மருத்துவக் கட்டமைப்பின் அடித்தளத்தில் அலட்சியம் கூடாது!
- சுகாதாரக் கட்டமைப்பின் அடித்தளமாகக் கருதப்படுகிற ஆரம்ப சுகாதார மையங்களில் நோயாளிகள் தகுந்த நேரத்தில் சிகிச்சை பெற முடிவதில்லை என்கிற புகார்கள் அடிக்கடி எழுகின்றன. நோயாளிகளின் உடல்நலக் கோளாறுகள் சிக்கலாவது, சில வேளைகளில் உயிரிழப்பு ஏற்படுவது, நோயாளிகளின் உறவினருக்கும் மருத்துவமனைப் பணியாளருக்கும் இடையே மோதல் உருவாவது என இதன் பின்விளைவுகள் கவலை அளிக்கின்றன.
- சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிப்ரவரி 7 அன்று இரவில் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அங்குள்ள நகர்ப்புற சமுதாயநல மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததாலும் திருவல்லிக்கேணியில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்குச் செல்ல உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்காததாலும் அப்பெண்ணுக்குக் குழந்தை இறந்தே பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அப்பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
- இதுபோலவே, அண்மையில் கால்வலி சிகிச்சைக்காக போரூரில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சமுதாய மருத்துவமனைக்குச் சென்ற நடிகர் கஞ்சா கருப்பு, பணி நேரத்தில் ஒரு மருத்துவர்கூடப் பணியில் இல்லை எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தியது பேசுபொருளானது. இப்படியான சம்பவங்கள் தொடர்கதையாகிவருவதாக எழுந்திருக்கும் விமர்சனம் புறந்தள்ளத்தக்கதல்ல.
- மருந்துகளை இருப்புவைப்பதிலும் கட்டமைப்பிலும் ஏற்படும் தேக்க நிலை தமிழக சுகாதாரத் துறையால் அவ்வப்போது சரிசெய்யப்படுகிறது. அதேபோலப் பணியாளர்களின் எண்ணிக்கையிலும் தீவிரக் கவனம் செலுத்தப்பட வேண்டும். கிராமப்புறங்களிலும் புறநகர்ப்பகுதிகளிலும் வசிக்கும் ஏழை மக்கள் ஆரம்ப சுகாதார மையங்களைத்தான் சார்ந்துள்ளனர். தொற்றுநோய்களை முன்கூட்டியே தடுப்பது, தொற்றாநோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றுக்கு ஆரம்ப சுகாதார மையத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அரசின் வலியுறுத்தலாக உள்ளது.
- ஒரு மையத்தில் மாதத்துக்கு இத்தனை பிரசவங்கள் பார்க்கப்பட வேண்டும் என இலக்கு வைப்பதும் நடைமுறையாக உள்ளது. மொத்தக் கட்டமைப்பின் அடிப்படை அலகான இம்மையங்களில் பணியாளர் பற்றாக்குறை நீடிப்பது நல்லதல்ல. குறைந்தபட்சம் 30 படுக்கைகள் கொண்ட ஓர் ஆரம்ப சுகாதார மையத்தில் நான்கு மருத்துவர்களாவது இருக்கவேண்டிய நிலையில், ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. செவிலியர் எண்ணிக்கையிலும் இதே போதாமைதான்.
- இந்தப் பற்றாக்குறையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பகலில் பணிபுரியும் அதே மருத்துவரால் இரவிலும் பணிபுரிய முடிவதில்லை. பெரும்பாலும் இரவின்போது வருகிற பிரசவங்களை முதல் கட்டமாக செவிலியரே பார்ப்பதும் நாய்க்கடி, பாம்புக்கடி போன்ற பிரச்சினைகளுக்கு அவர்களே தடுப்பூசி போடுவதும் பல ஆரம்ப சுகாதார மையங்களில் நடப்பாக உள்ளது. விதிமுறைகளின்படி தவறு எனினும், இதைச் செய்ய வேண்டிய சூழலுக்குச் செவிலியர்கள் தள்ளப்படுகின்றனர்.
- இதில் எதிர்பாராதவிதமாக உயிரிழப்புகள் ஏற்படுகையில், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுக்கும் நோயாளிகளின் உறவினர் கோபத்துக்கும் செவிலியர் உள்ளாகின்றனர். ஆண் செவிலியர் உதவியாளர், பெண் செவிலியர் உதவியாளர், வார்டு பாய் போன்ற அடிப்படைப் பொறுப்புகளுக்கான பணியாளர் சேர்க்கை ஏறக்குறைய கைவிடப்பட்டு விட்டதாகவே சங்கங்கள் கூறுகின்றன. செவிலியரில் ஏறக்குறைய பாதிப் பேர் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவதால் ஊழியர்களுக்கான அடிப்படை உரிமைகளை அவர்கள் பெற முடியாமல் போகிறது.
- இந்தியாவிலேயே சுகாதார வசதிகளை அளிப்பதில் முன்னுதாரணமான மாநிலமாகத் தமிழகம் பெயர் பெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வருகிற புறநோயாளிகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் படுக்கைகளின் எண்ணிக்கையும் மருத்துவ வசதிகளும் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. அவற்றை மக்களிடம் கொண்டுசேர்க்கப் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாதபோது வளர்ச்சியின் பலனை மக்களால் பெற முடியாமல் போகும் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 02 – 2025)