- மனிதர்களுக்குச் சிறகடித்துப் பறக்க ஆசை. ஆனால், அதற்கு வேண்டிய இறக்கைகள் நம்மிடம் கிடையாது. பரிணாமத்தின் வாயிலாகப் பறவைகள், வெளவால்கள் போன்ற சில உயிரினங்கள் இறக்கைகளைப் பெற்றுள்ளன. அதேபோல மனிதர்களும் பரிணாமரீதியாக இறக்கைகளைப் பெற முடியுமா?
- இன்று பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் முதலில் தோன்றிய ஒற்றை செல் உயிரினங்களிலிருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்கின்றன. உயிரினங்களின் உடலில் டி.என்.ஏ எனும் மூலக்கூறு இடம்பெற்றுள்ளது. ஓர் உயிரினம் புதிய தலைமுறையை உருவாக்கும்போது அந்த டி.என்.ஏ சிறிய மாற்றங்களுடன் அடுத்த தலைமுறைக்குச் செல்லும்.
- இதனால், அந்தத் தலைமுறையில் சிறிய மாற்றம் ஏற்படும். உதாரணமாக, பூனை ஒன்று குட்டிகளை ஈன்றால் அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டுப் புதிதாகப் பிறக்கும் பூனைக்குட்டியின் வால் நீண்டதாகவோ, உயரம் அதிகமாகவோ இருக்கும். இதைத்தான் பிறழ்வு (Mutation) என்கிறோம். இந்த மாற்றங்கள் அடுத்தடுத்த தலைமுறைக்குப் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும்போது அது வேறு ஓர் உயிரினமாகப் பரிணமித்து விடுகிறது.
- இந்த மாற்றத்தை நிர்வகிப்பதில் சுற்றுப்புறத்துக்கும் முக்கியப் பங்குண்டு. பிறழ்வில் தன்னிச்சையாக ஏற்படும் மாற்றங்களில் எந்தப் பண்பு அந்தச் சூழலில் பிழைத்திருக்க உதவுகிறதோ அந்தப் பண்பு நீடிக்கும். அவ்வாறு உதவாத பண்பு தாக்குப்பிடிக்க முடியாமல் மடிந்துபோகும். இதுதான் இயற்கைத்தேர்வு.
- முதலில் தோன்றிய ஒற்றை செல் உயிரினங்கள் பல்வேறு சூழலில் வாழ நேர்ந்தபோது பிறழ்வு காரணமாகவும் இயற்கைத் தேர்வின் காரணமாகவும் வெவ்வேறு உயிரினங்களாகப் பரிணமித்துள்ளன.
- இங்கேதான் ஒரு கேள்வி வருகிறது. பறவையும் மனிதர்களும் ஒரே உயிரினத்திலிருந்து தோன்றினார்கள் என்றால், ஏன் மனிதர்களுக்கு இறக்கை இல்லை?
- பரிணாம மாற்றத்திற்குச் சில எல்லைகள் உண்டு. பரிணாமத்தால் சக்கரக் கால்களைக் கொண்ட விலங்குகளை உருவாக்க முடியாது. இதைத் தடைசெய்யப்பட்ட புறத்தோற்றங்கள் (Forbidden Phenotype) என்கிறோம்.
- இந்தப் பண்புகள் ஏன் தடைசெய்யப்பட்டுள்ளன? இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. முதலில் இயற்கை ஒரு சிக்கனவாதி. ஓர் உயிரினம் உயிர்வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச பண்புகளை மட்டுமே இயற்கை உருவாக்கும். உதாரணமாக மான்களுக்குக் கால்களில் சக்கரங்கள் இருந்தால் அவற்றால் வேகமாகச் சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க முடியும்.
- ஆனால், இப்போது இருக்கும் தசைகளும் கால்களும் சக்கரத்தைவிட வேகமாக ஓடும் தன்மையைப் பெற்றிருக்கும்போது, அவற்றால் சக்கரங்கள் பயணிக்க முடியாத கரடுமுரடான நிலத்திலும் பயணிக்க முடியும். இதனால், சக்கரத்தின் தேவை என்ன என்கிற கேள்வி வருகிறது.
- சக்கரத்திற்காகத் தனியான ரத்தநாளங்கள், நரம்பமைப்புகளை எதற்கு உருவாக்க வேண்டும் என இயற்கை விட்டுவிடும். இதே காரணத்தால்தான் மனிதர்களுக்கு இறக்கைகளை உருவாக்கவில்லை.
- ஓர் உயிரினம் ஒரு பண்பைப் பெறும் வழியில் சந்திக்கும் ஒவ்வொரு மாற்றமும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அந்தப் பண்பு நீக்கப்படும். இன்றைய பறவைகள் டைனசோர்களில் இருந்துதான் பரிணமித்தன. ஆனால், அவை டைனசோராக இருந்தபோதே கைகளில் இறக்கைகளைக் கொண்டிருந்தன.
- அந்த இறக்கைகள் இணையை ஈர்ப்பதற்குப் பயன்பட்டன. பிறகு காற்றில் மிதந்து செல்லும் வகையில் அவை மாறின. இறுதியாக அவற்றைப் பயன்படுத்தி மேல் எழும்பிப் பறக்கும் வகையில் மாற்றம் கண்டன. இப்படி இடையே தோன்றிய சிறிய மாற்றங்கள் அனைத்திலும் பயன் இருந்ததால்தான் அவை நீடித்தன. அவ்வாறு நீடிக்காத பயன்கள் நீக்கப்பட்டுவிடும்.
- மனிதர்களைப் பொறுத்தவரை இறக்கைகள் பயனுள்ளவைதாம். ஆனால், அவற்றை அடைய நமது உடலில் ஏற்படும் சிறிய மாற்றம்கூட நமக்கு உதவவில்லை என்றால் இறக்கை உருவாகாது. உதாரணமாகக் கைகள்தாம் இறக்கைகளாகப் பறவைகளுக்குப் பரிணமித்தன.
- மனிதர்களும் அவ்வாறு பரிணமிக்கும்போது, கைகளால் ஒரு சிறிய கருவியைத் தூக்க முடியவில்லை என்றாலும் அந்த மாற்றம் நிலைபெறாது.
- இறக்கைகள் முளைப்பதில் மரபணுக்களுக்கும் பங்குள்ளது. நமது உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முக்கிய மரபணுக்களில் ஒன்று ஹாக்ஸ் மரபணுக்கள். ஒரு குழந்தை கருவில் உருவானதிலிருந்து இறக்கும் வரை அதன் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை இந்த மரபணுக்கள்தாம் தீர்மானிக்கின்றன.
- மனிதர்கள் என்றால் இரண்டு கால்கள், இரண்டு கைகள், ஒரு மூக்குதான் ஏற்பட வேண்டும் என்று இந்த மரபணுக்கள் கணக்கு வைத்திருக்கும். கூடுதலாக ஒரு பாகம் உருவானாலும் அவற்றைச் செயல்படுத்த விடாது.
- சில குழந்தைகள் மூன்று கைகள், கால்களுடன் பிறப்பதைச் செய்திகளில் படித்திருப்போம். ஆனால், அந்தக் கூடுதல் உறுப்புகள் செயல்படாதவை. காரணம், அவை இயங்குவதற்குக் கூடுதல் எலும்புகள், மூட்டுகள், தசைகள், நரம்புகள் தேவை. அதேபோல அதன் இயக்கத்திற்கு ஏற்ற வகையில் மற்ற மரபணுக்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். அது விரயம் என்பதால் நமது உடல் அனுமதிக்காது.
- இதை எல்லாம் தாண்டி நாம் பரிணாம வளர்ச்சி அடைவதற்குப் புறச்சூழல் அழுத்தமும் வேண்டும் (Selection Pressure). இயற்கைத் தேர்வு செயல்பட வேண்டும் என்றால், அந்த உயிரினத்திற்கு உயிர்வாழ்வதற்கு அழுத்தம் ஏற்பட வேண்டும். மனிதர்களுக்குக் காற்றில் மிதந்து சென்றால் மட்டுமே உயிர் வாழமுடியும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தவிர, நாம் இறக்கைகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது. அதனால் மனிதர்கள் இறக்கைகளைப் பெற முடியாது.
- அதற்காகப் பரிணாம விஷயத்தில் எதுவுமே சாத்தியமில்லை என்றும் சொல்லிவிட முடியாது. 45 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த பூமியின் புறச்சூழலின் அடிப்படையில் நாம் இன்றைய உயிரினங்களை நோக்கினால் பூக்கும் தாவரங்கள், நடக்கும் விலங்குகள், நிலத்தில் சுவாசிக்கும் விலங்குகள் எதுவுமே சாத்தியம் இல்லாதவைதான்.
- ஆனால், அவை சாத்தியமாகியுள்ளன. அதேபோல மனிதர்களுக்கும் இறக்கைகள் முளைக்கலாம். முளைக்காமலும் போகலாம். இதற்கான விடை எப்போதும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் இயற்கையிடமே உள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 03 – 2024)