- பொருளாதார மந்தநிலை காரணமாகச் சுணக்கம் கண்ட ரியல் எஸ்டேட் துறைக்குப் புத்துயிரூட்டும் நடவடிக்கையை மத்திய அமைச்சரவை எடுத்திருக்கிறது.
- முடங்கியிருக்கும் இத்துறையை முடுக்கிவிடவும், கட்டி முடிக்கப்பட்டு அல்லது முடித்துக் கைமாற்றித்தரும் நிலையில் பணத் தேவையால் நின்றுபோயிருக்கும் திட்டங்களை முடிக்கவும் ரூ.25,000 கோடி மாற்று முதலீட்டு நிதிக்கு ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது.
- இதில் ரூ.10,000 கோடியை மத்திய அரசு, எஞ்சிய தொகையை பாரத ஸ்டேட் வங்கி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆகியவை வழங்கும்.
மனை வணிக ஒழுங்காற்று ஆணையம்
- பெருநகரங்களில் ரூ.2 கோடி மதிப்புக்குக் கீழேயும், பிற நகரங்களில் ரூ.1 கோடிக்குக் கீழேயும் உள்ள அடுக்ககங்களைக் கட்டி முடித்துப் பயனாளிகளுக்கு உடனே வழங்க இத்தொகை பயன்படுத்தப்படும். மனை வணிக ஒழுங்காற்று ஆணையத்தில் பதிவுசெய்துகொண்டுள்ள நிறுவனங்களுக்கு, அவை விற்கும் அடுக்ககங்களின் ‘நிகர மதிப்பு’ அடிப்படையில் இந்நிதியுதவி வழங்கப்படும்.
- வங்கிகளால் ‘வாராக் கடன்’ என்று அடையாளம் காணப்பட்டு, முடங்கியுள்ள திட்டங்களுக்கும் இது பொருந்தும் என்று அரசு முடிவெடுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
- இது மனை வணிகத் துறைக்கு மட்டுமல்ல; வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கும், மனை வணிக ஊக்குவிப்பாளர்களுக்கும்கூடப் பயனளிக்கும். ஏனென்றால், 90% நிதி செலவிடப்பட்டிருந்தாலும், முற்றுப்பெறாததால் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் கிடக்கும் வீடுகளை முடித்து, உரியவர்களிடம் ஒப்படைக்க இந்நிதி உதவும். அரசின் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் மொத்தம் 1,600 திட்டங்களில் 4.58 லட்சம் வீடுகள் அல்லது அடுக்ககங்கள் இதன் மூலம் முழுமை பெற்று பயனாளிகளிடம் வழங்கப்படும்.
- மனை வணிகத் துறை என்பது நாட்டிலேயே அதிகம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளைத் தரும் துறை என்பதுடன், அதனுடன் இணைந்த பிற துறைகளிலும் உற்பத்தி, விற்பனை, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பல மடங்காகப் பெருக்கும் துறையாகும்.
- சிமென்ட், உருக்கு, பெயின்ட், குளியலறைச் சாதனங்கள், ஒப்பனையறைப் பொருட்கள், அறைகலன்கள், மின்சார விளக்குகள் என்று பிற துறைகளிலும் உற்பத்தி, விற்பனை, வருமானம் ஆகியவை முன்னேற்றம் காணும். மாற்று முதலீட்டு நிதியம் வரவேற்கப்பட வேண்டியது.
நடைமுறை
- ஆனால், சிக்கல்கள் ஏதுமில்லாமல் அரசு இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த மாற்று முதலீட்டு நிதியத்துக்கு மத்திய அரசு, பாரத ஸ்டேட் வங்கி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மட்டுமல்லாது மற்றவற்றையும் ஈர்க்க வேண்டும். இந்த நிதியை அதிகப்படுத்தி வழங்கினால் இத்துறையில் மேலும் பல நிறுவனங்கள் நொடித்த நிலையிலிருந்து விடுபடும்.
- இந்த நிதியை உடனடியாக வழங்கி, இந்த நிதியாண்டுக்குள் இதன் பலன் வெளிப்படுவதை உறுதிசெய்வதில் முனைப்புக் காட்ட வேண்டும்.
- அரசு நிறுவனங்களின் நிதி மட்டுமல்லாமல் தனியார் நிதியும் இதில் சேர்வது நல்லது. பொருளாதாரம் மீட்சி பெற எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளை முறையாகப் பயன்படுத்தி மனை வணிகத் துறையினர் தம் பங்குக்குச் சிறப்பாகச் செயல்பட்டுப் பொருளாதார மீட்சிக்கு உதவ வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (14-11-2019)