TNPSC Thervupettagam

மரபணு விதியை மாற்றலாம்!

October 5 , 2024 2 hrs 0 min 6 0

மரபணு விதியை மாற்றலாம்!

  • உலக அளவில் பிரபலமாகி இருக்கும் டாக்டர் சேய்ஸ்தா மாலிக் (Dr. Shaista Malik) - கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இதயநலச் சிறப்பு மருத்துவர். இவர் The New England Journal of Medicine என்னும் மருத்துவ ஆய்விதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
  • மரபுத் தன்மைக்கும் இதய நோய்க்கும் உள்ள தொடர்பைப் பேசும் அந்தக் கட்டுரையில் அவர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
  • ‘மாரடைப்பு, இதயச் செயலிழப்பு உள்ளிட்ட இதய நோய்களைத் தூண்டும் ‘மரபணுப் பிறழ்வுகள்’ (Mutations) துப்பாக்கியில் ஏற்றிவைக்கப்பட்ட தோட்டாக்கள் போன்று நம் செல்களில் ஏற்றப்பட்டுள்ளன. அதேநேரம், அவற்றை இயக்கும் விசைகள் நம்மிடம்தான் இருக்கின்றன. பெரும்பாலான நேரத்தில் இந்தக் கெட்ட மரபணுக்கள் உறக்க நிலையில்தான் இருக்கின்றன. இவற்றைத் தட்டி எழுப்புவது நாம்தான்.
  • ‘எழுப்புகிற வஸ்து மோசமான உணவுப் பழக்கம், புகைப்பழக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட நம் வாழ்க்கை முறை யாக இருக்கலாம்; மாசடைந்த சுற்றுச்சூழலாக இருக்கலாம் அல்லது கடுமையான நோய்த் தொற்றாகவும் இருக்கலாம். நாம் மனம் வைத்தால், இப்படித் தட்டி எழுப்பும் வஸ்துவைக் கட்டுப்படுத்தி, மரபணு விதியை மாற்றி அமைக்கலாம். அதன் பலனாக, மரபுரீதியில் வரும் இதய நோய்களைத் தடுக்கவும் செய்யலாம்.’
  • எவ்வளவு பெரிய நம்பிக்கை வார்த்தைகள் இவை! ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்; குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்’ என்கிற பாடல் வரிகள் இதற்குப் பெரிதும் பொருத்தம்!

யாரெல்லாம் விழித்துக் கொள்ள வேண்டும்?

  • வம்சாவளியில் இதய நோய்/மாரடைப்பு வந்தவர்கள், புகைபிடிப்பவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள், ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாக உள்ள வர்கள், மது அருந்துபவர்கள், அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், நடைப்பயிற்சியோ உடற்பயிற்சியோ இல்லாதவர்கள், மன அழுத்தம் நிறைந்த வர்கள், மாசு மிகுந்த இடங்களில் வசிப்பவர்கள் ஆகியோர்தான் இதய நோய் குறித்து விழித்துக்கொள்ள வேண்டும்.

என்ன காரணம்?

  • இதய நோய்களுக்குத் தற்காப்பு நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டியவர்களில் முதல் வரிசையில் நிற்பவர்கள் இவர்கள்தான். இவர்களுக்காகவே சேய்ஸ்தா மாலிக் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில் இன் னொன்றையும் சொல்லியிருக்கிறார்.
  • ‘டிடிஎன்’ (TTN) என்னும் மரபணு தன்னமைப்பில் மாற்றம் அடையும் போது, இதய நோயைத் தூண்டுகிறது’ என்று தொடரின் முதல் கட்டுரையில் பார்த்தோமல்லவா? ‘அது உண்மை தான். என்றாலும், தேர்தலில் ஒரு கட்சி தோற்றுப்போனால், அதற்கு வேட்பாளர் மட்டுமே காரணம் என்று எப்படிச் சொல்ல முடியாதோ, அப்படி வம்சாவளி இதய நோய்க்கு ‘டிடிஎன்’ மரபணு மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது’ என்கிறார் அவர்.
  • ‘நம் ரத்தத்தில் 50க்கும் மேற்பட்ட மரபணுப் பிறழ்வுகள் இதய நோய்களுக்குத் தூது செல்லக் காத்திருக்கின்றன. மாறுபட்ட மரபணு ஒன்று சர்க்கரை நோய் வருவதைத் தூண்டுகிறது என்றால், அடுத்த வகை மரபணு ரத்தக் கொதிப்புக்கு அச்சாரம் கொடுக்கிறது.
  • இன்னொன்று உடல் பருமனுக்கு உரம் போடுகிறது. தீராத பசியை உண் டாக்கி, நம் உணவுமுறையையே மாற்றிவிடவும் ஒரு வகை மரபணு நீண்ட சதி செய்கிறது. இதன் மூலம் நம் ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அது கூட்டிவிடுகிறது. இப் படிப் பலவித மரபணுக்கள் தனித்தனியாகவோ கூட்டணி அமைத்தோ நமக்கே தெரியாமல் மாயா ஜாலம் செய்து மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட ரத்த நாள நோய்களை அழைத்துவிடுகின்றன’ என்று விளக்கம் தருகிறார் சேய்ஸ்தா மாலிக்.

இதை எப்படித் தெரிந்துகொள்வது?

  • வம்சாவளியில் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வர வாய்ப்புள்ளவர் களுக்கு ‘டிஎன்ஏ’ (DNA) பரிசோதனை இருக்கிறது. இதன் மூலம் எந்த வகையில் ஒருவருக்கு மாரடைப்பு அல்லது இதயச் செயலிழப்பு ஏற்படக்கூடும் என்பதைக் கணித்துவிடலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு அதிகம். அனைவருக்கும் இது சாத்தியப்படாது. அரசு மருத்துவ மனைகளில் இதற்கு வாய்ப்பு இல்லை.
  • வசதியுள்ளவர்கள் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் இதை மேற்கொள்ள முடியும். அதே நேரம், இந்தப் பரிசோதனைக்கு வாய்ப்பில்லாதவர்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை. தங்களின் அன்றாட வாழ்க்கை முறையைச் சீர்படுத்திக் கொண்டால் போதும், மாரடைப்பி லிருந்து தப்பித்துவிடலாம்.

எப்படி?

  • நடுத்தர வயது ஆடை வியாபாரி ஒருவர் என்னைத் தேடி வந்தார். அவருடைய அப்பா, அம்மா இருவருக்கும் மாரடைப்பு வந்திருக்கிறது. அதனால், தனக்கும் அது வந்துவிடுமோ என்கிற பயத்தில் ஆலோசனை கேட்டார். அவருக்கு ‘பிபி’ அளவு 130/80. சர்க்கரை நோய் ஆரம்பநிலையில் இருந்தது. ரத்தத்தில் கொலஸ்டிரால் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. உடல் எடையும் அதிகம்தான். அதனால், உடனடியாக உடல் எடையைக் குறைப்பதும், தினமும் 40 நிமிடம் நடக்க வேண்டியதும் அவசியம் என்றேன்.
  • அரிசிச் சாதத்தைக் குறைக்கச் சொன் னேன். உப்பு, இனிப்பு, நிறை கொழுப்பு குறைந்த உணவு வகைகளைப் பரிந்துரைத்தேன். துரித உணவு வேண்டாம் என்றேன். புகைபிடிப்பதை நிறுத்தச் சொன்னேன். நாளொன்றுக்கு 6 - 8 மணி நேரம் நிம்மதியான உறக்கம் முக்கியம் என்றேன்.
  • அவருக்கு மதுப்பழக்கம் இல்லை. மாத்திரை, மருந்து எதையும் நான் தரவில்லை. இன்று வரை அவருக்கு நெஞ்சுவலி இல்லை. தவறான வாழ்க்கை முறை யைச் சரிசெய்து கொண்டால், மரபணு விதியையும் மாற்ற முடியும் என்பதற்கு இந்த வியாபாரி ஓர் உதாரணம்.

இப்படிச் செய்யுங்கள்!

  • உங்களுக்கு 30 வயதைக் கடந்துவிட்டது என்றால், வருடத்துக்கு ஒருமுறையாவது பி.பி., ரத்தச் சர்க்கரை, கொலஸ்டிரால் அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இவற்றில் பிரச்சினை இருந்தால், மாதம் ஒருமுறை 'பி.பி.', மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்தச் சர்க்கரை அளவு, கொலஸ்டிரால் அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். வருடத்துக்கு ஒருமுறை 'இசிஜி' பரிசோதிக்க வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு மேற்சொன்ன வற்றோடு வருடத்துக்கு ஒரு முறை 'ட்ரெட்மில்', 'எக்கோ' பரி சோதனைகள் தேவைப்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories