TNPSC Thervupettagam

மருத்துவ நோபல் 2019: மகத்துவம் என்ன?

October 21 , 2019 1916 days 1159 0
  • இந்த அழைப்புகள் வருங்காலத்தில் காணாமல்போகலாம்: “உங்களுக்கு ரத்தம் குறைவாக இருப்பதால், சில பாட்டில்கள் ரத்தம் ஏற்ற வேண்டும். ரத்தம் வழங்கும் கொடையாளர்களை அழைத்துவாருங்கள்.” “உங்களுக்கு மாரடைப்பு வந்திருக்கிறது. இரண்டு ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறது. இரண்டு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா?” – இந்த ஆலோசனைகள் இனி குறைந்துவிடும்.
  • “உங்கள் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையும் கதிர்வீச்சு சிகிச்சையும் தேவைப்படும். அவற்றுக்கெல்லாம் உடல் ஒத்துழைத்தால் மட்டுமே நோய் குணமாகும்.” – இப்படியான அச்சுறுத்தல்கள் இனி இருக்காது. எப்படி? இந்த ஆண்டில் மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்றுள்ள புதிய கண்டுபிடிப்புகள் வழியாக இவை சாத்தியப்படலாம்.
  • உடல் செல்களின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் ஆதார ஊற்று ஆக்ஸிஜன். இதன் அளவு குறைந்தாலும் கூடினாலும் ஆபத்து. அதேநேரம், நம் எல்லோருக்கும் ஒரே அளவில் ஆக்ஸிஜன் இருப்பதில்லை என்பதும் உண்மை. ஆக்ஸிஜன் குறைவாக இருந்தாலும் நம்மால் உயிர்வாழ முடிகிறது.
  • எப்படி? உடலில் ஆக்ஸிஜன் குறையும்போது, நம் கழுத்தில் உள்ள ‘கரோட்டிட் பாடி’ என்னும் அமைப்பு அதை அறிந்து, மூளையைத் தூண்டி நம்மை வேகமாகச் சுவாசிக்க வைக்கிறது. இதனால், நமக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடுகிறது. இது முன்பே தெரிந்த விஷயம். இந்தக் கண்டுபிடிப்புக்கு 1938-ல் நோபல் பரிசு கிடைத்தது.

ஆக்ஸிஜன் விநியோகிப்பு

  • அடுத்து, நாம் காஷ்மீர், குலுமணாலி போன்ற உயரமான மலைப் பிரதேசங்களுக்குச் செல்கிறோம். அங்குள்ள காற்றுமண்டலத்தில் ஆக்ஸிஜன் எப்போதும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அங்கேயும் நம்மால் தங்கவும் தொடர்ந்து வசிக்கவும் முடிகிறது.
  • எப்படித் தெரியுமா? சிவப்பு ரத்த அணுக்கள் நம் செல்களுக்கு ஆக்ஸிஜனை விநியோகிக்கும் வியாபாரிகள். ரத்தக் குழாய் வழியாக உடலில் பயணித்து, தேவைப்படும் இடங்களுக்கு ஆக்ஸிஜனை விநியோகிப்பது இவற்றின் பணி.
  • உயரமான இடங்களில் இருக்கும்போது நம் சிறுநீரகங்களில் எரித்ரோபாய்ட்டின் எனும் ஹார்மோன் வழக்கத்துக்கு மாறாகக் கூடுதலாகச் சுரக்கிறது. அது சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. உடலில் புதிய ரத்தக் குழாய்களும் பிறக்கின்றன. இதன் பலனாக செல்களுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன் கிடைத்துவிடுகிறது. இதுவும் சென்ற நூற்றாண்டின் கண்டுபிடிப்புதான்.
  • இதுவரை தெரியாமல் கண்ணாமூச்சி காட்டிய விஷயங்கள் இரண்டு. ஆக்ஸிஜன் பற்றாக்குறையைச் சிறுநீரகச் செல்கள் எப்படி ‘உளவுபார்த்து’ உணர்ந்துகொள்கின்றன? இருக்கிற ஆக்ஸிஜனை மற்ற செல்கள் எவ்வாறு பகிர்ந்துகொண்டு தங்களுக்குள் தகவமைத்துக்கொள்கின்றன? இந்த நுணுக்கமான அறிவியல் ரகசியங்களை இப்போது உடைத்திருக்கிறார்கள் கிரெக் செமன்சா, சர் பீட்டர் ரேட்க்ளிஃப், ஜி.கெலின் என்னும் மூன்று ஆராய்ச்சியாளர்கள். இதற்குத்தான் இவர்களுக்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

அற்புதம் செய்யும் மரபணுக்கள்

  • ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் செமன்சாவும் லண்டனைச் சேர்ந்த ரேட்க்ளிஃப்பும் தனித்தனியாக மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை உளவுபார்த்து உணரும் திறன் எரித்ரோபாய்ட்டின் ஹார்மோனை உற்பத்திசெய்யும் சிறுநீரகச் செல்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல;
  • உடலில் பல்கிப் பெருகும் எல்லா செல்களுக்கும் இந்தத் திறன் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர். இந்த ஆராய்ச்சியில் முக்கியமான திருப்புமுனை இதுதான்.
  • அடுத்த திருப்பம், பேராசிரியர் செமன்சா கண்டுபிடித்தது. செல்களின் ஆக்ஸிஜன் தகவமைப்புக்கு எரித்ரோபாய்ட்டின் மரபணுவுக்கு அருகிலுள்ள மற்ற மரபணுக்களும் காரணம் என்பது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையை உணரும் அற்புதத் திறனுள்ள ஒரு ஜோடி மரபணுக்களை இவர் கல்லீரல் செல்களில் கண்டுபிடித்து இதை உறுதிசெய்தார்.
  • இந்த மரபணுக்கள் எச்ஐஎஃப்-1 ஆல்பா, ஏஆர்என்டி எனும் இரண்டு வகையான புரதங்களை உற்பத்திசெய்கின்றன. உடலில் ஆக்ஸிஜன் குறையும்போது எச்.ஐ.எஃப்-1 ஆல்பா புரதம் இரட்டிப்பாகிறது.
  • இந்தப் புரதங்கள் எரித்ரோபாய்ட்டின் உற்பத்திக்குக் காரணமான இன்னும் பல மரபணுக்களைத் தூண்டுகின்றன. இதன் பலனாக எரித்ரோபாய்ட்டின் அளவு ரத்தத்தில் எகிறுகிறது; சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை பல மடங்கு கூடுகிறது. இப்படித்தான் நமக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடுகிறது” என்கிறார் கிரெக் செமன்சா.
  • அடுத்ததாக, ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கெலின், புற்றுநோய் செல்களை ஆராய்ச்சி செய்யும்போது ஆக்ஸிஜனைத் தகவமைத்துக்கொள்ளும் திறனுக்கும் மரபணுக்களுக்கும் உள்ள தொடர்பை மறுபடியும் உறுதிசெய்தார். ‘விஹெச்எல்’ எனும் மரபணுவின் புரத மூலக்கூறு, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • அதேநேரம், “விஹெச்எல் நோய் (Von Hippel-Lindau’s disease) எனும் ஒருவகை பரம்பரைப் புற்றுநோய் உள்ளவர்களுக்கு விஹெச்எல் மரபணு இல்லாமல் இருக்கிறது அல்லது அதில் பிறழ்வு இருக்கிறது.
  • இந்தப் புற்றுநோய் பாதித்த உறுப்புகளில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால், அதை ஈடுகட்ட எரித்ரோபாய்ட்டின் அளவு ரத்தத்தில் அதிகமாகிறது; அதன் தூண்டுதலால் புதிய ரத்தக் குழாய்கள் அதிக அளவில் அங்கே புறப்படுகின்றன. அதேநேரம், விஹெச்எல் மரபணு உள்ளவர்களுக்கு இந்த மாற்றங்கள் இல்லை” என்கிறார் இவர்.
  • இப்படி, ஆக்ஸிஜன் பற்றாக்குறையின்போது செல்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்வதற்கு ‘கரோட்டிட் பாடி’யும் எரித்ரோபாய்ட்டின் மட்டுமே காரணமல்ல, மற்ற மரபணுக்களும் அவை உற்பத்திசெய்யும் எச்ஐஎஃப்-1 ஆல்பா, ஏஆர்என்டி புரதங்களும் காரணம் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

இதனால் என்ன நன்மை?

  • உலகில் 100 கோடியே 62 லட்சம் பேருக்கு ரத்தசோகை நோய் உள்ளது. இவர்களில் வருடந்தோறும் 2 லட்சம் பேர் ரத்தம் செலுத்த வழியில்லாமல் இறந்துபோகிறார்கள். இந்தியாவில் 60% பேருக்கு ரத்தசோகை உள்ளது. ரத்தசோகையின்போது உடல் உறுப்புகளுக்குப் போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை என்பதுதான் அடிப்படை பாதிப்பு. இவர்களுக்கு இனி ஆக்ஸிஜன் தேவையை நிவர்த்திசெய்ய எச்ஐஎஃப்-1 ஆல்பா, ஏஆர்என்டி புரதங்களை ஊக்குவிக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படலாம். அப்போது இவர்களுக்கு ரத்தம் செலுத்தப்படுவது தவிர்க்கப்படலாம்.
  • அடுத்து, மாரடைப்பு வலி என்பதே இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதை அறிவிக்கும் அலாரம்தான். கரோனரி ரத்தக் குழாய்களின் பாதிப்பு இதற்குக் காரணமாகிறது.
  • அவற்றைச் சரிப்படுத்த கரோனரி குழாய்களில் ஸ்டென்ட் பொருத்துகிறார்கள். இதற்கு மாற்றாக, இனி புதிய மருந்துகள் மூலம் எச்ஐஎஃப்-1 ஆல்பா புரதங்களை அதிகமாக உற்பத்திசெய்து, இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகுக்கலாம்.
  • அப்போது ஸ்டென்ட் பொருத்தும் வேலை மிச்சமாகலாம். பக்கவாதம் வருவதற்கும் மூளை செல்களில் ஆக்ஸிஜன் குறைவதுதான் அடிப்படை. இதற்கும் புதிய வழிகள் பிறக்கலாம். புற்றுநோய்க்கு இப்போது மருந்து, கதிர்வீச்சு, அறுவை சிகிச்சைகள் இருப்பதுபோல் இனி மரபணு மாற்று சிகிச்சைகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்படலாம். ஆக மொத்தத்தில், மனித குல ஆரோக்கியத்துக்கு நன்னீர் பாய்ச்சும் மகத்தான கண்டுபிடிப்புகள் இவை.

நன்றி: இந்து தமிழ் திசை (21-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories