TNPSC Thervupettagam

மருத்துவ மாணவர்களின் மனநலம் காப்போம்!

August 21 , 2024 145 days 156 0

மருத்துவ மாணவர்களின் மனநலம் காப்போம்!

  • மருத்துவம் பயிலும் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்களில் கணிசமானோர் தீவிர மனநலச் சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் வெளியாகியிருக்கும் தகவல்கள் வேதனையளிக்கின்றன. தேசிய அளவிலான ஓர் ஆய்வில் தெரியவந்துள்ள இந்தத் தகவல்கள், மருத்துவத் துறையின் அடித்தளமாக விளங்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைப் பட்டவர்த்தனம் ஆக்கியிருக்கின்றன.
  • இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனநலம், படிப்பிலும் பணியிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர்களில் சிலர் எடுக்கும் வருந்தத்தக்க முடிவுகள் போன்றவற்றைக் குறித்து ஆராய, ‘மருத்துவ மாணவர்களின் மனநலம் - நல்வாழ்வுக்கான தேசியப் பணிக்குழு’வைத் தேசிய மருத்துவ ஆணையம் ஏற்படுத்தியிருக்கிறது.
  • மனநலச் சிக்கல்களுக்கான சிகிச்சைகளுக்காக நன்கு அறியப்பட்ட, பெங்களூருவில் இயங்குகிற நிம்ஹான்ஸ் (NIMHANS) மையத்தின் மனநலத் துறைத் தலைவரான சுரேஷ் பாத மத் தலைமையில் அக்குழு இயங்குகிறது. அது 2024இல் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களிடையே இணையவழியில் ஓர் ஆய்வை நடத்தியது. அதில் கிடைத்த தரவுகள்தான் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.
  • முதுநிலை மாணவர்களில் 84% பேர், மிதமான மனநலச் சிக்கலிலிருந்து மிக அதிகமான சிக்கல் வரைக்கும் எதிர்கொள்வதாக அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். அவர்களில் 64% பேர், அதிகப் பணிச்சுமை அவர்களது மனநலத்தைப் பாதிப்பதாகக் கூறியுள்ளனர்.
  • 16.2% இளநிலை மாணவர்களும் 31.2% முதுநிலை மாணவர்களும் தற்கொலை எண்ணங்களுக்கு ஆட்படுவதாகத் தெரிவித்துள்ளது, பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மேலும், முதுநிலை மாணவர்களில் 19% பேர், மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மது, புகையிலைப் பொருள்கள், கஞ்சா, பிற போதைப் பொருள்களை நாட வேண்டிய தேவையில் தாங்கள் இருப்பதாகக் கூறியிருப்பது, இவர்கள் எந்தளவுக்குக் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்பதை உணர்த்துகிறது.
  • போதுமான ஓய்வு மறுக்கப்படும் நிலை, இவர்களின் மனநலச் சிக்கல்களுக்கு முதன்மையான காரணமாகத் தெரியவருகிறது. பயிற்சி மருத்துவர்களாகப் பணியாற்ற வைக்கப்படும் முதுநிலை மருத்துவர்களில் 57% பேர், மருத்துவ ஆணைய நெறிமுறைகளின்படி, தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வார விடுமுறை மறுக்கப்படுவதாகக் கூறியுள்ளனர். பொருளாதாரக் காரணங்களும் இவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.
  • மருத்துவக் கல்வி பயில்வதற்குத் தமது வரம்புக்கு மீறிச் செலவு செய்ய வேண்டிய நிலையும் அதற்காகக் கடன் வாங்கும் சூழலும் அவர்களுக்குப் பெரும் சுமையாக மாறுகின்றன. பெரும்பாலான மாணவர்களின் பதில்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. தங்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை போதுமானதாக இல்லை என 72% முதுநிலை மாணவர்கள் வருந்தியுள்ளனர்.
  • பாலினம், சாதி, மதம், இனம், மாணவரது ஊர் போன்றவை சார்ந்த வேறுபாடுகளும் இச்சிக்கலின் பின்னணியில் இருப்பது இன்னொரு கொடுமை. 31% முதுநிலை மாணவர்கள், தாங்கள் பாகுபாடுகளுடன் நடத்தப்படுவதாகக் கூறுகின்றனர். ராகிங் கொடுமையும் இவர்களது மன நிம்மதியைப் பறிப்பதாக உள்ளது.
  • முதுநிலை மாணவர்களில் 27% பேர் மூத்த மாணவர்கள் தங்களை ராகிங் செய்வதாகவும், 31% பேர் ஆசிரியர் பொறுப்பில் உள்ளோரும் சேர்ந்து ராகிங் செய்வதாகவும் சொல்வதாக ஆய்வுத் தரவுகள் கூறுகின்றன.
  • இந்தியாவில் 2018-2022இல் 64 மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்; 153 இளநிலை மாணவர்களும் 1,117 முதுநிலை மாணவர்களும் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினர்.
  • ஏறக்குறைய இதே நிலை தொடர்வதையே ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. இந்நிலையில், மருத்துவ மாணவர்களுக்கு நல்ல பயிலகச் சூழலையும் பணிச்சூழலையும் வழங்க மத்திய, மாநில அரசுகள் உறுதியேற்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories