சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்த நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா
- உண்மையில் சுற்றுலா செல்வதென்பது கடும் வெயிலில் ஜில்லென ஜிகர்தண்டாவை குடித்த ஒரு குளிர்ச்சியை ஏற்படுத்தித்தர வல்லது.
- நாம் எல்லோரும் பூமிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள்தான். இனி எத்தனை பிறவி எடுத்து இந்தப் பூமியில் பிறப்போம் என எவருக்கும் தெரியாது. பயணம் முடிந்து ஒரு நாள் விண்ணில் பறக்கப் போகிறோம்.
- ஆக, பயணம் என்பது நமக்கு இயல்பாய் பொருந்திப் போகிறது. பெண்ணின் மனஆழத்தைப் போல தனக்குள் எண்ணற்ற அதிசயங்களை நம் பூமி பொதிந்து வைத்துள்ளது. அகண்டு விரிந்துள்ள இந்தப் பூமியின் ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் செல்வதே ஒரு சாதனைதான்.
- பொதுவாக சுற்றுலா செல்ல நாம் எப்படிப்பட்ட இடங்களைத் தேர்வு செய்கிறோம்? இயற்கை அழகுமிக்க இடங்கள், சிறந்த கட்டடங்கள், பண்பாட்டுச் சிறப்பு மிக்க இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், காட்சியகங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், வியக்க வைக்கும் மகிழ்விக்கும் இடங்கள் என அது ஒரு பெரிய வரிசை.
- தன் ஊரை விட்டு அடுத்த ஊருக்குக்கூட நகராதவர்களை "குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டிட்டு இருப்பான்' என இன்றும் கிராமத்தில் ஒரு சொலவடை சொல்வார்கள். எவ்வளவோ பணம், வசதி வாய்ப்புகள் இருந்தும் பலர் சுற்றுலா செல்வதே இல்லை.
- மனிதன் புதுப்புது இடம் தேடிச் செல்லும்போது வேறு வேறு மக்களைச் சந்திக்கிறான். அவர்தம் கலாசாரம், உணவு, உடை, கலை எனப் பல்வேறு தகவல்களை அறிகிறான்.
- பத்து புத்தகங்களை வாசித்துப் பெறும் அறிவை ஒரு நாள் பயணம் சில நேரங்களில் நமக்கு உணர்த்திவிடும்.
அனைவரிடமும் ஒற்றுமை
- வெவ்வேறு விதமான மலைகள், கடல்களைக் காணும்போது மனம் லேசாகும். வானில் சிறகடித்துப் பறக்கும் மகோன்னத நிலையை மனதுக்குள் நிறைக்கும். பயணம் நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.
- அத்துடன் சக மனிதர்களை நேசிக்கும் பண்பை ஒருவருக்குள் பயணம் விதைக்கும். அனைவரிடமும் ஒற்றுமை பேண வேண்டும் என்ற உணர்வு மிகும்.
- சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்று வந்தால் அங்குள்ள மக்களின் கலாசாரத்தைப் புரிந்து நட்புகொள்ளத்தான் தோன்றுமேயன்றி பகைமை பாராட்ட மனம் வராது. ஏனெனில், அவர்களின் உணர்வுகளுக்கும் நாம் மதிப்பளிக்கத் தொடங்கி விடுவோம். நம்முடைய சகோதர குணம் வெளிப்படும். நேசிப்பு சிறகை விரிக்கும்.
- உலகிலேயே மிகவும் பழைய பயணச் செய்திகள் இந்துமத நூல்களில்தான் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உத்தரப் பிரதேசத்திலிருந்து இலங்கை வரை ராமன் நடந்து சென்றதை நாம் அறிவோம்.
- ராமனுக்குப் பிறகு மகாபாரதப் போரில் நடுநிலை வகித்த பலராமன் பாரத யாத்திரை சென்றதை மகாபாரதம் விவரிக்கிறது. தமிழில் சிலப்பதிகாரத்தில் தீர்த்த யாத்திரை பற்றி மிகத் தெளிவான செய்திகள் இருக்கின்றன.
பயணம்
- அடர்ந்த காடுகளையும் உயர்ந்த மலைகளையும் தாண்டி இமயம் வரை ஆதிசங்கரர் சென்று 5 இடங்களில் மடங்கள் நிறுவியதையும் படித்திருக்கிறோம்.
- ஸ்ரீ ராமானுஜர், குருநானக் போன்ற மகான்கள் பாரதம் முழுதும் பயணம் செய்து புனிதத் தலங்களை தரிசித்தனர்.
- அசோகரோ கப்பல் மூலம் தன் மகனையும் மகளையும் இலங்கை முதலிய இடங்களுக்கு அனுப்பி தர்மப் பிரசாரம் செய்தார்.
- ஒளவையார், சுந்தரமூர்த்தி சுவாமிகள், காரைக்கால் அம்மையார் முதலானோர் இமயம் வரை சென்றனர். இலங்கை சென்ற அனுமனின் பயணத்தை சுந்தர காண்டம் விளக்குகிறது.
- அரிச்சந்திரனின் மகன் ரோஹிதன் காட்டுக்குள் ஆறு ஆண்டுகள் இருந்து வெளிவந்தபோது பிராமணர் வடிவில் வந்த இந்திரன் அவரிடம் "பயணம் செய்து கொண்டே இரு, அதனால் பல நன்மைகள் விளையும்' என்கிறான். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
- தொன்மைக் காலத்தில் மன்னர்கள் போர்ச் சூழல் குறித்தே அதிகம் இடம்பெயர்ந்துள்ளனர். பயணம் என்பது கடுமையான ஒன்றாக இருந்ததால் கடற்படை, மாலுமிகள், ஒற்றர்களைத் தாண்டி சாமானிய மக்கள் ஊர் விட்டு ஊர் செல்வதே ஒரு பராக்கிரமச் செயலாகத்தான் அப்போது இருந்தது.
- தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டால் மனிதன் மனிதனாக இருப்பான். ஓர் இடத்தை விட்டு வேறு வேறு இடத்துக்கு மனிதன் சென்றதால்தான் நமக்கு வேறு வேறு நாகரிகங்கள் கிடைத்தன.
- செல்லும் இடங்களிலெல்லாம் கடனே என்று செல்லாமல் நாம் படித்த, பார்த்த உணர்வோடு கலந்து போன செய்திகளை நம் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்தினால் நம் குழந்தைகளுக்கு ஒரு மேம்பட்ட வாழ்வியலை உணர்த்த முடியும்.
- என் நண்பர் ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரை குளத்துக்குச் சென்றபோது தன் மகளின் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நக்கீரரின் வரலாற்றைச் சுட்டிக்காட்டி "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' எனச் சொல்லி வீழ்ந்து கிடந்த நக்கீரரை சிவபெருமான் அருளி எழச் செய்த இடம் என்ற புராண வரலாற்றையும் வாஞ்சையுடன் மகளின் மனதுக்குள் போட்டு வைத்ததாகச் சொன்னார்.
பல்வேறு இடங்கள்
- மாமல்லபுரம் செல்லும்போது பல்லவர் கால சிற்பங்கள் பற்றிய அறிவை இணையம், புத்தகம் வாயிலாகத் தெரிந்து கொண்டு பிறகு பார்த்தால் அதன் முக்கியத்துவத்தையும் தனித்திறனையும் முழுமையாக மனதிலேற்றிக் கொண்டு வரமுடியும்.
- கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலையைப் பார்த்து விட்டு வந்த பிறகு படிக்கும் உங்கள் பிள்ளையின் திருக்குறளில் அதீதமான ஆழம் இருக்கும். அவர்களின் மனநிலையில் மாற்றம் நிலவும். கடனே என்று திருக்குறளை படிக்காமல் ஒரு மாபெரும் மனிதரின் பெரும் புதையல் என்ற கண்ணோட்டத்துடன் வாசிப்பர்.
- இதற்கு பெற்றோர் பெரிய படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனுபவ அறிவு வாய்க்கப் பெற்றவர்களாக இருந்தாலே போதும். போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகலாம்.
- இப்படி சுற்றுலா மூலம் அவர்களின் அறிவை விசாலமாக்க முடியும். எந்த இடத்திற்குச் சென்றாலுமே அந்த இடம் பற்றிய வரலாற்றுச் செய்தியை அறிந்து கொண்டு செல்வது மனதின் வறட்சியை நீக்கி பசுமைசூழ் நெருக்கத்தை ஏற்படுத்தும்.
இடங்களின் முக்கியத்துவம்
- இணையத்தில் இருந்து நம்மிடம் வந்து விழும் தகவல்களின் வாயிலாக அமெரிக்காவில் இப்படியாம், ஆப்பிரிக்காவில் அப்படியாம் என வாய்கிழிய பரிமாறிக் கொள்ளும் நாம், நம் அருகில் இருக்கும் சிறப்பான இடங்களின் முக்கியத்துவம் தெரியாமல் உழல்கிறோம்.
- என்னுடைய வகுப்பறையில் ஒரு சமயம், "நாம் புழங்கும் இந்த இடத்தில்தான் ஆரணி கோட்டை இருந்தது. ரத்தமும் சதையுமாக ராஜா ராணிக்கள் உலவிய இடத்தில்தான் நாம் இன்று நடமாடிக் கொண்டிருக்கிறோம்' என்று சொன்னபோது அத்தனை மாணவிகளும் "உண்மையா மிஸ்?” என்று சிலிர்த்துப் போய் கேட்டார்கள்.
- இதோ வகுப்பறையின் ஜன்னல்களுக்கு அடுத்துதான் அகழி இருந்தது. பள்ளிக்கு தெற்கு பகுதியில் தான் குதிரை லாயம் இருந்தது எனச் சில செய்திகளை அடுக்கியதும் அது குறித்து அறிய பெரும் ஆர்வமானார்கள்.
- அந்த ஆர்வத்தை இது போன்று சுற்றுலா செல்வது மூலம் நாம் பெருமளவில் அவர்களிடம் உருவாக்க முடியும். ஒரே கல்லில் பல மாங்காய்களை சுலபமாகப் பெறக்கூடிய சாத்தியங்கள் சுற்றுலாவில் அதிகம் உள்ளது.
- வாழ்க்கை நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் தரும் மனஅழுத்தங்களை போக்கிக் கொள்ள சுற்றுலா செல்லுதல் அருமருந்து. மாறி வரும் நவீன வாழ்க்கையில் முக நூல், சுட்டுரை, கட்-செவி அஞ்சல் போன்ற சமூக ஊடகங்கள் ஒரு குடும்பத்துக்குள்ளேயே சக மனிதர்களை தனித்தனி தீவாக்கியுள்ளது.
நன்றி: தினமணி (27-09-2019)