TNPSC Thervupettagam

மரம் வளர்ப்புத் திட்டங்கள் ஏன் தோல்வியடைகின்றன

July 29 , 2023 477 days 475 0
  • ஜி 20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருக்கும் இந்த வேளையில் நம் நாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் உள்ள 26 மில்லியன் ஹெக்டேர் காட்டு நிலத்தை மீட்டெடுக்கவும், அதில் காடுகள் - மரங்களின் பரப்பை அதிகரிப்பதன் மூலம் 3 பில்லியன் டன் வளிமண்டல கார்பனை உறிஞ்சவும் மத்திய அரசு ஓர் இலக்கை நிர்ணயித்துள்ளது.
  • பசுமை இந்தியா மிஷன்‌ (GIM‌) உள்ளிட்ட திட்டங்கள்‌ மூலம்‌ வளர்ச்சித்‌ திட்டங்‌களால்‌ பாதிக்கப்படும்‌ காட்டு நிலங்களின்‌ இழப்பை ஈடுசெய்ய கடந்த 5 ஆண்டுகளில் மட்டும்‌ ரூ.55,894 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • தமிழ்நாட்டிலும் பல்வேறு திட்டங்களின் மூலம் காட்டுப் பரப்பு, மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் துறைகளை பொறுத்தமட்டில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி மூலம் முன்னெடுக்கப்படும் மரம் வளர்ப்பு திட்டங்கள், தனியார் துறை சிறப்பு நிதி, தொண்டு நிறுவனங்கள் செயல்படுத்தும் திட்டங்கள், வளிமண்டல கார்பனை கிரகிக்க தூய்மை வளர்ச்சி வழிமுறை (CDM) சார்ந்த திட்டங்களின் மூலம் வளர்க்கப்படும் காடுகள் போன்றவற்றின் கீழ் மரக்கன்று நடும் திட்டம் தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்டுவருகிறது.

சாதனையால் கிடைத்தது என்ன?

  • ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மரக்கன்றுகள் உலகெங்கிலும் நடப்படுகின்றன. நோக்கம் உயரியதாக இருப்பினும் தவறான கருத்தாக்கம், குறைபாடுகளைக் கொண்ட செயல் படுத்தல், மரக்கன்று நடவுக்கு பின் மோசமாக நிர்வகிக்கப்படுவது போன்றகாரணங்களால் இவ்வகை திட்டங்கள் எந்தக் காடுகளையும் வளர்க்கத் தவறிவிடு கின்றன. காடு வளர்ப்புத் திட்டங்கள் உள்பட காலநிலை நெருக்கடிக்கான எந்தவொரு தீர்வும், அதன் வடிவமைப்பு - செயல்படுத்தல் ஆகிய இரண்டிலும் உள்ள சிக்கல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மாற்றங்கள் மேற் கொள்ளப் பட வேண்டும்.
  • அரசாங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செய்துவரும் பெரும்பிழை கின்னஸ் உலக சாதனை, ஆசிய அல்லது இந்திய அளவில் என்கிற அளவுகோல்களை நிர்ணயித்துக்கொண்டு ஒரு நாளில், சில மணி நேரத்தில் பல லட்சக்கணக்கான மரங்களை நட்டு புகழ் தேடிக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
  • மரம் நடுதல் தொடர்பாக ஆழமான புரிதல் இல்லாத தன்னார்வத் தொண்டர்கள் பல லட்சம் நாற்றுகளை வீணடிக்கின்றனர். இந்த வகை முயற்சிகளில் வெற்றிக்கான அளவுகோல் எதுவும் நிர்ணயிக்கப்படுவதில்லை. இதனைத் திட்டமிடுபவர்களோ, செயல்பாட்டாளர்களோ, சாதனை சான்றிதழ் வழங்குபவர்களோ அல்லது அங்கீகரிப்பவர்களோ இவ்வகை திட்டங்களில் நடப்படும் மரக்கன்றுகள் எந்த வகையைச் சேர்ந்தவை, நடப்படும் முறைகள், நடவிற்குப் பிந்தைய பாசனம் - பாதுகாப்பு போன்ற எந்த அம்சத்தையும் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.
  • அரசாங்கங்கள், பெரிய நிறுவனங்கள் முன்னின்று செயல்படுத்தும் காடு வளர்ப்புத் திட்டங்கள் தோல்வியுறும்போது, அந்தத் தோல்வி ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. ஏனெனில், இது குறித்து சுதந்திரமான தணிக்கை எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

கடலோரத் திட்டங்களின் தோல்வி: 

  • உயரும் கடல் அலைகளிலிருந்து கடல் அரிப்பைத் தடுக்கும் முயற்சியில், கடற்கரையோரங்களில் பெரிதும் உதவிகரமாக உள்ள சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. சதுப்பு நிலக் காடுகளை உருவாக்குவது சார்ந்த வெற்றி விகிதம் வெறும் 15-20% மட்டுமே. அலையாத்தி காடுகள் / கண்டல் காடுகள் என்று அழைக்கப்படும் மாங்குரோவ் காடுகளை மீளுருவாக்கும் செயல்பாடுகளில் நீரியல், நீர்வளப் புவியியல் பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லாமலும், அதற்கான சிறப்புத் தேவைகளை மேற்கொள்ளாமலும் அலையாத்தி மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
  • ஒவ்வோர் இடத்துக்கு ஏற்பவும், அப்பகுதியில் நன்னீர் கிடைப்பதற்கான முன்னேற்பாடு செய்யப்படாமல் நடப்படும் திட்டங்கள் 90 சதவீதம் தோல்வியிலேயேமுடிவடைகின்றன. இது போன்ற திட்டங்கள் வெற்றியடைய திட்டமிடல், அறிவியல் பூர்வமான நில சீரமைப்பு, நடவுக்குப் பிந்தைய பராமரிப்புத் திட்டங்கள் மிக இன்றியமையாதவை.
  • மற்றொரு பெரிய பிரச்சினை உள்ளூர் மக்களுடனான இணக்கமான உறவு இல்லாதது. திட்ட விளம்பரதாரர்கள் உள்ளூர் மக்களிடம் அவர்களுக்கு என்ன மரங்கள் வேண்டும், எங்கு நட வேண்டும் என்று கேட்பதில்லை. இதனால் உள்ளூர்வாசிகள் இந்தத் திட்டங்கள் சார்ந்து பெரும்பாலும் பாராமுகமாக நடந்துகொள்வதில் ஆச்சரியமில்லை.

நகர்ப்புறக் குழப்பங்கள்:

  • நகர்ப்புறங்களில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் அரசு-தனியார் துறைகளின் கூட்டு முயற்சித் திட்டங்களில் போதுமான திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக இடங்கள் தேர்வு செய்யபடுகின்றன. மரக்கன்றுகளும் அவசரமாக நடப்பட்டு தனியார் வசம் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டு விடுகின்றன. இப்படிக் கோலாகலமானவிழாவாகத் தொடங்கி நடப்பட்ட இடங்கள், பிறகு பராமரிப்பின்றி விடப்படுவதும் நடக்கிறது.
  • திட்டங்கள் தோல்வியில் முடியும்போது பொறுப்பு துறக்கப்படுவதும், பரஸ்பரம் பழி சுமத்துதலும் நடக்கின்றன. இந்த நிலை மாற முறையான கூட்டுத் திட்டமிடல், முழு திட்ட அறிக்கை உருவாக்குதல், போதுமான நிதி ஆதாரங்கள் போன்றவை அவசியம். இவை இல்லாமல் எந்த ஒரு மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்பட்டாலும் முழு வெற்றி கிடைக்கப்போவது இல்லை.
  • மரம் நடும் பெருந்திட்டங்களில் அதிகம் ஏற்படும் மற்றுமொரு குளறுபடி இடத்தேர்வு. நகர்ப்புறங்களில் இடத்தேர்வுசெய்யப்படும்போது சம்மந்தப்பட்ட துறைகளுடனோ அல்லது இதர சேவை வழங்கும் நிறுவனங்களுடனோ போதுமான ஆலோசனை நடத்தப்படுவது இல்லை.
  • நீண்ட கால அடிப்படையில் தீட்டப்படும் திட்டங்களுக்கு கூட்டு திட்டமிடுதல் நடைபெற்று இடத் தெரிவு நடைபெற்றால், இது போன்ற குறைபாடுகளைக் களையலாம். இது ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கும் பொருந்தும். பல்வேறு காரணங்களுக்காக மரம் நடப்பட்ட இடங்கள் சமரசம் செய்யப்பட்டு நிலப்பயன்பாடு மாற்றப் படுகிறது. இந்த வித இழப்பை ஈடுசெய்ய விதிக்கப்படும் நிபந்தனைகள் 99 சதவீதம் நிறைவேற்றப்படுவதில்லை.
  • கடந்த 2021 முதல் தனிநபர்கள் - நிறுவனங்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுவதை நிறுத்த கேரள வனத்துறை முடிவுசெய்துள்ளது. மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பதில் மக்கள் அக்கறை காட்டாததாலேயே, இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.
  • ஏனெனில் 95% மரக்கன்றுகள் நடுவதற்கு முன்பே வீணாகிவிடுகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரிதா ஹரத்தின்போது மேற்கொள்ளப்பட்ட விதைப் பந்துவீச்சு தெலங்கானா நிலத்தின் கம்மம், பத்ராத்ரி-கொத்தகுடம் மாவட்டங்களில் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அதனால், அப்பணியை இந்த ஆண்டு அரசு நிர்வாகம் கைவிட்டுள்ளது. விதைப்பந்துகளின் வெற்றி விகிதம் வெறும் 10 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • நாம் மேற்கொள்ளும் மரக்கன்று நடும் நடவடிக்கைகள் உரிய பலனளிக்காத போது தேவையற்ற கால விரயம், பண விரயத்தைச் செய்கிறோம். அதையும்தாண்டி காலநிலை மாற்ற விளைவுகளுக்கு எதிராகச் சரியான நடவடிக்கை எடுக்க நமக்குக்கிடைத்திருக்கும் ஒவ்வொரு நாளையும் தவறவிடுகிறோம். இத்தகைய முயற்சிகளும் அவற்றின் தொடர் தோல்விகளும் உலகம் முழுவதும் அடிக்கடி நடக்கின்றன. நீண்டகால அளவில் பயன்தராத இத்தகைய செயல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் அல்லது முறைப்படுத்தப்பட வேண்டும்.
  • அது மட்டுமல்லாமல் தோல்வியுற்ற காடு வளர்ப்புத் திட்டங்கள் தொடர்கதையாகும்போது, காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நம்பகமான வழிமுறையான மரம் நடும் முயற்சிகளை மக்களும் நிறுவனங்களும் குறைத்து மதிப்பிடுவதற்கான சாத்தியமே அதிகம். காடு மீளுருவாக்கத்தை அதிகரிப்பதற்கு முழுமையான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி: இந்து தமிழ் திசை (29–07–2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories