- அண்மைக் காலமாக ‘மர்மமான முறையில் மயில்கள் இறந்து கிடக்கின்றன' என்ற செய்திகளை அதிகமாகக் கவனிக்க முடிகிறது. முருகனின் வாகனம், அதைக் கும்பிடுவது போன்ற செயல்பாடுகளோடு முடிந்துவிடுகிறது நமது அக்கறை. இவற்றைத் தாண்டி மயில்கள் கொல்லப்படுவது ஏன் கண்டுகொள்ளப்படாமல் போகிறது? காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972இன் படி மயில்களை கொல்வது தண்டனைக்குரிய குற்றம்.
பேராபத்தான பூச்சிக்கொல்லி
- இந்தப் படுகொலை பற்றி விசாரிக்க வழக்கு தொடரப்பட்டிருந்தது, எங்களது ஆய்வு முடிவைப் பொறுத்தே வழக்கு விசாரணையும் தொடரவேண்டியிருந்தமையால் ஓரிரு நாள்களில் நாங்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவேண்டியிருந்தது.
- அதனால் வேதிப் பரிசோதனை செய்தோம். ஆய்வின் முடிவில் மயில்களின் இறப்பிற்குக் காரணம் மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக் கொல்லிதான் காரணம் எனத் தெரியவந்தது. இந்தப் பூச்சிக்கொல்லி சோளம், சூரியகாந்தி, தக்காளி, பருத்தி, உருளைக்கிழங்கு ஆகிய தாவரங்களை உணவாக உட்கொள்ளும் தண்டு துளைப்பான், கிழங்கு அந்துப்பூச்சி போன்ற பூச்சிகளைக் கொல்ல விவசாய நிலங்களில் தெளிக்கப்படுகிறது.
- மோனோகுரோட்டோபாஸை உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) வகுப்பு 1b எனப்படும் மிகவும் ஆபத்தான பூச்சிக்கொல்லிப் பட்டியலில் வைத்துள்ளது. இது உடனடி ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. உயிரினங்களின் நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்குகிறது. இதனால் கண் - மூளை பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்துவிடும்.
தடை செய்யப்படாத அதிசயம்
- இத்தகைய தீங்கு ஏற்படுத்தும் மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லி முதலில் பருத்தி - மாதுளம் பழங்களில் உள்ள பல்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்டு சில நெறிமுறைகள், வரம்புகளுடன் மற்ற பயிர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவின் யுனைடட் பாஸ்பரஸ் நிறுவனம் 1970இன் தொடக்கத்தில் இதை இந்தியாவில் தயாரிக்க ஒப்புதல் பெற்றது. ஆனால், இதன் உண்மை முகம் பத்தாண்டுகளில் வெளிப்பட்டது.
- பூச்சிகளிடம் மட்டுமல்லாமல் பல பறவைகளிடையே மோசமான பாதிப்புகளை இது ஏற்படுத்தியது. விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி வாய்க்கால் நீரில் கலந்து வாய்க்கால் நீர் செல்லும் வழியெல்லாம் நீரிலும் கரையோரங்களிலும் இருந்த பூச்சிகள், தவளைகளைப் பாதித்தது.
- அத்துடன் நிற்காமல், இறுதியாக நீர்நிலைகளில் கலக்கும்பொழுது அங்குள்ள மீன்கள், பாம்புகள், பறவைகள் என உணவுச்சங்கிலி மொத்தமும் பாதிக்கப்படுவது அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆய்வுகளுக்குப் பின் 1989இல் இந்தப் பூச்சிக்கொல்லி அமெரிக்காவில் பின்வாங்கப்பட்டது.
- மற்ற நாடுகளும் இதைத் திரும்பப்பெற்றன. ஆனால், இந்தியா மட்டும் விதிவிலக்கு. இந்தியாவில் 2005இல் காய்கறிகளைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது பருத்தி, புகையிலை, வணிகப் பூச்செடிகள் போன்ற தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்ல மோனோகுரோட்டோபாஸ் பயன்படுத்தப் படுகிறது. இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிற கற்பிதத்தைத் தனியார் பெருநிறுவனங்கள் நம் நாட்டினர் மனதில் பதியவைத்துள்ளன.
நம் அக்கறை இவ்வளவுதான்
- ஆந்திர மாநிலத்தில் கள ஆய்வு மேற்கொண்டபோது ஒரு ரோஜா தோட்டத்தின் உரிமையாளரிடம் விசாரித்தபொழுது எந்தப் பூச்சிக்கொல்லியும் பயன்படுத்துவதில்லை அவர் என்று சொன்னது ஆச்சரியமளித்தது. ‘ஏன்?’ என்று கேட்டபொழுது ஆச்சரிய உணர்வு நீங்கி, குற்ற உணர்வு மேலோங்கியது.
- காரணம், “பூச்சிக்கொல்லி துர்நாற்றத்தாலும், பூக்களின் வண்ணங்கள் நலிந்துவிடுவதாலும் பூக்களை வாங்குவது குறைந்துவருவதால் தற்போது செடியில் பூச்சிக்கொல்லி அடிப்பதில்லை” என்றார். நமது வயிற்றுக்குள் சென்று பல உடல் கோளாறுகளை ஏற்படுத்தி னாலும் பரவாயில்லை, ஆனால் அலங்காரத்துக்குப் பயன்படும் பூக்களுக்குப் பிரச்சினைகள் வரக்கூடாது என்று நினைப்பது என்ன மாதிரியான மனநிலை? மறுபுறம் மயில்கள் நஞ்சிட்டுக் கொல்லப்படுகின்றன?.
- இதற்கு முடிவுதான் என்ன? இதற்கு உடனடித் தீர்வு இல்லை! மயில்களால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதை கட்டுப்படுத்தத்தான் முடியுமே தவிர, முற்றிலும் தவிர்க்க முடியாது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
- மயில்களின் எண்ணிக்கை குறித்துக் கணக்கெடுப்பு நடத்துவது, எந்தெந்தப் பயிர்களில் மயில்களால் எவ்வளவு சேதம் ஏற்படுகிறது, எந்தக் காலத்தில் ஏற்படுகிறது, மயில்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் இயற்கையான இரைகொல்லிகளின் எண்ணிக்கை - பரவல் என யாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்படி எந்த இடத்தில் எவ்வகையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
- பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களில் விவசாயிகள் காப்பீடு செய்வது குறித்து ஆலோசிக்கவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு (Protected Areas) வெளியே தென்படும் காட்டுயிர்களால் சேதம் அதிக அளவில் ஏற்பட்டால், அதை உறுதிப்படுத்தி இழப்பீடு அளிக்கும் திட்டத்தை அரசும் ஏற்படுத்த வேண்டும்.
நன்றி: தி இந்து (09 – 04 – 2023)