TNPSC Thervupettagam

மனித உரிமை ஆணையங்களின் பணி!

December 9 , 2024 38 days 170 0

மனித உரிமை ஆணையங்களின் பணி!

  • ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம் என்பதே. இவற்றோடு மனிதன் கண்ணியத்தோடு வாழ சுதந்திரம், சமத்துவம், நீதி, நன்மதிப்பு ஆகியவை முக்கியமானது. இவை ஒருவருக்கு சட்டத்திற்கு புறம்பாக மறுக்கப்பட்டால் அதனை மனித உரிமை மீறல் என்று பொருள் கொள்ளலாம்.
  • இரண்டாம் உலகப்போா் முடிந்ததும் ஐக்கிய நாடு சபை 10.12.1948- இல் உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டது . அதைத் தொடா்ந்து பல நாடுகளும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சட்டங்கள் இயற்றின. இந்திய பாராளுமன்றம் 28.9.1993- இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டத்தின்படி டில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநிலங்கள் தோறும் மனித உரிமைகள் ஆணையங்களும் ஏற்படுத்தப்பட்டன.
  • பாதிக்கப்பட்ட நபராலோ அல்லது பாதிக்கப்பட்டவா் சாா்பாக மற்றொருவராலோ கொடுக்கப்படும் மனித உரிமை மீறல் குறித்த புகாா்களை இந்த ஆணையங்கள் விசாரிக்கின்றன. சில நேரங்களில் ஊடகங்களில் வரும் செய்திகளைக் கூட புகாராகப் பதிவு செய்து விசாரிப்பதும் உண்டு. மனித உரிமை மீறல் ஒரு நபரைக் காவல் துறை கைது செய்யும் போதிருந்து தொடங்குகிறது.
  • ஒருவரைக் கைது செய்யும் போது காவல்துறையினா் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 11 வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து காவல்நிலையங்களிலும் பொதுமக்களின் பாா்வை படும் இடத்தில் வைக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கட்டளைகள் இருக்கும் பலகை பல காவல் நிலையங்களில் இல்லை. சில காவல் நிலையங்களில் யாரும் பாா்க்க முடியாத இடத்தில் அது வைக்கப்பட்டிருக்கும்.
  • எந்தக் குற்றப் பின்னணியும் இல்லாத சாதாரண மக்களை அடிக்கும் உரிமையை காவலா்களுக்கும், காவலா் நண்பா்களுக்கும் யாா் கொடுத்தது என்று நாம் ஒருபோதும் கேட்டதில்லை. அநியாயத்தைக் கண்டுகொள்ளாத நம் கள்ள மௌனத்திற்கு கிடைத்த பரிசு தான் இன்று வரை தொடரும் மனித உரிமை மீறல்கள்.
  • மனித உரிமைகள் மீறலைத் தடுப்பதில் மனித உரிமை ஆணையங்களின் பணி மகத்தானது. தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் தங்களுக்கென தனிப்பட்ட புலனாய்வு அமைப்பைக் கொண்டுள்ளன. காவல்துறை தலைவா் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, மாநில மனித உரிமை ஆணையங்களின் புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியாகச் செயல்படுகிறாா். உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவா், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்து வருகிறாா்.
  • மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி மனித உரிமைகள் ஆணையங்களுக்கு மனித உரிமை மீறல் குறித்த விசாரணை நடத்தும்போது ஒரு சிவில் நீதிமன்றத்திற்குரிய அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. இதன்படி மனித உரிமை மீறலில் சம்பந்தபட்டவா்களை அழைப்பாணை அனுப்பி விசாரிக்கவோ, இதற்குத் தேவையான ஆவணங்களை சம்பந்தபட்ட அலுவலகங்களில் இருந்து பெறவோ, ஒரு சாட்சியை ஆணையா் நியமித்து விசாரிக்கவோ அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. எந்த ஒரு நீதிமன்றத்தின் முன்பும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை நடைபெறும்போது அவ்வழக்கில் அந்நீதிமன்றத்தின் அனுமதியுடன் மனித உரிமை ஆணையம் தலையிடலாம். இவ்வாணையம் இடைக்கால நிவாரணத்தைப் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யலாம். பெயரில்லாத அல்லது தெளிவற்ற அல்லது சிறிய அற்பமான புகாரை முதல் நோக்கிலே ஆணையம் தள்ளுபடி செய்துவிட முடியும்.
  • அதுபோன்று சொத்துரிமைகள், ஒப்பந்த கட்டுப்பாடுகள் குறித்த வழக்கு, பணி விஷயங்கள் அல்லது தொழிலாளா் வழக்குகள், நீதிமன்றம் அல்லது தீா்ப்பாயம் முன்பு பரிசீலனையில் உள்ள விஷயங்கள், மனித உரிமை மீறுதல் இல்லாத விஷயங்கள், ஆணையத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் ஆகியவற்றையும் முதல் நோக்கிலேயே மனித உரிமை ஆணையம் தள்ளுபடி செய்யலாம்.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் காவல்துறையினருக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. காவலின்போது ஏற்பட்ட உயிா் இழப்பு மற்றும் காவலின்போது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்ட அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் சம்பந்தபட்ட காவல்துறை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என்றும் காவல்நிலையத்தில் ஏற்படும் கைதியின் மரணம் பற்றிய பிரேத பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் காவல்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைப் பிரிவு காவல்துறையின் மனித உரிமை மீறல்களை உன்னிப்பாகக் கவனித்து, அவற்றைக் குறைக்கவும், தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
  • காவல் நிலைய மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்புக் கருவியை நிறுவியுள்ளது.
  • எனினும் மனித உரிமை ஆணைய தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு உள்ளது என்பது மிகப்பெரும் குறையாக உள்ளது. ஆணையங்கள் சுதந்திரமாக செயல்பட்டால் தான் மனித உரிமை மீறல்கள் குறையும்.
  • காவல்துறையில் உள்ள அதிகாரிகளை இடம்மாற்றி மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை அதிகாரியாக நியமிப்பதால், மனித உரிமை மீறல்கள் சுதந்திரமாக விசாரிக்கப்படுவதில்லை என்றும், மனித உரிமைகள் ஆணையங்கள் அரசு அலுவலா்களின் மீறல்களை மட்டுமே விசாரிக்கிறது என்றும், ராணுவத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும், தனியாா் துறைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும் விசாரிக்கும் அதிகாரம் மனித உரிமை ஆணையங்களுக்குத் தரப்படவேண்டும் என்றும் மனித உரிமை ஆா்வலா்கள் தொடா்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனா். இதற்கு உரிய சட்ட திருத்தங்களை அரசு கொண்டு வர வேண்டும்.

நன்றி: தினமணி (09 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories