மரபை மீட்டெடுக்க நந்தவனங்களைக் காப்போம்!
- மனிதனின் ஆரம்ப கால வழிபாடு மரத்திலிருந்து தொடங்கியதை அறிவோம். மரத்திற்கும் மனிதனுக்குமான பிணைப்பு வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. பன்னெடுங்காலமாகப் பல வழிகளில் மனிதச் சமூகம் தாவரங்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. அதில் முக்கியமான ஒன்று கோயில் நந்தவனம்.
- நந்தவனம் என்பது பூஞ்செடிகள் மட்டுமல்லாது இயல் மரங்கள், மூலிகைச் செடிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. பெரும்பாலும் பழங்கால சிவன், பெருமாள், முருகன் கோயில்களில் நந்தவனங்கள் காணப்படும். இவற்றைப் பராமரிக்கவும், அதில் இருந்து எடுக்கப்படும் பூக்களை மாலையாகத் தொடுப்பதற்கும் ‘நந்தவனக் குடி’ என்று ஒரு சமூகமே இருந்துள்ளது.
பலப்பல பயன்கள்:
- பழமையான கோயில்களில் கல்லால் செதுக்கப்பட்ட பூப்பலகையை இன்றும்கூடக் காணமுடியும். நந்தவனங்களில் இருந்து பறிக்கப்பட்ட பூக்கள் இந்தப் பூப்பலகையில் குவிக்கப்பட்டு, அதைச் சுற்றி அமர்ந்து மாலையாகக் கோப்பார்கள். கோயிலில் உள்ள பூப்பலகையின் அளவை வைத்து அக்கோயிலின் நந்தவனத்தின் அளவையும் ஊகிக்க முடியும். கோயில் நந்தவனம் அமைக்க நிலங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டதற்குக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தல மரம் குறிக்கப்பட்டு, அத்தலமரத்தை நந்தவனத்தில் வளர்த்து வழிபடும் நடைமுறையும் உள்ளது.
- நந்தவனத்தில் இருக்கக்கூடிய புன்னை, இலுப்பை போன்ற மர விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. வில்வம், துளசி, அருகம்புல் போன்ற, மூலிகைத் தாவரங்கள் தண்ணீரோடு சேர்க்கப்பட்டு தீர்த்தமாகப் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு பகுதியில் உள்ள இயல் தாவரங்களின் பாதுகாப்பு மையமாகக் கோயில் நந்தவனங்கள் இருந்துவந்தன.
- இன்றும் தெய்வங்களின் பெயர்களை மரங்களின் பெயரோடு இணைத்து வேணுவன நாதர், கடம்பவன நாதர், புன்னைவன நாதர், தில்லை நடராஜர் என்று சொல்லும் வழக்கம் உள்ளது. ஆனால், தற்போது நந்தவனங்கள் இயல்பை இழந்துவிட்டன. கோயில் கட்டுமானம், கலைச் சிற்பம், வரலாறு போன்றவற்றிற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கோயில் தாவரங்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
- பொதுவாகத் தெய்வச் சிலைகளுக்கான சந்நிதிகள் தல மரங்களின் அடியில் வைத்து வழிபடப்பட்டது. குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் திருக்கோயிலில் குறும்பலா மரத்தடியில் லிங்கம் வைத்து வழிபடப்பட்டது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இதற்கு சாட்சி. திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகத்தில் குறும்பலா பதிகம் என்று 11 பாடல்கள் இக்குறும்பலா குறித்துப் பாடப்பட்டுள்ளது.
- இன்றளவும் குறும்பலா மரத்தடியில் குறும்பலா நாதர் வழிபடப்படுகிறார். ஆனால், பல இடங்களில் கோயில் கட்டி எழுப்பித் தெய்வச் சிலைகள் உள்ளே சென்ற பிறகு தலமரங்கள் இரண்டாமிடத்திற்குச் சென்றுவிட்டன. அக்கோயிலின் ஆதாரம் தலமரம்தான் என்பதை அங்கீகரிக்கத் தவறுகிறோம்.
சூழலியல் முக்கியத்துவம்:
- நந்தவனம் என்பது அப்பகுதியில் உள்ள தாவரங்களின் மரபு வங்கியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஓர் ஊரின் பசுமைப் பரப்புக்கு ஆதாரமாக இருக்கிறது. கோயில் நந்தவனங்களில்தான் நெடிதுயர்ந்து வளரக்கூடிய மருதம், இலுப்பை, அரசு, அத்தி, ஆல், கடம்பு போன்ற மரங்களை வளர்க்க முடியும். தனிநபர்கள் தங்கள் வீடுகளில் இதுபோன்ற பரந்து வளரும் மரங்களை வளர்க்க ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
- பலதரப்பட்ட உயிரினங்களின் உணவு, வாழ்விடத் தேவைகளை நந்தவனம் பூர்த்தி செய்துவருகிறது. சிறு பூச்சிகள் தொடங்கிப் பல்லிகள், பறவைகள், பாலூட்டிகள் என நந்தவனத்தில் பலதரப்பட்ட உயிரினங்களைக் காண முடியும். திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில் அமைந்துள்ள பழமையான நந்தவனத்தில் நூற்றுக்கணக்கான சங்குவளை நாரைகள், கூழைக்கடாக்கள், கொக்குகள் கூடமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன.
- ஆயிரக்கணக்கான பழந்தின்னி வெளவால்கள் நந்தவன மரங்களில் தங்குகின்றன. கோயில் நந்தவனங்களில் உள்ள இலுப்பை மரங்களின் இளந்தளிர்கள், பூக்கள், மொட்டுகள், பழங்கள் என ஒவ்வொன்றையும் வெளவால்கள் உணவாகக் கொள்கின்றன. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோயில் நந்தவனம் 2002ஆம் ஆண்டு பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு, இந்தியாவின் முதல் நந்தவனப் பறவைகள் காப்பகம் என்கிற பெருமையையும் பெற்றது. நந்தவனத்தில் உள்ள பெருமரங்கள் கார்பன் தேக்கிகளாகவும் திகழ்ந்து காலநிலை மாற்றத்தைத் தணிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
தற்போதைய நிலை என்ன?
- பெரும்பாலான கோயில்களில் நந்த வனங்கள் சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை, அதற்கென்று முழு நேரத் தோட்டப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை. சில கோயில்களின் நந்தவனங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நந்தவனத்திற்கு என்று தனி இடம் இல்லாத கோயில்களில் பிராகாரத்திலேயே மரங்கள், செடிகள் வளர்க்கப்படும், ஆனால் இப்பிரகாரங்கள் சிமென்ட் தரைகளாக மாற்றப்படும்போது தாவரங்கள் வளர்வதற்கான சூழலற்றுப் போகிறது.
- ஒன்றிரண்டு மரங்கள் இருந்தாலும் அதைச் சுற்றி கான்கிரீட் போடப்பட்டு மழைத் தண்ணீர் அம்மரத்திற்குக் கிடைக்கவிடாமல் செய்யப்படுகிறது. இயல் மரங்கள் தவிர்க்கப்பட்டுத் தவறான புரிதலுடன் நாகலிங்கம் போன்ற அறிமுகப்படுத்தப்பட்ட அயல் மரங்கள் நந்தவனங்களில் பெருகி வருகின்றன. மேலும் வருவாய் ஈட்ட வேண்டும் என்கிற நோக்கில் தென்னை, தேக்கு போன்ற மரங்கள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.
- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 131 பழமையான கோயில்களில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மரங்கள் கணக்கெடுப்பில் 97 சிற்றினங்களைச் சார்ந்த 3,664 மரங்கள் பதிவுசெய்யப்பட்டன. இவற்றில் 19 சிற்றினங்களைச் சார்ந்த மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட அயல் மர இனங்கள். மர எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 95 சதவீத மரங்கள் இயல் மரங்களாக இருந்தது நல்ல செய்தி.
- குறிப்பாக வேம்பு, அரசு, மருதம், வில்வம், மா போன்ற மரங்கள் நூற்றுக்கும் மேல் இருந்தது ஆறுதல். ஆனால் இலுப்பை, புன்னை, மகிழம், காட்டுநெல்லி, சரக்கொன்றை, மாவிலங்கம் போன்ற மரங்கள் 50க்கும் குறைவான எண்ணிக்கையில் பதிவுசெய்யப்பட்டன. குறிப்பாகக் கடம்பு, நறுவிலி, விளா, சந்தனம், ஆச்சா, தான்றிக்காய், எட்டி, கல்லத்தி, வேங்கை, மூங்கில் போன்ற மரங்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் காணப்பட்டது அதிர்ச்சி.
- கடம்ப வனம், புன்னை வனம், வேணு வனம் என்று தாமிரபரணி ஆற்றங்கரையில் பல இடங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், அம்மரங்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும்படியே உள்ளது. கணக்கெடுப்பு மேற்கொண்ட 131 கோயில்களில் 50க்கும் மேற்பட்ட கோயில்களில் ஒற்றை இலக்கங்களிலேயே மரங்களின் எண்ணிக்கை இருந்தது, மேலும் 7 கோயில்களில் மரங்கள் ஒன்றுகூட இல்லை. சில கோயில்களில் நந்தவனம் அமைப்பதற்குப் போதுமான அளவில் இடமிருந்தும் செயல்படுத்தப்படாமல் இருந்ததைக் காண முடிந்தது.
நம்ம ஊரு நந்தவனம்:
- கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட திருப்புடை மருதூர், நெல்லையப்பர், மன்னார் கோயில், ராஜவல்லிபுரம் போன்ற கோயில்களில் நந்தவனம் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு மரங்களின் இனங்கள், எண்ணிக் கைகள் நன்றாக இருந்தன. அதில் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் மெச்சத்தகுந்த வகையில் 43 சிற்றினங்களைச் சார்ந்த இயல் மரங்கள் 104 என்கிற எண்ணிக் கையில் பதிவாகி இருந்தது, ஒரு சில மரங்களைத் தவிர்த்து மீதமுள்ள மரங்கள் அனைத்துமே கடந்த 5 வருடங்களில் வளர்த்தெடுக்கப்பட்டவை.
- கோயில் நிர்வாகத்தோடு ஜவஹர் என்பவரும் அவருடைய நண்பர்களும் இணைந்து மீட்டெடுத்துள்ளனர். இவர்களைப் போன்ற தன்னார்வலர்களை ஈடுபடுத்தி நந்தவனத்தை மீட்டெடுக்க முடியும். இதை முன்மாதிரியாகக் கொண்டு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறையோடு இணைந்து ‘நம்ம ஊரு நந்தவனம்’ என்கிற திட்டத்தினை 2021இல் செயல்படுத்தத் தொடங்கினோம். இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 8 கோயில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- இயல் மரங்கள், மூலிகைத் தாவரங்கள், பூஞ்செடிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நந்தவனமாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அருகிவரும் மரங்களான கடம்பு, நறுவிலி, விளா, ஆச்சா, தான்றிக்காய், செண்பகம், மகிழம், இலுப்பை, புன்னை, எட்டி, கல்லத்தி, வேங்கை, மூங்கில் போன்ற மர வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நம்ம ஊரு நந்தவனத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நந்தவனங்களில் இயற்கை நடை நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கும் மக்களுக்கும் நடத்தப்பட்டு வருகின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 03 – 2025)