TNPSC Thervupettagam

மனிதனின் உண்மையான சுதந்திரம் எது?

February 27 , 2025 5 hrs 0 min 15 0

மனிதனின் உண்மையான சுதந்திரம் எது?

  • ஒரு மனிதர் முழு விழிப்புணர்வுடன் வாழ்ந்தால், எவ்வித கட்டமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் மனதளவில் சுதந்திரமாக சிந்திக்க முடியும். புற உலகிலும் சுதந்திரமாக செயல்பட முடியும். இதுவே மனிதனின் உண்மையான சுதந்திரம்.
  • மனித வாழ்க்கை ஒரு புதிரான நாவல் போன்றது. நாம் எப்போது, எங்கே பிறக்க வேண்டும் என்று தேர்வு செய்ய முடியாது. எப்போது, எவ்வாறு மரணிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க முடியாது. இவை இரண்டும் நம்முடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. இந்த இரண்டு எல்லைகளுக்கிடையே உள்ள வாழ்க்கையை மட்டும் நம் விருப்பம் போல் சுதந்திரமாக வாழ முடியும் என்று நம்புகிறோம்.
  • சுதந்திரம், விதி, விருப்பம் - இந்த இம் மூன்றின் இடையே மனிதன் ஓர் இடையறாத தேடலில் தொலைந்து போகிறான். ஒருபுறம், மனிதன் தனது விருப்பத்தால் தன் வாழ்க்கையை உருவாக்கும் திறன் கொண்டவன் என்று சிலர் நம்புகிறார்கள். அவர்களுக்கான வாழ்க்கை, ஓர் எழுதப்படாத வெள்ளைக் காகிதம் போல—எழுதுபவர் அவர்களே. மறுபுறம், எல்லா நிகழ்வுகளும் செயல் விளைவுகளின் தொடர்ச்சியாக மட்டுமே நடைபெறுகின்றன. நாம் விதியின் எழுத்துகளை மட்டுமே வாசிப்பவர்கள் என சிலர் வாதிடுகின்றனர்.
  • இந்த இரண்டு கருத்துகளும் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் கேள்வியை எழுப்புகின்றன - நாம் நம்முடிவுகளின் கருவியா அல்லது விதியின் விளையாட்டுப் பொம்மையா? நம் முடைய வழியை நாமே தேடுகிறோமா, அல்லது அது எங்கோ ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா ? ஒரு மனிதனின் துன்பத்துக்கு காரணம் கர்மவினை என்றால், அவன் முதல் பிறவியில், எந்த முன் கர்ம வினையும் இல்லாத நிலையில், அவன் அனுபவிக்கும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் பொறுப்பேற்பது யார்? இறைவன் கருணையின் வடிவமேஎன்றால், நம்முடைய இன்ப, துன்பங்களுக்கு காரணம் நாமாகத்தான் இருக்க முடியும்.
  • கர்மவினை (செயல் மற்றும் விளைவு) இருப்பதாக நம்பினால், நம் வாழ்க்கையை நாமே வடிவமைக்கிறோம் என்றாகிறது. நம் வாழ்க்கையை நாமே வடி வமைக்க நிச்சயமாக நமக்கு சுதந்திரம் இருந்தாக வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. செயல் மற்றும் விளைவுகளின் தொடர் நிகழ்வே மனித வாழ்க்கை.
  • நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனித்தால், அதன் பின்னணியில் நம் மனதின் நுட்பமான இயக்கம் புரியத் தொடங்கும். முதலில் ஓர் எண்ணம் பிறக்கிறது. அந்த எண்ணம் விருப்பமாக உருமாறுகிறது. பின்னர், அதனை செயலாக்கும் நோக்கில் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. முடிவின் உந்துசக்தியாக, அது ஒரு செயலாக வடிவெடுக்கிறது.
  • நமது எண்ணங்கள் என்பது நமது சிறு வயதிலிருந்தே நமக்கு பெற்றோராலும், இந்த சமுதாயத்தாலும் கட்டமைக்கப்பட்ட (conditioning) ஒன்றாகும். நமது அனுபவங்கள் நம் எண்ணங்களை வரையறுக்கின்றன. மேலும், முற்பிறவி கர்ம வாசனையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் நமது விருப்பங்களால் கட்டுப்படுத்தப்படுகிறோம். இவை நமது ஆழ்மனதில் பதிந்துள்ள கட்டுப்பாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
  • சுய விருப்பம் (free will) என்பது நம் ஈகோவின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். "நான்" என்கிற இந்த உணர்வு நம்மை மற்றவர்களிடம் இருந்து பிரித்து, நம்முடைய விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தூண்டுகிறது.
  • மஹாபாரதப் போருக்கு முன் கிருஷ்ண பரமாத்மா துரியோதனனிடம் சென்று போர் நிகழ்வதைத் தவிர்க்குமாறு அறிவுரை கூறும்போது அதற்கு துரியோதனன் போரால் ஏற்படும் அழிவுபற்றி எனக்கு நன்றாகத் தெரியும், இருந்தாலும் என் மனம் போரிடுவதிலேயே விருப்பம் கொள்கிறது. இதை என்னால் தவிர்க்க முடியவில்லை என்று கூறுகிறான்.
  • இது மனிதன் எவ்விதம் கர்ம வாசனை யால் கட்டுண்டு இருக்கிறான் என்பதை நிரூபிக்கிறது. ஆனால், நம்மால் சுதந்திரமாக சிந்தித்து, செயல்பட முடியும். நாம் நமது எண்ணங்களையும், உணர்வுகளையும் முழு விழிப்புணர்வுடன் கவனித்து செயலாற்றும்போது, நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒரு சாட்சி பாவனையில், ஒரு பார்வையாளன் போல் செயல்படும்போது நமது மன கட்டமைப்பில் (conditioning) இருந்தும், விருப்பு, வெறுப்பு மற்றும் கர்ம வாசனைகளில் இருந்தும் விடுபட்டு விடுவோம்.
  • உண்மையான சுதந்திரம் என்பது, நம்மனம் எந்த வித முன் அனுபவங்களுக்கும், முன் தீர்ப்புகளுக்கும், கட்டுப்படாமல் செயல்படுமா, என்பதில்தான் இருக்கிறது. அதாவது, நாம் நம்முடைய விழிப்பு நிலையை (self-awareness) மேம்படுத்தினால் மட்டுமே, உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும். செயல், செயலுக்கான விளைவு, சுதந்திரம் ஆகியவை மனித வாழ்க்கையில் இணைந்தே செயல்படுகின்றன
  • மனிதன் தன் வாழ்க்கையை கட்டமைக்க முடியும், விருப்பம் போல் எந்த முடிவையும் எடுக்க முடியும். ஆனால், அந்த விருப்பங்கள் மற்றும் முடிவுகளுக்கான தூண்டுகோள்களின் ஆணி வேர் எது, எங்கிருந்து வருகின்றன என்று உணர்ந்து செயல்படுவதே உண்மையான சுதந்திரம்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories