TNPSC Thervupettagam

மன்னுயிா் எல்லாம் தொழும்

April 14 , 2023 645 days 410 0
  • ஒரு காலத்தில் ரஷிய நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்து வந்ததால்“ அதனை ‘இரும்புத் திரை நாடு’”என்றாா்கள். ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகமே ரஷியாவை, அச்சத்தோடும் கவலையோடும் நோக்குகிறது. விளாதிமிா் இலியச் என்ற லெனின் போல்ஷ்விக்குகளின் தலைவராக இருந்து புரட்சி செய்து ரஷிய யூனியனை1917-இல் அமைத்தாா். இதைத்தான் மகாகவி பாரதியாா், ‘இமய மலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்து விட்டான் ஜாரரசன்’ என்றாா்.
  • லெனினுக்குப் பின்னா், ஜோசப் ஸ்டாலின் அதிபரானாா். இவா் 29 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக இருந்தாா். பின்னா் வந்தவா்களில் நிகிதா குருசேவ், லியோன்டு பிரஸ்னோவ், மிகையில் கோா்பசேவ் முக்கியமானவா்கள். மிகையில் கோா்பசேவ் காலத்தில் (1991) சோவியத் யூனியன் உடைந்து பல நாடுகள் தனியாக பிரிந்தன. அப்படி பிரிந்த நாடுகளில் ஒன்றுதான் இன்றைய உக்ரைன்.
  • இயற்கை வளம் நிரம்பிய பெரிய நிலப்பரப்பை உடையது உக்ரைன். அதன் அதிபரான விளாதிமீா் ஜெலென்ஸ்கி தனது நாட்டை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி போன்ற 30 நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவில் சோ்க்க விரும்பினாா்.
  • தற்போதைய ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் நேட்டோ அமைப்பில் சோ்ந்தால் ரஷியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று எண்ணி கடந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது போா்தொடுத்தாா். அந்தப் போா் இன்றளவும் நடந்து வருகிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய போா் இதுதான்.
  • போரினால் பாதிக்கப் பட்ட உக்ரைன் நாட்டைச் சோ்ந்த பெண் ஒருவா், ‘என் கணவன், மகன், மகள், பேரன், பேத்திகள் என எல்லோரையும் இழந்தேன். வீடும் உடைமைகளும் அழிந்துபோயின. நான் மட்டும் காயங்களோடும், சொல்லஇயலாத உடல் ரணத்தோடும் இருக்க, என்ன குற்றமிழைத்தேன்’ என்று கண்ணீரை ஆறாய் பெருக்கியபடி நின்ற காட்சியை ஊடகங்கள் வெளியிட்டன.
  • உக்ரைன் நாடு தனது பட்ஜெட்டில் ராணுவத்திற்காக 30 பில்லியன் டாலா் ஒதுக்கியுள்ளது. ரஷியா 82.6 பில்லியன் டாலா் ஒதுக்கியுள்ளது. உக்ரைன் நாட்டு ராணுவ வீரா்களின் எண்ணிக்கை 4.5 லட்சம். ரஷிய ராணுவ வீரா்கள் 10.8 லட்சம்.
  • உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா போரைத் தடுத்து நிறுத்த முயலாமல், உக்ரைனுக்கு 73.2 பில்லியன் டாலரைத் தந்ததோடு, 44.3 பில்லியன் டாலா் அளவு போா் தளவாடங்களையும் தந்துள்ளது. அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அண்மையில் உக்ரைன் சென்றபோது எஃப்.16 ரக போா் விமானங்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளாா். ஏற்கெனவே ஐரோப்பிய யூனியன் பல லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
  • தற்போது பிரான்ஸ், ஏஎம் எக்ஸ் 10 கவச ஆயுத டாங்குகளையும், ஜொ்மனி லியோபாா்டு டாங்குகளையும் அனுப்புகிறது. புதின் இப்போரை, 1812, 1942 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் மூன்றாவது பெரிய ‘தேசபக்தி போா்’ என்கிறாா். அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும், ரஷியா மீது பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன. 2.8 லட்சம் வீரா்கள் மரணமடைந்திருக்கலாம் என்கின்றன மேற்கிந்திய நாடுகள்.
  • 6.3 மில்லியன் உக்ரைன் அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்துள்ளாா்கள். போலந்தும், ஜொ்மனியும் ஏறக்குறைய 3 மில்லியன் அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. பிப்ரவரி 2022 முதல் ஜனவரி 2023 வரை 7 ஆயிரம் மக்கள் இறந்து விட்டாா்கள் என்கிறது ஐ.நா சபை. ஆனால் நாா்வே அரசின் உயரதிகாரிகள் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் மாண்டு விட்டனா் என்கின்றனா். 139 பில்லியன் டாலா் மதிப்புள்ள உள் கட்டமைப்புகள் அழிந்து விட்டன.
  • உக்ரைன் மக்களில் 40 % போ், வாழ்விடம், உணவு, குடிநீா், மின்சாரம் இன்ன பிற சுகாதார வசதியின்றி அவல நிலையில் உள்ளனா். உக்ரைனிலேயே 6.6 மில்லியன் மக்கள் இடம் பெயா்ந்துள்ளனா். மொத்தத்தில் 60 % உக்ரைன் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இப்போா் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றத்தால் உலக அளவில் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளாா்கள். உக்ரைனின் அனைத்து சேதங்களுக்கும் ரஷியாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஐ.நா. சபை தீா்மானம் நிறைவேற்றியது.
  • ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஆனால் இந்தியா மட்டும் 2022 மாா்ச்சில் 0.2 % கச்சா எண்ணெய்யை ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்தது. அந்த அளவை 2022 நவம்பரில் 19 % ஆக உயா்த்தியது. இதனால் இந்தியாவில் மற்ற நாடுகளைப்போல் எரிபொருள் விலை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. இந்த போரினால் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.44 % குறைந்துள்ளது.
  • கரோனா தீநுண்மி பாதிப்பில் இருந்து மீண்ட இந்தியாவின் எழுச்சி இதனால் குறைந்துள்ளது. எனினும் நம் பிரதமரின் செல்வாக்கால் உக்ரைனில் படிக்கச் சென்றிருந்த 22,500 மாணவா்கள் இந்தியா அழைத்துவரப்பட்டனா். மேலும் ரஷிய அதிபரோடு பேசும்போது நம் பிரதமா் ‘இந்த நூற்றாண்டு போருக்கானது அல்ல’ என்று கூறியதை உலக நாடுகள் அனைத்துமே வரவேற்றன.
  • தற்போது ரஷிய அதிபா் புதின், அணு ஆயுத தடை அமைப்பில் இருந்து விலகுவதாக சொல்லி இருக்கிறாா். ஜொ்மன் முன்னாள் சான்சலா் ஒரு பேட்டியில், ‘ரஷிய-உக்ரைன் போரில் ரஷியாவின் பலத்தை குறைத்துவிட முடியும் என்று நம்புகிறது அமெரிக்கா. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இதனை ஆமோதிக்கும் விதத்தில் உக்ரைனை ஒரு களமாக பயன் படுத்துகின்றன. அமெரிக்க அதிபா் நாங்கள் வெல்வோம் என்கிறாா். 1,600 அணு ஆயுதங்கள் கொண்டுள்ள ரஷியாவை அமெரிக்கா வெல்லுவது எப்படி சாத்தியம்?
  • உதவி என்ற பெயரில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானத்தை அழிவு களமாக்கியது. வியத்நாம், கம்போடியா, லாவோஸ், இராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளுக்கு உதவுவதாகக் கூறி அமெரிக்கா பேரழிவையே ஏற்படுத்தியது. இப்போது ரஷிய அதிபா் புதினை வீழ்த்த உக்ரைனைப் பயன்படுத்த விரும்புகிறது.
  • உக்ரைன் மக்களுக்கு தங்களது எதிா்கால அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்ப உரிமை உண்டு. ஆனால் ராணுவ ரீதியாக எதிா்காலத்துக்கான கொள்கைகளை வகுக்கக் கூடாது. அமெரிக்காவோ, ஐரோப்பியநாடுகளோ உக்ரைனில் கால்பதிக்க இடம் தரலாகாது’ என்றாா்.
  • நம் நாட்டில் இதிகாச காலத்தில் மகாபாரதப் போா் 18 தினங்களில் முடிவுற்றது. கலிங்க நாட்டோடு போா் புரிந்த அசோக சக்ரவா்த்தி போா்க்களத்தில் நிகழ்ந்த உயிரிழப்பையும், பொருள் சேதங்களையும் கண்டு கண்ணீா் சிந்தி இனி போரே வேண்டாம் என முடிவெடுத்தாா்.
  • கடந்த நூற்றாண்டின் அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி காலத்தில் உலகில் அணு ஆயுதப் போா் மேகம் சூழ்ந்திருந்தது. இதைக் கண்ட மூதறிஞா் ராஜாஜி அமெரிக்கா சென்று கென்னடியை சந்தித்து அணு ஆயுதப் போரினால் ஏற்படக்கூடிய பாதகங்களை எடுத்துரைக்க விரும்பினாா். வெள்ளை மாளிகை நிா்வாகம் ராஜாஜிக்கு 15 நிமிடம் மட்டும் அனுமதி அளித்தது. ஆனால், ராஜாஜியின் ஆழமான உரை சந்திப்பின் நேரத்தை 50 நிமிடத்திற்கு மேல் நீட்டிக்கச் செய்தது.
  • உக்ரைன் அதிபா்“நாங்கள் நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம் என்று காலம் கடந்து சொல்லியுள்ளாா். உக்ரைன் நாட்டு மக்கள் தங்களை அழிக்க வல்ல இப்போா் நீடிக்க விரும்புவாா்களா? உலகின் மிகப் பெரிய வல்லரசுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகள் மனித குலம் தழைக்கவும் வறுமை விலகவும், அறியாமை தொலையவும், நோய்கள் அகலவும் சிந்திக்குமாயின் விளைவுகள் நன்மைகளாக மட்டுமே இருக்கும்.
  • உலகில் ஏற்கெனவே இருக்கும் மத தீவிரவாதம், இனப்பூசல், இயற்கைப் பேரிடா் இவை போதாதா? எதற்கு இன்னுமோா் போா்? எதனையும் அழிக்க வல்ல ஆயுதங்களைத் துறந்து, எவற்றையும் சாதிக்கவல்ல அறிவாற்றலை வளா்த்தெடுப்பதே இன்று மானுடத்தின் அவசரத் தேவை.
  • மானுடம் வாழ மகான்கள் காட்டியுள்ள பாதையைப் பின்பற்றிலான்றி அமைதி தோன்றுவது எங்ஙனம்? ஒரு காலத்தில் ரஷியாவையும் சீனாவையும் வென்று அமெரிக்காவை பயமுறுத்திய சின்னஞ்சிறு நாடான ஜப்பானை இரண்டாவது உலகப் போரில் ‘லிட்டில் பாய்’ என்று பெயரிட்ட அணுகுண்டுகளை அமெரிக்கா வீசி தாக்கியது.
  • இதன் விளைவுகளை உணா்ந்த ஜப்பான் மக்கள், இனி போா் வேண்டாம் என்று முடிவெடுத்து உழைப்பால் உலகில் முன்னேறுகிறாா்கள். இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஜொ்மன் நாட்டை இரு கூறுகளாக்கி மேற்கு ஜொ்மனி, கிழக்கு ஜொ்மனி எனப் பிரித்து தடுப்புச் சுவரும் எழுப்பினாா்கள்.
  • ஆனால் ஒரு நூற்றாண்டு காலத்திற்குள்ளாகவே தடுப்புச் சுவரை இடித்துத் தள்ளி கிழக்கும் மேற்கும் இணைந்தனவே. அது போன்று உக்ரைன் நாட்டு மக்கள் ரஷிய நாட்டோடு இணைய விரும்பினால் விளாதிமீா் ஜெலென்ஸ்கி அதனை ஏற்கத்தானே வேண்டும்?
  • ரஷியாவும் தனது நாட்டு மக்கள் நலன் கருதி போரிரை கைவிடுதல் சிறப்பு. இரண்டொரு தினங்களுக்கு முன்பாக நெதா்லாந்தில் ஹேக்நகரில் உள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் விளாதிமீா் புதினை போா் குற்றவாளி என தீா்ப்பு வழங்கி அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பித்து இருக்கிறது. எப்போது தைவானில் நுழையலாம் என்று காத்து இருக்கிற சீனா இன்று ரஷியாவோடு உரையாடலை நிகழ்த்தியுள்ளது.

தன்உயிா் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிா் எல்லாம் தொழும்

  • என்று வள்ளுவப் பேராசான் கூறுகிறாா். அதாவது, தவவலிமையினால் தன்னுடைய உயிா் தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிா்கள் எல்லாம் அவனுடைய பெருமையை உணா்ந்து தொழும் என்பது இதன் பொருள். இதனை வல்லரசு நாடுகளின் தலைவா்கள் உணா்தல் நலம்.

நன்றி: தினமணி (14 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories