மரபறிவில் பொதிந்து கிடக்கும் கடல்
- 2012இல் தொண்டி மீனவர் சுப்பிரமணியனைச் சந்தித்தபோது, தனது விடலைப் பருவ அனுபவத்தை (1960கள்) இப்படி நினைவுகூர்ந்தார்: “என் வலையில கெடச்ச கறுப்புச் சிங்கிறாலப் பாத்து, வத்தயில இருந்து அழுதிருக்கேன். ‘யாரானும் வந்து கழிச்சிட்டுப் போங்க, எனக்கு வலயே வேணாம்’னு வத்தயில போட்டுட்டு ஓடிவந்திருக்கேன். அவ்வளவு படும். அந்த இனமே அழிஞ்சு போச்சு. சிங்கி இனத்தோட முட்டையை எல்லாம் அள்ளிக்கொண்டு வந்து, கரையில போட்டுருவாங்க. கடல வழிச்சுத் தொடச்சிட்டாங்க.”
- 1920களில் கட்டேகட் கடலில் (டென்மார்க்) மீன்வள அறிஞர் வில்லி கிறிஸ்டென்சனின் தாத்தாவுக்குக் கிடைத்த அனுபவமும் சுப்பிரமணியன் சொல்வதைப் போன்றதுதான். அயிலை மீனுக்குத் தாத்தா விரித்திருந்த வலை முழுக்கக் கொடைச் சூரை மீன் பாய்ந்திருந்ததைப் பார்த்து அயர்ந்துபோனார். சூரைமீன் சுற்றிக் கிடக்கும் வலையைச் சரிசெய்து, மீண்டும் விரிப்பது மிகவும் சிரமமான வேலை.
- அன்றைக்குக் கொடைச் சூரை மீனுக்கும் சிங்கிறாலுக்கும் சந்தைகளில் மதிப்பில்லை. 1950களில் இழுவைமடிகள் அறிமுகமாகி இருக்கவில்லை. கேரளக் கடலில் விசைப்படகுகள் வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தன. வலைகளில் நிறைய கொடைச்சூரை சிக்கும்; கரைக்குக் கொண்டுவந்தால் ‘அதைப் புழையில் களா’ (கழிமுகத்தில் வீசு) என்பார்களாம் வியாபாரிகள். கோடிமுனை மீனவர் கஸ்பார் (1937) நினைவுகூர்ந்த அனுபவம் இது.
மீன் செவல்:
- பாக் கடலில் மீன்கூட்டங்களை அவை எழுப்பும் ஒலியை வைத்து அடையாளம் காண்பார்களாம். ‘சின்ன வயசில் கடலுக்குப் போறப்ப, கையை வெளிய போட்டா மீன் கவ்விடும்னு பெரியவங்க அதட்டுவாங்க. அவ்வளவு மீன்கள் இருக்கும். படகில ஒக்காந்திருந்தா மீன் செவலின் (கூட்டத்தின்) சத்தம் அருமையா கேக்கும்!’ என்கிறார் அதிராம்பட்டினம் மீனவர் காளிதாஸ் (1956).
- இரயுமன்துறை (கன்னியாகுமரி) மீனவர் ஜான் போஸ்கோவின் நினைவுகளும் ஏறத்தாழ அப்படித்தான் இருக்கின்றன: “பேப்பாய் (கூட்டம்) வருகிற கெழுதுமீன்கள் (கெளிறு), மேலே வந்து காற்றுக் குமிழ்களை வெளிவிடும். கட்டுமரத்தில் உட்கார்ந்திருக்கிற நமக்கு அந்தச் சத்தம் புளியம்பழக் குவியல் மேலே ரோடு உருளை ஏறுகிற மாதிரி கேட்கும்; அம்மாதிரி நேரத்தில் சிற்றேற்றினக்காரன் கரைக்குத் தொளவை (துடுப்பு) காட்டுவான். பெருவலைகள் புறப்பட்டுப் போய், கெழுதுப் பேப்பைக் ‘காட்டி’ (குறிவைத்து) வளைத்துப் பிடிக்கும்... வேளாமீன் பேப்பு என்றால், மேலே வந்து மண்டல் அடித்து விளையாடும்.”
நெத்திலிக்கு மவுசு:
- பெருவலையில் பருவத்தைப் பொறுத்துப் பலவகை மீன்களும் கிடைக்கும். நெத்திலி மீன் கூட்டத்தைக் கண்டால், பிடித்த மீன்களைக் கடலில் கொட்டிவிட்டு நெத்திலிக்கு பெருவலையை வளைப்போம்’ என்கிறார் கஸ்பார் (1937). உலர்த்திய நெத்திலிக்குத்தான் சந்தை இருந்தது. பெருவலைப் பாடு காலங்கள் பல வகையானவை. கெழுது, வேளா, வாவல், சாவாளை, நெத்திலி, கூனி, கலப்புமீன் (குதிப்பு, குதிப்புக்காரை, பன்னா, குறுமீன், கிளச்சி, ஊறம் போன்ற மீன்களின் கலவை). ஒவ்வொரு வகையும் கரைக்கு வருகிற காலமும், படுகிற பொழுதுகளும் வெவ்வேறானவை.
அக்கறை காட்டிய கடற்குடி:
- பாரம்பரிய மீன்பிடி முறைகள் கடல் வளங்களின் மீது அக்கறை கொள்பவை. விதைநெல்லைப் பாதுகாக்கும் விவசாயியின் விவேகத்துக்கு இணையான அக்கறை இது. சங்கெடுக்கச் செல்வோர் சங்கின் முட்டைகளைக் கொண்ட ‘சங்குப்பூவை’த் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவார்கள். நண்டுகளை அறுவடை செய்பவர்கள் சினை நண்டுகளை விட்டுவிடுவார்கள். கூடுகளை வைத்து மீன் பிடிப்பவர்கள் வளர்ந்த மீன்களை மட்டுமே பிடிக்க முடியும். விடுவலை, பட்டிவலை போன்று கரைகளில் விரிக்கப்படும் வலைகளிலும் அது போலவே.
- கரைகளில் மீன் கூட்டங்களைச் சூழ்ந்து வலைகளை விரிப்பவர்கள், மீன்களைக் கலைத்து நாலாபுறமும் சிதறடிக்கும் விதத்தில் துடுப்புகளால் தண்ணீரில் அடிப்பதுண்டு. பாறை இடுக்குகளில் இருக்கும் மீன்கள் இந்த அதிர்ச்சியைத் தாங்காமல் இறந்துவிடும் என்பதனால் நரிக்குண்டு போன்ற சில கிராமங்களில் துடுப்பால் அடிக்கத் தடை விதித்திருக்கிறார்கள். கடல் சூழலியலைப் பாதுகாப்பதன் மூலம் தங்கள் நீடித்த வாழ்வாதாரத்தை உறுதிசெய்துகொள்ளும் போக்கு, இப்பாரம்பரிய மீனவக் கிராமங்களில் நீடித்துவருகிறது.
ஈழத்து அடைப்பு வலை:
- 1983இல் ஈழத்தமிழ் அகதிகள் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கினர். ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற பல மாவட்டக் கடற்கரைகளில் தஞ்சம் புகுந்த ஈழத்து மீனவர்கள், அவர்களுடைய பாரம்பரிய மீன்பிடி நுட்பங்களை தமிழகக் கடற்கரைகளில் அறிமுகப்படுத்தினர்.
- அதில் ஒன்று அடைப்பு வலை. இடுப்பளவு ஆழத்தில் கட்டுகிற வலை இது. சின்னத்துரை என்கிற ஈழத் தமிழர் நான்கு குச்சிகளை ஊன்றி, உள்ளே போகிற மீன்கள் தப்பிக்க முடியாத அளவில் வலையைச் சுற்றிக் கட்டிக் காண்பித்திருக்கிறார். இரண்டு, மூன்று நாள் களுக்கு ஒருமுறை பட்டி (அரிப்பு) வைத்து மீனைப் படகுக்கு மடை மாற்றுவார்கள்.
- 1985இல் வடக்கு அம்மாப்பட்டினத்தில் (புதுக்கோட்டை) ஈழத் தமிழர்கள் அறிமுகப் படுத்திய அடைப்பு வலை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்க் கடற்கரைகளில் இப்பொழுதும் பரவலான பயன்பாட்டில் உள்ளது. புதுக்கோட்டை மீனவர்கள் கட்டுகிற பட்டி வலையைப் பரம்பு என்பார்கள். அதில் கொடுவா, திருக்கை போன்ற மீன்கள் எளிதில் அகப்படும். ஆனால், ஈழத்து அடைப்பு வலையில் எல்லா வகை மீன்களும் கிடைக்கும்.
அது என்ன மாடி?
- சில்வர் பெல்லீஸ் என்கிற காரல் பொடிகளின் உடலை மூடியிருக்கும் ஜெல்லி போன்ற பொருள் (mucous) அறுவடைக்குப் பிறகு பல மணிநேரம் அந்த மீன்களைக் கெடாமல் வைத்திருக்கிறது. ராமேஸ்வரம் மீனவர்கள் இதை மாடி என்கிறார்கள். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகப் பகுதிகளில் சாலையோரம் கொட்டிக்கிடக்கும் மாடி, வாகனச் சக்கரங்களைத் திணறடிக்கும் என்று பழைய நாள்களை நினைவுகூர்கிறார் பேராசிரியர் பாத்திமா பாபு (தூத்துக்குடி).
- ‘1962இல் நார்வேஜியன் திட்டத்தில் டிராலர் மடிகள் தரப்பட்டபோது காரல்பொடி வகைகளைத்தான் பிடித்தார்கள்’ என்கிறார் பேரின்பம் வாஸ் (தங்கச்சிமடம்). விசைப்படகு உரிமையாளராக இருந்து, மாற்றுத் தொழிலுக்கு நகர்ந்தவர் இவர். இன்று ராமேஸ்வரம் தீவுக் கடலிலோ, தூத்துக்குடியிலோ மாடி என்கிற பொருளை மருந்துக்குக்கூடப் பார்க்க முடியவில்லை. எல்லாம் டிராலர் தொழில்நுட்பம் தந்த வரப்பிரசாதம்!
- ‘1967-68இல் நார்வேக்காரர்களிடமிருந்து இழுவைமடி தொழில்நுட்பத்தை வாங்கி, நமது மீனவர்களிடம் திணித்ததே மத்திய அரசுதான்’ என்கிறார் பேட்ரிக் (பாம்பன்). ‘நாம் இழுவை மடியை இரட்டைமடி, அப்படி இப்படிக் கொஞ்சம் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமே ஒழிய, காலத்தின் போக்குக்குத் தக்கவாறு புதிய/ மாற்றுத் தொழில்நுட்பங்களுக்கு நகரவே இல்லை’ என்பது அவர் வாதம். அவ்வாறு நகர்ந்திருந்தால் கடல் சூழலியலைக் காப்பாற்றியிருக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 10 – 2024)