TNPSC Thervupettagam

மருதுபாண்டியர்கள்: புரட்சியின் நாயகர்கள்

October 25 , 2021 1125 days 630 0
  • ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி இந்திய நிலப்பரப்பின் பெரும்பகுதியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு, 18-ம் நூற்றாண்டில் பெரும் வெற்றியையும் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் உள்நோக்கத்தை அறிந்து, அவர்களுக்கு எதிரான உரிமைக்குரல் ஒலிக்கத் தொடங்கியது.
  • ஆங்கிலேயரின் அரசியல் அதிகார ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக, தெற்கில் மைசூர் பகுதியில் ஆட்சிபுரிந்த திப்பு சுல்தான் தலைமையில் ஒரு அணி உருவானது. திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக பிரான்ஸ் நாட்டுடன் தொடர்புகொண்டு, தன் அணிக்கான ராணுவ வலிமையைப் பெருக்கிக்கொள்ள முயற்சி மேற்கொண்டார். ஆனால், ஐரோப்பாவில் உருவான திடீர் திருப்பங்களால் வரலாறு திசைமாறிப்போயிற்று.
  • பிரான்ஸிலிருந்து இங்கு அனுப்பிவைப்பதாக நெப்போலியனால் வாக்குறுதி தரப்பட்ட பிரான்ஸ் ராணுவம், அங்கு இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக இங்கு அனுப்பிவைக்கப்படவில்லை. ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களாலும், முறையாகப் பயிற்சிபெற்ற ராணுவத்தாலும், இங்குள்ள சில சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள் விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகம் செய்து காட்டிக்கொடுத்தமையாலும் அப்போது நடைபெற்ற ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் முதல்கட்டமாக பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன் ஆகிய தலைவர்கள் வீரமரணத்தைக் களத்தில் சந்தித்தார்கள்.
  • இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாகத் தென்பகுதியில் சிவகங்கைச் சீமையில் மருதுபாண்டியர்கள் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிரான போர்க் கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டது. ஆங்கில ஆட்சிக்கு எதிரான சுதேசித் தலைவர்களான கர்நாடகத்தின் சிமோகா பகுதியைச் சார்ந்த தூண்டாஜ் வாஹ், கேரளவர்மா வேலுத்தம்பி, ஆந்திரத்தின் கிருஷ்ணப்ப நாயக்கர், விருப்பாட்சி கோபால் நாயக்கர், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோர் ஒன்றுகூடி ஒரு கூட்டணியை உருவாக்கியதோடு, ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில், மக்களே ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களை அழித்தொழிக்கும் ‘மக்கள் புரட்சியாக அதை மாற்றிடத் திட்டமிட்டார்கள்.
  • இந்த மக்கள் புரட்சிக்குத் திட்டமிட்ட மருதுபாண்டியர்கள் தலைமையிலான போராட்டக் குழுத் தலைவர்கள், அமெரிக்க சுதந்திரப் போராட்டம் பற்றியும் பிரான்ஸில் நடைபெற்ற ‘மக்கள் புரட்சி பற்றியும் அறிந்து வைத்திருந்தார்கள். அமெரிக்காவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் 1775 ஆண்டு முதல் 1783 வரை என்பதும், பிரான்ஸில் நடைபெற்ற மக்கள் புரட்சி 1789 முதல் 1799 வரை என்பதும் வரலாற்றுச் செய்திகளாகும்.
  • எனவே, அமெரிக்க சுதந்திரப் போராட்டமும், பிரான்ஸின் மக்கள் புரட்சியும், இங்கு ஆங்கிலேயருக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட மக்கள் புரட்சியும் 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்ற புரட்சிகரமான போராட்டங்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!
  • வஞ்சகமும் துரோகமும் சுயநலமும் ஆங்கில அதிகாரவர்க்கத்தால் உற்சாகப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், மக்களின் ஆயுதம் தாங்கிய புரட்சிதான் ஆங்கில ஆக்கிரமிப்பை வேரறுக்க முடியுமென மருதுபாண்டியர்கள் கருதினார்கள். எனவே, நாடு முழுவதும் ஒரே காலகட்டத்தில் திட்டமிட்டபடி, ஆயுதம் தாங்கிய மக்கள் கிளர்ந்தெழுந்து புரட்சியில் ஈடுபடுவார்களேயானால், கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ பலம் சிதறிப்போய்விடும், மக்கள் புரட்சியின் மூலம் வெற்றி காண முடியும் என்று திட்டமிட்டது மருதுபாண்டியர்கள் தலைமையிலான போர்க் கூட்டமைப்பு.
  • அதன்படி, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர்ப் பிரகடனத்தைத் திருவரங்கம் கோயிலிலும், ஆற்காடு நவாப் அரண்மனைக் கோட்டை வாயிலிலும் ஒட்டிப் பிரகடனப்படுத்தினார்கள். இந்த போர்ப் பிரகடனத்தின் மூலம் அனைத்து மக்களும், ஆயுதங்களோடு ஆங்கிலேயர்களை எதிர்த்து அணிதிரள வேண்டும், அவர்களை ஆங்காங்கு அழித்தொழிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்கள், அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியிருந்தார்கள்.
  • இந்த போர்ப் பிரகடனம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த லட்சியங்களையும் தொலைநோக்குப் பார்வையையும் உள்ளடக்கியது மட்டுமல்ல... நாட்டின் விடுதலைக்காகவும், ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்துவதற்காகவும் சர்வதியாகத்துக்கும் எப்போதும் தயார் என்கிற ஆழமான நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதும்கூட. ‘ஜம்பு தீவிலும், ஜம்பு தீபகற்பத்திலும் (தென்நாட்டிலும் – நாட்டின் வடபகுதியிலும்) வாழும் சகல சாதியினரும், பிராமணர்களும், சத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், முசல்மான்களும் ஒன்றுபட்டு ஐரோப்பியர்களை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஆயுதம் ஏந்தவேண்டுமென அந்தப் போர்ப் பிரகடனம் வலியுறுத்தியது.
  • இந்த போர்ப் பிரகடனத்தின் இறுதியில் சின்ன மருதுபாண்டியர் கையொப்பமிடும்போது, ‘பேரரசர்களின் ஊழியன் ஐரோப்பிய இழிபிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத மருதுபாண்டியன் எனக் கையொப்பமிட்டார். ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக மக்கள்புரட்சியை ஒருங்கிணைத்துத் தலைமையேற்று நடத்திய மருது சகோதரர்களின் உருவச் சிலைகள் தலைநகர் சென்னையில் நிறுவப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தமிழ் மண்ணின் புரட்சி வரலாற்றை வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் நன்முயற்சி.

நன்றி: தி இந்து (25 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories