- கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், இயற்கைவழி வேளாண்மை குறித்த புரிதல் குறைவாகவே இருந்தது. மக்களிடையே மட்டுமல்லாமல், அரசு நிர்வாகத்தின் ஆதரவும் சொல்லிக் கொள்ளும் படி கிடைத்திருக்கவில்லை. இத்தகைய சூழலில் இயற்கைவழி வேளாண்மைக்கான ஒரு களத்தை உருவாக்குவது மிகக் கடினமான பணி. நம்மாழ்வார் போன்ற தனிநபர்களும் சில தனியார் அமைப்புகளும் தன்னார்வத்துடன் இப்பணியில் ஈடுபட்டனர்.
- அதன் விளைவாக இயற்கைவழி வேளாண்மை, மாசில்லாச் சுற்றுச்சூழல், வேதிப்பொருள் கலப்பில்லாத உணவு மீதான அக்கறை போன்றவை இன்றைக்கு ஓரளவுக்கு ஏற்பட்டுள்ளன. 2005இல் மொத்த நாட்டிலும் 41,000 ஹெக்டேர் மட்டுமே இயற்கைவழி வேளாண்மை மேற்கொள்ளப்பட்ட பரப்பளவாக இருந்தது. இன்று தமிழ்நாட்டில் மட்டுமே 31,629 ஹெக்டர் பரப்பளவில் இயற்கைவழி வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
புதிய அமைப்பு
- தொடக்கக் கால இடர்ப்பாடுகளை எல்லாம்எதிர்கொண்டு இதற்கான பாதையை உருவாக்குவதில் ஈடுபட்டதோடு, அதில் பெருமளவுக்கு வெற்றியும் பெற்றுள்ள ஓர் அமைப்பு, இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் (Centre for Indian Knowledge Systems-CIKS). ஆ.வே.பாலசுப்பிரமணியம், கே.விஜயலட்சுமி ஆகியோரால் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த அமைப்பு 1995இல் தொடங்கப்பட்டது.
- மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் பெற 1980களில் பயின்றுகொண்டிருந்த பாலசுப்பிரமணியம், இந்தியப் பாரம்பரிய அறிவியல் மீது நாட்டம் கொண்ட பத்திரிகை யாளராகவும் அதைத் தொடர்ந்து யோகக்கலை ஆசிரியராகவும் ஆனார். வீட்டுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிலந்திகளின் பங்களிப்பு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் விஜயலட்சுமி. இவர்கள் இரண்டு பேரின் முனைப்பில் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களின் ஒத்துழைப்புடன் இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் உருவானது.
வேளாண்மையில் காலடி
- சம காலத்தில் உள்ள சிக்கல்களுக்கு இந்தியப் பாரம்பரிய வழிமுறைகளின்படி தீர்வுகளை முன்வைப்பதும் அவற்றை நடைமுறைப்படுத்த விழைவதும் இதன் நோக்கங்கள். பாலசுப்பிரமணியம்-விஜயலட்சுமி குழுவினரின் இம்முயற்சிகளுக்கான துறையாக வேளாண்மை முதலில் தேர்வானது.
- வேளாண்மையில் ஈடுபடுவோரை இயற்கைவழி உற்பத்திமுறைக்கு வரவைப்பதும், இயற்கை வேளாண் முறைகளைக் கற்பிப்பதும், அவர்கள் விளைவித்த பொருள்களைச் சந்தைப்படுத்துவதும் இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையத்தின் பணிகளாக இன்று நிலைபெற்றுள்ளன.
- வேளாண்மை செய்வது, பாரம்பரிய விதைகளைச் சேகரிப்பது, உழவர் அமைப்புகளை வழிநடத்துவது, இயற்கைவழி விளைபொருள்களை லாபகரமாகச் சந்தைப் படுத்துவது, அவற்றுக்குத் தரச்சான்றிதழ் கிடைக்க உதவுவது போன்ற இம்மையத்தின் பணிகளில் களப்பணியாளர்களிலிருந்து பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரைக்குமான பல்வேறு தரப்பினர் பங்களிக்கின்றனர்.
வேளாண் பள்ளி
- செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல் அருகே சுக்கான்கொல்லை என்கிற ஊரில் இந்த அமைப்புக்கு என வேளாண் பண்ணை உள்ளது. அதில் நெல், வாழை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் இயற்கைவழியில் சாகுபடி செய்யப்படுகின்றன.
- இயற்கைவழி வேளாண்மையைக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு இந்தப் பண்ணை ஒரு பள்ளியாகச் செயல்படுகிறது. இது தவிர, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வேளாண்மைப் பள்ளிகளையும் இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் நடத்திவருகிறது.
- நேரடியாகவும் இந்த அமைப்பால் ஊக்கு விக்கப்படும் தனிநபர்களாலும் மொத்தம் 5,000 ஏக்கர் பரப்பளவில் 2,400 பேர் இயற்கைவழியில் வேளாண்மை மேற்கொண்டுவருகின்றனர். தங்கள் மாணவர்களுக்கு வேளாண் மையைக் கற்பிக்க விரும்பும் பள்ளிகளுக்கும் இம்மையம் உதவுகிறது. இந்த மையம் சார்ந்த பண்ணைகளில் 20 நாள்கள் களப்பயிற்சியுடன் மாணவர்கள் வேளாண்மையைக் கற்கலாம்.
- அருகிவரும் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுப்பது, இதன் பணிகளுள் முதன்மை யானது. ‘நம்ம நெல்லு’ (www.nammanellu.com) என்கிற பெயரில் மரபு நெல் வகைகளைக் கண்டெடுப்பதும் பயிரிடுவதும் சேமிப்பதும் பரப்புவதுமான வேலைகளில் இம்மையம் ஈடுபட்டுவருகிறது.
- வழக்கமான முறையில் விளையும் பொருள்களுக்கே உரிய மதிப்பில்லாத சந்தையில், இயற்கைவழி விளைபொருள் களுக்கு அங்கீகாரமோ உரிய விலையோ எதிர்பார்க்க முடியாத சூழல்தான் நிலவுகிறது. இந்நிலையில் இயற்கைவழி உழவர்களிடமிருந்து உரிய விலை கொடுத்து இம்மையம் விளைபொருள்களைக் கொள்முதல் செய்கிறது.
- செம்புலம் (www.sempulam.com) என்கிற பெயரில் அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. இயற்கைவழி வேளாண்மைக்கான சான்றிதழ் பெறப்பட்ட விளைபொருள்கள், செம்புலம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு அரிசி வகைகள், சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்ட தின்பண்டங்கள் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் வரைக்கும் இதன் விற்பனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வீட்டுத்தோட்டம் அமைக்க விரும்புவோருக்குக் கன்றுகள், விதைகள், உரம், இயற்கைப் பூச்சிவிரட்டிகள் போன்றவற்றையும் இம்மையம் விற்பனை செய்கிறது.
நெல் தகவல் களஞ்சியம்
- இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், 30ஆம் ஆண்டைத் தொட்டதை ஒட்டி சென்னையில் ஒரு கருத்தரங்கு அண்மையில் நடத்தப்பட்டது. இந்த அமைப்பு மீட்டெடுத்துப் பயன்படுத்திவரும் மரபு நெல் வகைகள் குறித்த தகவல் களஞ்சியம் 2020இல் வெளியாகியிருந்தது. அதன் திருத்தப்பட்ட வடிவம், இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.
- இதில் 160 மரபு நெல் வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றின் பண்புகள், பயிரிடப்படுவதற்கான சூழல் தேவைகள், சத்துகள் போன்றவை குறித்த தகவல்களும் தரப்பட்டுள்ளன. இம்மையம், தனது 30 ஆண்டுக் கள அனுபவத்தில் பெற்ற அனுபவச் செறிவோடு செய்முறைகளையும் இந்நூலில் வழங்கியுள்ளது.
- மரபு நெல் வகைகள் நமது உணவுத் தேவையை மட்டுமல்லாது, பிற தேவைகளையும் நிறைவேற்றுபவை. பிச்சவாரி நெல், கால்நடைகளுக்கு ஏற்படும் கழிச்சல் நோயைக் குணப்படுத்தக்கூடியது. குள்ளக்கார் நெற்பயிரிலிருந்து கிடைக்கும் வைக்கோல், கூரை வேய்வதற்கு ஏற்றது. நீலன் சம்பா, குழியடிச்சான் சம்பா போன்ற வகைகள், பாலூட்டும் தாய்மார்களின் உடல்நலனுக்கு உகந்தவை. இதுபோன்ற தகவல்கள், இக்களஞ்சியத்தில் நிறைந்துள்ளன.
- அடுக்குச் சம்பா, அழகுச் சம்பா, ஈர்க்குச் சம்பா, கண்ணாடிக்கூத்தன், கண்ணாடிச்சாத்தன், குற்றாலன், அழகிய மணவாளன் எனப் பள்ளு இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளதாக இக்களஞ்சியம் பட்டியலிடும் 194 வகைகள் நமது மண்ணின் அருமையை உணர்த்துகின்றன. இந்நூல், இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையத்தின் இணையதளமான www.ciks.org/இல் கிடைக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2024)