TNPSC Thervupettagam

மருத்துவ உலகம் கடந்துவந்த பாதை

December 30 , 2023 203 days 193 0
  • 2023 ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், இவ்வாண்டில் நிகழ்ந்த முக்கிய மருத்துவ நிகழ்வுகளில் சில:

உறுப்பு தானத்துக்கு அரசு மரியாதை

  • உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கிவருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு அடைந்த துயரான நிலையிலும் அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகத்தால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
  • உடல் உறுப்புகளைத் தானமாக அளித்துப் பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தைப் போற்றிடும் வகையில் இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, அதைச் செயல்படுத்திவருகிறது.

விலங்குகளுக்கு மாற்றாகத் தொழில்நுட்பம்

  • நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு மருந்தும் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகுதான் நம்மை அடைகிறது. புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அது மனிதகுலத்துக்குப் பயன்படுமா, பாதுகாப்பானதா, பக்க விளைவுகளை உண்டாக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள முதலில் விலங்குகளுக்கு அதைக் கொடுத்துப் பார்த்து முடிவுகள் திருப்தியாக இருந்தால் மட்டுமே பயன்பாட்டுக்கு வரும். இதுதான் இந்தியாவில் இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) இதுவரை செயல்படுத்திவந்த நடைமுறை. ஆனால், இதில் புதிய மாற்றத்தை இந்திய அரசு இந்த ஆண்டு கொண்டுவந்துள்ளது.
  • இந்த ஆண்டின் ஆரம்பத்தில் புதிய மருந்துகள் - மருத்துவ முன் ஆய்வுகள் 2023’ (New Drugs and Clinical Trial Rules, 2023) சட்டத்தில் மத்திய அரசு ஒரு திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி, ‘இனிமேல் புதிய மருந்து எதையும் விலங்குகளிடம் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்குப் பதிலாக உயிரினங்கள் இல்லாத நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்என்று அறிவுறுத்தியுள்ளது.

நோபல் பரிசு

  • கரோனா பாதிப்பு களைத் தடுக்க எம்ஆர்என்ஏ (messenger RNA) கரோனா தடுப்பூசி உருவாக்கத்துக்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக 2023ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு காட்டலின் கரிகோ (Katalin Kariko), ட்ரூ வைஸ்மேன் (Drew Weissman) ஆகிய இருவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டது.
  • உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புடன் எம்ஆர்என்ஏ மரபுக்கூறுஎவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பது பற்றிய புரிதலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய தத்துவத்தைப் புகுத்தி இருவரும் மேற்கொண்ட ஆய்வு கரோனா தடுப்பூசியை உருவாக்க உதவியது.

பாரம்பரிய மருத்துவத்துக்குப் பாராட்டு

  • 2023ஆம் ஆண்டு ஜி 20 அமைப்பு மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது. இதில் ஜி 20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் பங்கேற்றார்.
  • நிகழ்வில் அவர் பேசும்போது, “ இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் மிக நீண்ட வரலாறு கொண்டவை. ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் மிகச் சிறந்தவை. இந்த மருத்துவ முறைகள் நல்ல பலன் அளிக்கின்றனஎனப் பாராட்டு தெரிவித்தார்.

மக்களைத் தேடி மருத்துவம்

  • இந்தியாவில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் தமிழக அரசு 2021இல் மக்களைத் தேடி மருத்துவம்என்கிற திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது.
  • ஜூலை மாதத் தரவின்படி இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 55 ஆயிரத்து 514 பயனாளிகளுக்கு முதன்முறை சேவைகளும் 3 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரத்து 880 நபர்களுக்குத் தொடர் சேவைகளும் வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு பாதியாகக் குறைந்திருப்பதாக மாநிலத் திட்டக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறையும் குழந்தை பிறப்பு விகிதம்

  • கிழக்காசிய நாடுகளான ஜப்பான், தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் தொடர்ந்து 7ஆவது ஆண்டாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. ஜப்பானில் கடந்த ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் 1.2656ஆக இருந்தது.
  • குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இரண்டு நாடுகளின் அரசுகளும் ஈடுபட்டுள்ளன. மேலும், தங்கள் நாட்டுக் குடிமக்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்குப் பல சலுகைகளையும் அவை அறிவித்துள்ளன.

மீண்டும் நிபா

  • கேரளத்தில் 2023இல் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியது. கேரளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 2018இல் முதன் முறையாக நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அப்போது 23 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்தனர். 2019, 2021ஆம் ஆண்டுகளில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் இறந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டும் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
  • அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைச் சோதனை செய்ததில் நிபா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், உயிரிழந்தவர்களுடன் தொடர்பில் இருந்த இருவருக்கும் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த நான்கு பேருடனும் தொடர்பில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 168 பேர் கண்டறியப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதிகரிக்கும் காற்று மாசு

  • இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசு தீவிர சுகாதாரப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. காற்று மாசு குறுகிய / நீண்டகால நோய்பாதிப்புகளைக் கொண்டிருக்கிறது. காற்று மாசினால் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • மேலும் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நரம்பியல் பாதிப்பு பிரச்சினைகளால் இளம் தலைமுறையினர் பாதிப்புக்குள்ளாவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடு

  • ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது உலகம் முழுவதும் அதிகரித்துச் சுகாதார நெருக்கடியாகவே அணுகப்படுகிறது. அந்த வகையில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 36 லட்சம் குழந்தைகள் பயின்றுவருகின்றனர்.
  • இக்குழந்தைகளுக்கு மருத்துவத்துறை, சுகாதாரத்துறை சார்பில் மருத்துவப் பரிசோதனைகளை அரசு மேற்கொண்டது. இதில் 1,11,000 குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இக்குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை உறுதிசெய்திடும் வகையில் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழக்கப்பட்டுவருகிறது.

அறுவை சிகிச்சையில் ஒரு புதுமை

  • ரத்தம் சிறிதும் வழங்கப்படாமல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இதய மாற்று அறுவைசிகிச்சை மருத்துவத் துறையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆசியாவிலேயே முதல் முறையாக அகமதாபாத்தில் உள்ள மேரிங்கோ சிம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களால் இந்தச் சாதனை புரியப்பட்டுள்ளது.
  • அறுவைசிகிச்சையில் அடுத்தவரின் ரத்தம் பரிமாற்றம் செய்யப்படும்போது சில ஆபத்துகளும் சிக்கல்களும் ஏற்படுகின்றன. அவற்றைத் தவிர்க்க இந்தப் புதுமையான ரத்தம் இல்லா இதய மாற்று அறுவைசிகிச்சை உதவுகிறது. அறுவை சிகிச்சைத் துறையில் இந்த முன்னேற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அதிகரிக்கும் கரோனா

  • இந்தியாவில் மீண்டும் கரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் உயர்ந்துவருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ஜேஎன்.1 வைரஸின் புதிய மாறுபாடு, நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52% அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories