TNPSC Thervupettagam

மனிதனால் ஏன் பறக்க முடியவில்லை?

December 18 , 2024 31 days 78 0

மனிதனால் ஏன் பறக்க முடியவில்லை?

  • இறக்கையின் நீளம், அகலத்தைப் போல் எத்தனை மடங்கு இருக்கிறது என்பதைப் ‘புலன் விகிதம்’ என்கிறோம். எவ்வளவு குறைந்த ஆற்றலில் பறவை பறக்க முடியும் என்பதைப் புலன் விகிதம் உணர்த்துகிறது. அது போன்று ஒரு பறவையால் பறக்க முடியுமா, பறப்பதற்கு எவ்வளவு ஆற்றல் தேவை என்பதை அதன் ‘தூக்கும் திறன்’ (Wing Loading) உணர்த்துகிறது. ‘தூக்கும் திறன்’ என்பது பறவையின் எடைக்கும் அதன் இறக்கையின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம். நீள, அகலங்களைப் பொறுத்து இறக்கையின் பரப்பளவு மாறுபடும்.
  • பறவையின் எடையுடன் ஒப்பிடும்போது, அதன் இறக்கையின் பரப்பளவு அதிகமாக இருந்தால், தூக்கும் திறன் அதிகமாக இருக்கும். இந்தப் பறவைகளால் சிரமம் இல்லாமல் நீண்ட தூரமும் பறக்க இயலும். 7-8 கிலோ எடை இருக்கும் அல்பட்ராஸ் 7 சதுர அடி இறக்கை பரப்பளவைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில், அரை கிலோ எடை இருக்கும் காகம் ஒன்றரை சதுர அடி இறக்கையின் பரப்பளவைக் கொண்டுள்ளது. பெரும்பாலான பறவைகள் இதற்கு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.
  • ஓர் இரண்டு சக்கர வாகனத்தில் அதிகமான பாரம் ஏற்றும்போது, அதன் இயந்திரம் எவ்வளவு சிரமப்படுகிறது என்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒருவர் மட்டுமே அமர்ந்து கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தேவையான ஆற்றலுடன் வேகமாகப் பயணிக்கும். மேடான சாலையில் எளிதாக ஏறிவிடும்.
  • அதேநேரத்தில் இருவர் அமர்ந்துகொண்டு, சில மூட்டைகளையும் ஏற்றினால் அதன் முழுத் திறனைக் கொடுத்தாலும் வேகம் குறைந்து மெதுவாகப் பயணிக்கும். மேடான சாலைகளில் ஏறுவதற்குச் சிரமப்படும். இது போன்று பறவையின் எடைக்குத் தகுந்த இறக்கை இல்லை என்றால், அதைத் தூக்கிக்கொண்டு பறவையால் பறக்க முடிவது இல்லை.
  • பறவையின் எடை குறைவாகவும் இறக்கையின் பரப்பளவு அதிகமாகவும் இருக்கும்போது குறைந்த ஆற்றலைச் செலவிட்டு, இடைநில்லாமல் பறவைகளால் பறக்க முடியும். அந்த வகைப் பறவையால் மிதந்து கொண்டு பறக்கவும் அதிக உயரத்துக்குச் செல்லவும் முடியும். காற்றைப் பயன்படுத்தி மேல்நோக்கு விசையை உருவாக்கி, அதிக தூரம் பயணிக்கவும் முடியும்.
  • மயில், கோழி ஆகியவை சில அடி தூரம் பறப்பதற்கு அதன் தூக்கும் திறன் குறைவாக இருப்பது முக்கியக் காரணம். தனது இறக்கையைவிட அதிக உடல் எடையைக் கொண்டுள்ள கிவி பறவையால் பறக்கவே முடியாது. நாட்டுக் கோழிகள் சில அடி தூரமாவது பறக்கின்றன. ஆனால், இறைச்சிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் அதிக எடையுடன் வளர்வதால் அவற்றால் பறக்க முடிவதில்லை.
  • நடுத்தரத் தூக்கும் திறன் கொண்டுள்ள பறவைகள் அதிக ஆற்றலைப் பயன்படுத்தி, பறக்க வேண்டி இருக்கும். அதனால் எளிதில் களைப்படைந்துவிடும். அவற்றுக்குத் தொலைதூரம் செல்வதற்குச் சிரமமாக இருக்கும். இந்த வகைப் பறவைகளில் உடல் எடையுடன் ஒப்பிடும்போது இறக்கைகள் சிறியதாக இருக்கும்.
  • பறவைகளின் தூக்கும் திறன் அதன் பரிணாமத்தின் ஒரு பகுதி. அது வாழும் இடத்திற்கு ஏற்ப மாறுபடும். நடுத்தரத் தூக்கும் திறன் உள்ள பறவைகள் வேகமாகப் பறக்க ஆரம்பிக்கவும், தேவையான இடங்களில் திரும்புவதற்கும் சிறிய இறக்கைகள் உதவும் .
  • வேகமாகப் பயணித்து, தேவையானபோது பாதையை மாற்றி, இரையைப் பிடிக்கவும் அடர்ந்த காடுகளில் பயணிக்கும்போது மரங்களில் மோதிக் கொள்ளாமல் பறக்கவும் இந்தச் சிறிய இறக்கை வடிவமைப்பு உதவுகிறது. நவீன விமானங்கள் வடிவமைப்பிலும் தூக்கும் திறன் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிறிய விமானங்களின் தூக்கும் திறன் பறவையை ஒத்ததுபோல் இருக்கும். ஆனால், எடை அதிகமான விமானங்கள் அதிகத் தூக்கும் திறனைக் கொண்டிருக்கும்.
  • 400 டன் எடையுள்ள போயிங் 747 விமானம் 5,000 சதுர அடி பரப்பளவு உள்ள இறக்கைகளைக் கொண்டிருக்கிறது. இது அதிகத் தூக்கும் திறனைக் கொண்டுள்ள கடற்பறவையான அல்பட்ராஸை விடப் பல மடங்கு அதிகம். பெரிய விமானங்கள் அதிகத் திறன் வாய்ந்த இயந்திரங்கள், ஓடுதளத்தில் 250 கி.மீ. வேகம் வரை ஓடி, தேவையான மேல்நோக்கு விசையை உருவாக்கிக்கொண்டு பறக்க வைக்கப்படுகின்றன.
  • மனிதனுக்கு இறக்கை வைத்தால் பறக்க முடியுமா? 60 கிலோ எடை இருக்கும் மனிதன் பறக்க வேண்டுமானால் குறைந்தது 12 சதுர அடி அளவுள்ள இறக்கை தேவைப்படும். 1 அடி அகலமும் 6 அடி நீளமும் கொண்ட இறக்கை இரண்டு பக்கங்களிலும் தேவைப்படும்.
  • இவ்வளவு பெரிய இறக்கையை மேலும் கீழும் நகர்த்தி அழுத்தத்தை உருவாக்க, வலிமையான எலும்புகள் தேவைப்படும். நம்மிடம் இருக்கும் கைகளைக் கொண்டு அதைச் செய்ய இயலாது. அதனால்தான் இறக்கை வைத்தாலும் மனிதனால் பறக்க இயலாது. விமானத்தைக் கண்டறிவதற்கு முன்பு மலை மீது ஏறி, பறக்க முயற்சி செய்த மனிதர்கள் தோல்வி அடைந்தது இதனால்தான்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories