TNPSC Thervupettagam

ம(பி)ழையால் வந்த சேதம்

July 13 , 2023 420 days 298 0
  • கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பெருமழையால் வடமாநிலங்கள் தத்தளித்து வருகின்றன. மழை வெள்ள பாதிப்புகளால் ஹிமாசல், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
  • இமயமலையையொட்டி உள்ள ஹிமாசல பிரதேசம்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலைகள் சூழ்ந்த பிரதேசமாக இருப்பதால், பல இடங்களில் பெரும் நிலச்சரிவு காரணமாக மணாலி -லே தேசிய நெடுஞ்சாலை, குலு - மணாலி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட 1,300 சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொடர்மழை காரணமாக, 4,680-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதுடன் துணை மின்நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
  • குடிநீர் விநியோகத் திட்டங்களும் கடும் பாதிப்பு அடைந்துள்ளதால், இவ்வளவு கடுமையான மழைக்கு இடையே குடிநீர் தட்டுப்பாட்டையும் அம்மாநில மக்கள் எதிர்கொண்டுள்ளனர். மணாலியில் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று சீட்டுக் கட்டுபோல சரிந்தது. இதேபோன்று, பல பகுதிகளிலும் சிறு பாலங்கள், சாலைகள், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 40 பெரிய பாலங்கள் கடும் சேதமடைந்துள்ளன.
  • சுமார் 14,100 அடி உயரத்தில் உள்ள சுற்றுலாத் தலமான சந்தர்தாலில் 300}க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி உள்ளனர். விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.4,000 கோடி மதிப்புக்கு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ள அம்மாநில முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு, வீட்டைவிட்டு மக்கள் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கும் அளவுக்கு நிலவரம் தீவிரமடைந்துள்ளது.
  • ஹிமாசல், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பாயும் சட்லெஜ், ராவி, பியாஸ், தில்லியில் யமுனை ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாய கட்டத்தை நெருங்கி உள்ளது. ஹிமாசல், உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள பல ஆறுகளிலும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்திலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
  • புதுதில்லியையும் மழை விட்டுவைக்கவில்லை. ஜூலை 8, 9 ஆகிய இருநாட்களில் மட்டும் தில்லியில் 153 மி.மீ. மழை பெய்துள்ளது. 40 ஆண்டுகளில் அதிகபட்ச மழைப்பொழிவு இது. அண்மைக்காலங்களில் இதுபோன்று நிகழ்ந்ததில்லை.
  • "இதுபோன்ற மழைப்பொழிவை எதிர்கொள்ளும் வகையில் தில்லியில் வடிகால் அமைப்புகள் கட்டமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிட்டது' என்கிறார் மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால். இப்போதுள்ள மழை வடிகால் கட்டமைப்பு 1976-இல் அமைக்கப்பட்டது. தில்லியில் அப்போதைய மக்கள்தொகை 60 லட்சம். இப்போது மக்கள்தொகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • பஞ்சாப் மாநிலத்தின் அனந்தபூர்சாஹிப், பதான்கோட், ஃபதேகர்சாஹிப், மொஹாலி போன்ற பகுதிகளில் சாலைகள், தண்டவாளங்கள், விவசாய நிலங்கள் நீரில் மிதக்கின்றன. மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க  மொஹாலி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ராணுவத்தின் வெள்ள மீட்புப் பிரிவு வீரர்கள் களமிறங்கி உள்ளனர். சண்டீகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளவெள்ளத்தால் சூழப்பட்ட சித்காரா பல்கலைக்கழகத்தில் இருந்த 900 மாணவர்கள், ராணுவ வீரர்களின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
  • வறண்ட மாநிலமாகக் கருதப்படும் ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் உள்ள மவுண்ட் அபுவில் ஒரே நாளில் 231 மி.மீ. அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. ஜூலை மாதத்தில், பஞ்சாபில் வழக்கத்தைவிட 200 சதவீதமும் உத்தரகண்டில் 115 சதவீதமும், ஹரியாணாவில் 113 சதவீதமும் ஹிமாசலில் 110 சதவீதமும் அதிகமாக மழை பெய்துள்ளது.
  • நாடு முழுவதும் ஜூன் 1 முதல் தற்போது வரை பெய்ய வேண்டிய மழை அளவில் 40 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. ஆனால், வடமேற்கு இந்தியாவில் இந்த காலகட்டத்தில் 64 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. ஜூலை மாதத்தில் இதுவரை வடமேற்கு இந்தியாவில் 104 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
  • பருவநிலை மாற்றங்கள் காரணமாக பல பகுதிகளிலும் இதுபோன்ற எதிர்பாராத மழைப்பொழிவு அண்மைக்காலங்களில் காணப்படுகிறது. பிபர்ஜாய் புயல், காற்றின் திசை மாறுபாடு ஆகியவற்றின் காரணமாகவே இப்படி எதிர்பாராத மழை பொழிவதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மிருத்யுஞ்ஜய் மொஹபாத்ரா கூறுகிறார்.
  • கட்டுப்பாடற்ற வளர்ச்சிப் பணிகள் மலை பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுவதால் மழைக் காலத்தில் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல மாநிலங்களில், சமவெளிப் பகுதிகளிலும் பெரிய மழையை எதிர்கொள்ளும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை.
  • கடந்த பல ஆண்டுகளாகவே இதுபோன்று நடந்துவந்தபோதும் அரசுகள் விழித்துக் கொள்ளாததால் பொதுமக்கள் மீண்டும் மீண்டும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.  மனிதன் தன் பேராசையின் காரணமாக தொடர்ந்து இயற்கையை அழித்து வருகிறான். இயற்கையும் அவ்வப்போது எச்சரிக்கை செய்துகொண்டே இருக்கிறது.
  • இயற்கையின் எச்சரிக்கையைப் புறக்கணித்ததால் ஏற்படும் பேரழிவுகள் இவை என்பதை உணர்ந்து திருந்தாதவரை, உயிரிழப்புகளை நாம் தவிர்க்க முடியாது.

நன்றி: தினமணி (13 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories