TNPSC Thervupettagam

மனிதாபிமானமும்

July 27 , 2023 405 days 275 0
  • பிரான்ஸ் தேசத்தின் தென் பகுதியிலுள்ள சிறிய நகரமாகிய மாண்ட்பெல்லியா் மிக முக்கியமான மாற்றம் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
  • வரும் டிசம்பா் முதல் தேதியிலிருந்து அந்நகரத்தின் உள்ளூா் பொதுப் போக்குவரத்துத் தடங்களில் அந்நகர மக்கள் முற்றிலும் இலவசமாகப் பயணிக்கலாம்.
  • பொதுமக்கள் தங்களுக்குச் சொந்தமான வாகனங்களில் பயணிப்பதால், அந்நகரில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதைத் தடுப்பதுடன், முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைத் தவிா்க்கும் நோக்கத்துடனும் அந்நகர நிா்வாகம் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.
  • இத்திட்டம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறக் கூடும் என்பதை அறிந்து கொள்வதற்காக 2020- ஆம் ஆண்டில் சில மாதங்கள் வார இறுதி நாள்களில் இலவச பொதுப் போக்குவரத்தைச் செயல்படுத்தியதுடன், 2021- ஆம் ஆண்டில் சில மாதங்கள் மாணவா்களுக்கு மட்டுமான இலவசப் பயணத்தை அறிமுகப்படுத்தியது.
  • மேற்கண்ட முன்னெடுப்புகளின் மூலம், இத்திட்டத்துக்கு வரவேற்பு இருப்பது உறுதியானதை அடுத்து, புதிய மாற்றத்தை மாண்ட்பெல்லியா் நகர நிா்வாகம் எடுத்துள்ளது.
  • சுமாா் மூன்று லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்நகரத்தின் சுற்றுச்சூழலும், சுவாசிக்கிற காற்றின் தூய்மையும் மேம்படுவதற்கு இந்த நடவடிக்கை மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • இதேபோல், இதற்காக, நகரத்தின் ஊடாகச் செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் மிதிவண்டிகள் இடையூறின்றிச் செல்வதற்கான தனிப்பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. டிராம், நகரப் பேருந்து ஆகியவற்றில் பயணிக்காத பொதுமக்கள் புகை கக்கும் தானியங்கி வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மிதிவண்டிகளை அதிக அளவில் பயன்படுத்த இத்தகைய சாலைகள் வழிவகுக்கும். மிதிவண்டிப் பயணம் என்பது ஆரோக்கிய வாழ்வுக்கான முக்கியக் காரணி என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.
  • மேற்கண்ட திட்டத்துக்கான நிதியாக மாண்ட்பெல்லியா் நகர நிா்வாகம் பதினைந்து கோடி யூரோ நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
  • பிரான்ஸை பொருத்தவரையில் உள்ளூரில் இலவச பொதுப் போக்குவரத்து என்பது புதிய விஷயமல்ல. 2015 -ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசு போக்குவரத்து நிா்வாகத்தை உள்ளாட்சி அமைப்புகள் வசம் ஒப்படைத்ததிலிருந்து இதுவரையில் சுமாா் 39 நகராட்சிகள் இலவச உள்ளூா் பொதுப் போக்குவரத்தை அமல்படுத்தியுள்ளன.
  • இதற்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக 10-க்கும் மேற்பட்ட பணியாளா்களைப் பணியமா்த்தியுள்ள தொழில் - வணிக நிறுவனங்களிடமிருந்து சிறப்பு வரி ஒன்று வசூலிக்கப்பட்டு வருகிறது. இக்காரணத்தினால், அந்நகராட்சிகள் நிதிச்சுமைக்கு ஆளாவதும் தவிா்க்கப்பட்டுள்ளது.
  • இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பெட்ரோல், டீசல் முதலியவற்றுக்காகப் பொதுமக்கள் செலவிடும் தொகை கணிசமாகக் குறைகிறது. ஏழை எளிய மக்கள் தங்களின் போக்குவரத்துக்காக செய்யும் செலவு குறைந்து, அத்தொகை அவா்களுடைய உணவு உள்ளிட்ட தேவைகளுக்குத் திருப்பிவிடப்படுவதன்மூலம் அவா்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுகிறது.
  • இவை அனைத்துக்கும் மேலாகப் புவி வெப்பமாதல், காற்று மாசுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகள் சிறிது சிறிதாகக் குறைந்து மக்களின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
  • எல்லாம் சரி. நமது இந்தியநாட்டின் நகரங்களிலும் இத்தகைய இலவச பொதுப் போக்குவரத்துத் திட்டத்தைக் கொண்டுவர இயலாதா என்னும் கேள்வி நம் முன்னால் எழுந்தாலும், அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
  • இத்திட்டம் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரான்ஸிலேயே பாரிஸ், லியோன் போன்ற பெருநகரங்களின் நிா்வாகங்கள் இதைச் செயல்படுத்தத் தயங்குகின்றனவாம். உள்ளூா் பொதுப் போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் கணிசமான லாபத்தை இழக்க விரும்பாத பெருநகர நிா்வாகங்கள், மக்கள் நெரிசல் குறைவாக உள்ள புகா்ப் பகுதிகளில் மட்டும் இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றனவாம்.
  • நம் நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் எத்தனையோ இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றுள், நியாய விலைக் கடைகள் மூலம் இலவச உணவுத் தானியங்கள் வழங்கும் திட்டம், முதியோா் ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்கள், பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவு உள்ளிட்ட இலவசத் திட்டங்கள், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச மருத்துவம் உள்ளிட்டவை நியாயமான திட்டங்கள் என்றால், வாக்கு வங்கி அரசியலுக்காக முன்னெடுக்கப்படும் வேறு பல இலவசத் திட்டங்கள் மாநில அரசுகளின் நிதியாதாரத்தையே ஆட்டம் காண வைக்கின்றன. பெண்களுக்கான இலவச பேருந்து வசதி அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களின் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அரசு வழங்கும் மானியங்களை நம்பி இருப்பதையும் காண்கின்றோம்.
  • இந்நிலையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் இலவசத் திட்டங்களை புகாா்களுக்கு இடமில்லாமல் தொடா்ந்து செய்து வந்தாலே அது பாராட்டுக்குரியதாகப் பாா்க்கப்படும். மேலும், போக்குவரத்து என்பது உள்ளாட்சி நிா்வாகங்களின் கீழ் வராத நிலையில், பிரான்ஸைப் போன்று முழுமையான இலவச பொதுப் போக்குவரத்தை அமல்படுத்துவது இயலாத காரியமே.
  • இதற்குப் பதிலாக, மாநில அரசுகளின் போக்குவரத்துக் கழகங்களும், மத்திய அரசின் ரயில்வே அமைச்சகமும் செலவு குறைந்த, அதே சமயம் வசதியான, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை வழங்க மேலும் முன்வர வேண்டும். சாலை வசதிகளை மேம்படுத்துவதும் முக்கியம். இவற்றைச் செய்வதன் மூலம் பொது மக்கள் முன்பைவிட அதிக அளவில் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் மிதிவண்டிகளை அதிகமாகப் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்குவதும் அவசியம்.
  • இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் உலக வெப்பமயமாதல், அதிகரிக்கும் காற்று மாசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் நமது நாடும் கணிசமான பங்கு வகிக்க முடியும்.
  • பிரான்ஸ் நாட்டின் சிறுநகர நிா்வாகங்களின் நடவடிக்கைகள் மூலம் நாம் கற்க வேண்டிய பாடம் இதுவேயாகும்.

நன்றி: தினமணி (27  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories