மராட்டியத்தில் மகுடம் யாருக்கு?
- அளவில்லா மசாலா அம்சங்களைக் கொண்ட பாலிவுட் திரைப்படங்களை நினைவுபடுத்துகிறது மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் களம். இன்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் சபதம், பாசப் போராட்டம், பழிவாங்கும் வேட்கை, ஏமாற்றம், துரோகம், உள்ளடி வேலைகள், வைராக்கியம் என ஏகப்பட்ட அம்சங்கள் காணக்கிடைத்தன.
பின்னடைவும் பாய்ச்சலும்:
- 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவைத் தந்த மாநிலங்களில் மகாராஷ்டிரம் முக்கியமானது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாஜக ஒன்பது இடங்களிலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஏழு இடங்களிலும் வென்றன. திகைத்துப்போன மகாயுதி கூட்டணி அரசு, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ‘முக்யமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா’ திட்டத்தைக் கொண்டுவந்தது.
- வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் அந்தத் திட்டத்துக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை எதிர்க்கட்சிகள் தட்டின. பலனில்லை. இப்படியான திட்டங்கள், தங்கள் சரிவைத் தவிர்க்கும் என உற்சாகமடைந்த மகாயுதி கூட்டணி, முன்பைவிட கூடுதல் சுறுசுறுப்புடன் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது.
- அதேவேளையில், மகாயுதி கூட்டணியில் ஏகப்பட்ட குழப்பங்கள். தான்தான் அடுத்த முதல்வர் என்பதில் தேவேந்திர ஃபட்னவீஸ் உறுதியாக இருக்கிறார். மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 140 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதன் மூலம் முதல்வர் பதவி தங்களுக்கே என்பதை பாஜக மறைமுகமாக உணர்த்திவிட்டது.
பழிதீர்க்கும் தருணம்:
- மகா விகாஸ் அகாடி கூட்டணியைப் பொறுத்தவரை, முதல்வர் நாற்காலி மீது உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கண் இருக்கிறது. இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொண்ட பிறகும், ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையிலும் தேர்தல் பிரச்சாரத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டார் உத்தவ் தாக்கரே.
- “என் கடைசி மூச்சு இருக்கும் வரை மகாராஷ்டிரத்தைக் காப்பாற்றப் போராடுவேன்” என்று சூளுரைத்திருக்கிறார். அதேபோல், அரசியல் அதிகாரத்துக்காகக் குடும்பத்தை உடைத்தார் என்று அஜித் பவாரைப் பற்றி ஆதங்கத்துடன் பேசினார் சரத் பவார். இந்தத் தேர்தலில் வெல்வது சரத் பவாருக்குக் கெளரவப் பிரச்சினை மட்டுமல்ல; மகள் சுப்ரியா சுலேவின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் வாய்ப்பும்கூட.
சர்ச்சைப் பேச்சும் சங்கடமும்:
- சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மகா விகாஸ் அகாடி கூட்டணி அறிவித்த நிலையில், “இது இந்துக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி. இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பாஜக தலைவர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
- ‘கட்டேங்கே தோ பட்டேங்கே’ (ஒற்றுமையாக இல்லையென்றால், அழிக்கப்பட்டுவிடுவோம்) என யோகி ஆதித்யநாத்தும், ‘ஏக் ஹைன் தோ, சேஃப் ஹைன்’ (ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்) எனப் பிரதமர் மோடி முன்வைத்த முழக்கமும் - முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கமான இந்து அணிதிரட்டல்கள் என்றே பார்க்கப்படுகின்றன.
- பாஜகவுடன் கைகோத்திருந்தாலும் மதச்சார்பற்ற கட்சி என்கிற பிம்பத்தை விட்டுவிட விரும்பாத அஜித் பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் கட்சி, இதை வெளிப்படையாகவே கண்டித்தது. அஜித் பவார் கட்சியின் சார்பில் முஸ்லிம்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- இன்னொரு புறம், யோகி, மோடி பேச்சுக்களை பாஜகவைச் சேர்ந்த பங்கஜா முண்டே, அசோக் சவான் போன்ற தலைவர்களே எதிர்த்தனர் என்பது தனிக்கதை. ஏக்நாத் ஷிண்டேவைப் பொறுத்தவரை, தான் பாஜகவின் கைப்பாவை அல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.
- பட்டும்படாமலும் காய் நகர்த்துகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவுக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கெளதம் அதானி இல்லத்தில் நடைபெற்றதாகவும், சரத் பவார், அமித் ஷா, பிரஃபுல் படேல் உள்ளிட்டோருடன் அதானியும் அதில் கலந்துகொண்டதாகவும் ஒரு இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் அஜித் பவார் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. தேசியவாத காங்கிரஸுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என்றாலும் அதானி குறித்து அஜித் பவார் கூறியது உண்மை அல்ல என்று ஃபட்னவீஸ் விளக்கமளித்தார்.
வினையும் எதிர்வினையும்:
- தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்படுவதுபோல, மகாராஷ்டிரத்திலும் வழங்கப் பரிந்துரை செய்யப்போவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது பாஜகவுக்கு வாகான ஆயுதமானது. முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடை செய்ய ‘வோட் ஜிகாத்’தைக் காங்கிரஸ் கொண்டுவருதாக ஃபட்னவீஸ் விமர்சித்தார். சோலாப்பூரில் பிரச்சாரத்தின்போது ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைஸியும் அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைஸியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தேர்தல் ஆணையத்துக்கு சிவசேனா (ஷிண்டே) கடிதம் எழுதியது.
சாதி மதக் கணக்குகள்:
- தமிழ்நாட்டில் இருப்பதுபோல, மகாராஷ்டிரத்திலும் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50%ஐத் தாண்டி அதிகரிக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது. மராத்தா இடஒதுக்கீடு கோரிப் போராட்டம் நடத்திய மஜோன் ஜராங்கே பாட்டில், மகா விகாஸ் அகாடி, மகாயுதி இரண்டுமே மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முன்வரவில்லை என்று பேசிவருபவர். இவர் தனது ஆதரவாளர்களைத் தேர்தலில் நிறுத்தியது பேசுபொருளான நிலையில், திடீரென அந்த முடிவைத் திரும்பப் பெற்றார்.
- மராத்தாக்கள், தலித்துகள், முஸ்லிம்களுக்கு இடையிலான ஒற்றுமை குலைந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்ததாக விளக்கமளித்தார். உண்மையில், சரத் பவாரின் வேண்டுகோளுக்கு இணங்கியே பின்வாங்கினார் எனப் பேசப்படுகிறது. இதன் அனுகூலம் மகா விகாஸ் அகாடிக்குக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
- மகாராஷ்டிர சிறுபான்மையினரைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் கிறிஸ்துவர்கள். எனினும், மாநிலச் சிறுபான்மையினர் ஆணையத்தின் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவர்கூடக் கிறிஸ்துவர் அல்ல என்பதால், அம்மதத்தினர் ஷிண்டே அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். இதன் பலன் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்திந்திய கிறிஸ்துவ சங்கம் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துவிட்டது.
- ஆர்எஸ்எஸ்-ஐச் சார்ந்திருக்கும் தேவை பாஜகவுக்கு இல்லை என்கிறரீதியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியது 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜகவுக்குப் பின்னடைவைத் தந்தததாகப் பேசப்படுகிறது. ஆர்எஸ்எஸ்ஸுடன் நெருக்கமான உறவைப் பேணும் ஃபட்னவீஸ் இந்த முறை பிணக்கைத் தீர்த்துவிட்டார் என்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-சின் சகாயம் மீண்டும் கிட்டியிருப்பது பாஜகவுக்குப் பலம் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது.
- முக்கியப் பிரச்சினைகள்: விதர்பா பகுதியில் விவசாயிகள் பாஜக மீது அதிருப்தியில் இருக்கின்றனர். வெங்காயம், சோயாபீன்ஸ், பருத்தி, கரும்பு போன்ற பயிர்களுக்கான கொள்முதல் விலை மிகக் குறைவு எனக் குமுறும் விவசாயிகளைக் கவர, மகா விகாஸ் அகாடி கூட்டணி முயல்கிறது. ஒவ்வொருவருக்கும் ஏழு கிலோ உணவு தானியம், 450 ரூபாய்க்கு சிலிண்டர், ரூ.15 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு எனப் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்திருக்கிறது.
- மகாராஷ்டிரத்தின் முதன்மையான குடிமக்கள் பழங்குடிகள்தான் என்றும் 8,500 பழங்குடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் ஷிண்டே அறிவித்திருக்கிறார். ஆனால், 2006இல் கொண்டுவரப்பட்ட வன உரிமைச் சட்டத்தில் பழங்குடிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தை, பாஜக அரசு நீர்த்துப்போகச் செய்துவிட்டதாகக் காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.
- மகாராஷ்டிரத்துக்கு வரவேண்டிய தொழில் நிறுவனங்களையும் வேலைவாய்ப்புகளையும் குஜராத்துக்கு பாஜக கவர்ந்துசென்றதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. தேர்தல் பிரச்சார கடைசி நாள் செய்தியாளர் சந்திப்பில் அதானி - மோடி குறித்து அதிரடியாக ராகுல் பேசியது பாஜகவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், சரியான பதிலடி தரவும் அக்கட்சியினர் தயங்கவில்லை.
- ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில்தான் தான் வளர்ந்ததாக அதானியே குறிப்பிட்டதாக பாஜவினர் சுட்டிக்காட்டினர். கூடவே, அதானியுடன் ராபர்ட் வத்ரா, சசி தரூர் உள்ளிட்டோர் இருக்கும் ஒளிப்படத்தையும் வெளியிட்டனர். ராஜஸ்தானில் அசோக் கெலாட் முதல்வராக இருந்தபோதும், தெலங்கானாவின் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியிலும் அதானி குழுமத்துடன் கையெழுத்தான வணிக ஒப்பந்தங்களையும் பட்டியலிட்டிருக்கிறது பாஜக.
- கூட்டத்தில் அதானியுடன் சரத் பவாரும் அமர்ந்திருந்ததாக அஜித் பவார் கூறியிருந்த நிலையில், ராகுலின் இந்த உத்தி எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்திஇருக்கிறது சமீபத்தில் நடைபெற்ற ஹரியாணா சட்டமன்றத் தேர்தலைப் போலவே மகாராஷ்டிரத்திலும் முன்பைவிட அதிக இடங்கள் கிடைக்கும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அது நம்பிக்கையா, ஆரூடமா என 23ஆம் தேதி தெரிந்துவிடும்!
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 11 – 2024)