TNPSC Thervupettagam

மருத்துவப் படிப்பின் பெயரால் ஏனைய துறைகளை ஒழிக்கிறோம்

June 27 , 2023 569 days 381 0
  • உங்களுடைய பிள்ளை திடீரென்று பன்னிரண்டாம் வகுப்பின் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டால், ஒரு பெற்றோராக உங்களுக்கு எப்படி இருக்கும்? என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. ஒரு கல்வியாண்டின் ஆரம்பத்திலேயே நாம் விவாதிக்க வேண்டிய விவகாரம் இது என்று எண்ணுகிறேன்.  தமிழ்நாட்டில் 2023 பிளஸ் 2 தேர்வின் முதல் நாள் அன்று 50,000 மாணவர்கள் வரவில்லை. இது முதல் நாள் தமிழ்த் தேர்வு அன்றைய நிலைமை. அடுத்தடுத்த நாட்களில் ஆங்கிலம், இன்னபிற முதன்மைப் பாடத் தேர்வுகளைப் புறக்கணித்தவர்களின் எண்ணிக்கையையும் கூட்டினால், மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
  • தமிழ்நாட்டில் 2023இல் பிளஸ் 2 தேர்வு எழுத 8.51 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் தட்டுத் தடுமாறி பள்ளி வாழ்க்கையை நிறைவுசெய்யும் தருணத்தில், பல ஆயிரம் மாணவர்கள் இப்படி ஒரு முடிவை எடுக்கிறார்கள் என்றால், இது தீவிரமான ஒரு பிரச்சினை. தமிழக அரசும் கல்வித் துறையும் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த சமூகம் ஆழ்ந்து விவாதித்திருக்க வேண்டும். போகிறப்போக்கில் நம் சமூகம் இந்தச் செய்தியைக் கடந்தது மோசம். “ஒவ்வொரு வருஷமும் சுமார் 5% மாணவர்கள் வரை இப்படிச் செல்வது சமீப ஆண்டுகளாகவே வழக்கமாக இருக்கிறது. இந்த ஆண்டு கொஞ்சம் இந்த எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது” என்று வெளியான அடுத்த செய்தி மேலும் மோசம்!
  • நான் பல ஆசிரியர்களிடமும் பேசினேன். “பத்தாண்டுகளாகவே மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் அதிகரித்தபடி இருக்கிறது. இப்போது நீங்கள் தேர்வில் பார்க்கும் வெளியேற்றம் என்பது கடலின் மேல் பரப்பில் நமக்குத் தெரியும் மலையின் நுனி; கடல் அடியில் நம் கவனத்துக்கு வராத பெரும் மலை இருக்கிறது. நம்முடைய பள்ளிக்கூடங்களின் மேல்நிலை வகுப்புகளில் பெரிய களேபரங்கள் நடக்கின்றன. யாரும் அதற்கு உரிய கவனம் அளிக்கவில்லை அல்லது தப்பும் தவறுமான தீர்வுகளை யோசிக்கிறோம்!” என்கிறார்கள்.
  • ஆசிரியர்கள் சொல்லும் பத்தாண்டு கணக்கு என்பது, 2013இல் அறிமுகமான மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நம் சமூகத்தில் உண்டாக்கியிருக்கும் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களைக் குறிக்கிறது.
  • இதற்கு முன்பிருந்தே பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ போன்ற தேசிய அளவிலான பொது நுழைத் தேர்வுகள் இருந்தாலும், ஒரு மாணவர் முன்பு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று ஐஐடி போன்ற நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்றால், அவர் நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டும்; இல்லையெனில் அண்ணா பல்கலைக்கழகம் போன்று மாநில அரசு நடத்தும் நிறுவனங்களிலேயே அவர் படிக்கலாம். இதற்கென்று விசேஷமாக எதுவும் அவர் தயாராக வேண்டியது இல்லை. பள்ளித் தேர்வை நல்லபடி எழுதினால் போதும்!
  • ஆனால், மத்தியக் கல்வி நிறுவனங்களில் மட்டும் அல்லாது உள்ளூர் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கவும்கூட நுழைவுத் தேர்வும், சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் முக்கியம் எனும் நிலையை நீட் தேர்வு உண்டாக்கியது. மாநிலக் கல்வி வாரியப் பாடப்புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது என்ற நிலையை நீட் கேள்வித் தாள்கள் உண்டாக்கின. விளைவாக, பதினோராம் வகுப்பில் நுழைவதற்கு முன்பே நீட் தேர்வுக்கான மனநிலைக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவானது. இந்தச் சூழல் உண்டாக்கிய மோசமான விளைவு என்னவென்றால், நம்முடைய ஒட்டுமொத்த சமூகத்தையும் அறிவியலை மையப்படுத்தியும் ஏனைய துறைகளைப் புறந்தள்ளியும் சிந்திக்க நிர்ப்பந்தித்திருக்கிறது.
  • எப்படி ஒரு வன்முறையை இன்று நம் பள்ளிக்கூடங்களில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம் என்பதை என்னிடம் ஓர் ஆசிரியர் விளக்கினார். “தமிழக ஆட்சியாளர்களால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியாத சூழலில், அது பெரும் அரசியல் அழுத்தத்தை அவர்களிடம் உருவாக்கியது. ஏனென்றால், மொத்தம் 8 லட்சம் சொச்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள் என்றால், அவர்களில் 6 லட்சம் சொச்சம் பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்கள். நீட் தேர்வுக்குப் பிறகு, ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளிலிருந்தும் ஒரு மாணவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புவதே பெரும் சவால் எனும் சூழல் உருவாகிவிட்டது.
  • நீட் கேள்வித் தாளானது, தேசியப் பாட வாரிய நூல்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவது ஆகும். ஆக, நீட் தேர்வுக்குத் தயாராகும் அளவுக்கு மாநிலப் பாட வாரிய நூல்களையும் மேம்படுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அறிவியல் பாட நூல்களில் ஆரம்பிக்கப்பட்ட மேம்பாடு எல்லாத் துறை நூல்களுக்கும் நீட்டிக்கப்பட்டன. எல்லாம் பல நூறு பக்கங்கள். பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் இன்று நிலைக்குலைந்து போகிறார்கள்!”
  • நமக்குப் பொதுவாக இங்கே ஓர் அசட்டுத்தனமான கேள்வி புத்திசாலித்தனமாகத் தோன்றும். “பாட நூல்களை மேம்படுத்துவது என்பது சரிதானே!”
  • இன்னோர் ஆசிரியர் இதற்குப் பதில் சொன்னார். “சரிதான், ஆனால் குறிப்பிட்ட பக்கங்களுக்குள் இந்த மேம்பாடு நடக்க வேண்டும். இன்றைக்குப் பதினோராம் வகுப்பில் அறிவியல் படிக்கும் ஒரு மாணவர் படிக்க வேண்டிய பக்கங்கள் எத்தனை தெரியுமா? தமிழ் - 236, ஆங்கிலம் - 210, இயற்பியல் இரு தொகுதிகள் - 312+316, வேதியல் இரு தொகுதிகள் - 294+316, கணிதம் இரு தொகுதிகள் - 312+284; உயிரியல் -  விலங்கியல் 272 + தாவரவியல் 312, ஆக மொத்தம் – 2864 பக்கங்கள்!
  • அரசாங்கம் சார்பில் பாட நூல்கள் உருவாக்கத்தில் என்னவோ பெரும் அக்கறை செலுத்தினார்கள். ஆனால், இவ்வளவு பக்கங்கள் பெரும் வன்முறை. நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை மையப்படுத்தி நாம் இதைச் செய்தோம். ஆனால், இந்தியா முழுவதும் இந்தத் தேர்வுகளில் அதிகம் தேறும் மாணவர்கள் யார்? எத்தகைய வர்க்கப் பின்னணியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பின் வசதி என்ன? வெளியே எத்தனை வகையான சிறப்புப் பயிற்சிகளைப் பெறும் வசதியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்? நேர் எதிரே நம்முடைய தமிழ்நாட்டின் பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்கள் யார்? எத்தகைய வர்க்கப் பின்னணியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பின் வசதி என்ன? வெளியே எத்தனை வகையான சிறப்புப் பயிற்சிகளைப் பெறும் வசதியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்? இதை யோசிக்க நாம் மறந்துவிட்டோம்!”
  • ஆசிரியர்கள் எனக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு விவரங்களை என்னிடம் தந்தனர். தமிழ்நாட்டில் 2023இல் நீட் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 1.31 லட்சம். இவர்களில், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 12,997. அதாவது, ஒரு சதவிகிதம்கூட இல்லை. நீட் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து மொத்தமாகத் தேர்ச்சி பெற்றவர்கள் 78,693 பேர். இவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர்.
  • "இங்கே தேர்ச்சி என்று நாம் குறிப்பிடுவது பன்னிரண்டாம் வகுப்பு வரை 35% மதிப்பெண்களுக்கு மேல் பெறும் எல்லோரையும் குறிப்பிடுவது தேர்ச்சி பெற்றோர் என்று குறிப்பதைப் போன்று, நீட் தேர்வில், உத்தேசமாக 20% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற எல்லோரையும் குறிப்பிடுவதாகும்; உண்மையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிக்க வேண்டும் எனில், இடஒதுக்கீட்டில் ஒரு பழங்குடி மாணவர் செல்லவே குறைந்தது 60% மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு நீங்கலாக அரசுப் பள்ளிகளிலிருந்து மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் என்று 100 பேர்கூட இருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம். எனில், நாம் நீட் போன்ற ஒரு தேர்வையே ஒழிக்க வேண்டும்; அது சாத்தியப்படும் வரை அரசுப் பள்ளி மாணவர்களில் மருத்துவம் படிக்கும் ஆர்வமும், ஆற்றலும் உடையவர்களை மட்டும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அரசு சார்பில் சிறப்புப் பயிற்சி வழங்குவதே முறையாக இருக்கும். இப்படித் தேர்ந்தெடுத்தால் சில ஆயிரம் மாணவர்கள் அந்த வட்டத்துக்குள் வருவார்கள். அதை விட்டுவிட்டு, பல லட்சம் மாணவர்களை நாம் வதைக்கிறோம்."
  • என்னால் பிரச்சினையை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கல்வியை நான் முடித்தேன். அப்போதெல்லாம் வகுப்புக்கு 50 மாணவர்கள் இருந்தால், 5 பேர் முதல் நிலைத் தகுதியுடன் இருப்பார்கள். எனில், அவர்கள் குறைந்தது 90% மதிப்பெண்களைத் தொடர்ச்சியாக எல்லாப் பாடங்களிலும் பெறுவார்கள். இத்தகையோர்தான் மருத்துவம் – பொறியியல் போன்ற கடும் போட்டி நிலவும் படிப்புகளை நோக்கி நகர்வார்கள். ஏனைய மாணவர்களுக்குத் தெரியும், ‘நமக்கு இது ஆகாது; நாம் ஏதாவது அடுத்த நிலைப் படிப்புகளைப் பார்ப்போம்!’
  • இப்படித்தான் அடுத்து வேறு எந்தப் பாடத்தில், துறையில் ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அந்தப் படிப்பு நோக்கிப் பெரும்பான்மை மாணவர்கள் நகர்வார்கள். நமக்கு இதுதான் சரிபடும் என்பதில் மாணவர்களுக்கும் தெளிவு இருக்கும்; பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கும் தெளிவு இருக்கும். முதல் நிலை மாணவர்கள் ‘மருத்துவம் – பொறியியல்’ கனவுகளோடு அதற்குரிய அழுத்தத்தை எதிர்கொள்வார்கள்; ஏனையோருக்கு அந்தச் சிரமம் இருக்காது. அதேசமயம், பத்தாம் வகுப்பில் 70%-60% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களைப் பிற்பாடு  வரலாற்றுத் துறையிலும்கூட பார்க்க முடியும்; அங்கே அவர்கள் புதிய ஆற்றலுடன் முன்னணியில் இருப்பார்கள்.
  • இப்போது ஒட்டுமொத்த மாணவர்களையும் மருத்துவம் / பொறியியல் படிப்புகளின் பெயரால் அறிவியல் அழுத்தத்தில் நாம் தள்ளியிருக்கிறோம். இரு மோசமான பின்விளைவுகளை இது கொண்டிருக்கிறது. கடும் மன அழுத்தத்திலும் இயலாமையிலும் மாணவர்களைத் தள்ளியிருக்கிறோம்; கூடவே, அறிவியல் நீங்கலாக வேறு எந்தத் துறையிலும் எதிர்காலத்தில் வலுவான ஆளுமைகள் உருவெடுக்க முடியாத சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். ஒரு நல்ல வரலாற்றாய்வாளர், ஒரு நல்ல தமிழாசிரியர், ஒரு நல்ல பொருளியலர் எப்படி இந்தப் பள்ளிக்கூடச் சூழலிலிருந்து நமக்கு எதிர்காலத்தில்  உருவாவார்?
  • தமிழ்நாடு இதுபற்றி விவாதிக்க வேண்டும். மருத்துவம் போன்ற கடும் போட்டி நிலவும் படிப்புகளுக்கு ஆசைப்படும் மாணவர்களுக்கு ஒரு தகுதித்தேர்வு நடத்தி, அதில் வெல்வோருக்கு என்று சிறப்பு நூல்களையும் சிறப்புப் பயிற்சியும் வழக்கலாம்; இந்த வகையில் தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் மாதிரிப் பள்ளிகளை மேலும் விஸ்தரிக்கலாம். ஒட்டுமொத்த அளவில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பாடத்திட்டமும், புத்தகங்களும் ஒன்றுக்குப் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும்; நம்முடைய பாடநூல்கள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். அறிவியலுக்கு இணையான மதிப்பை வரலாறு, சமூகவியல் உள்ளிட்ட ஏனைய துறைகளுக்குக் கிடைக்க டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்போல மதிப்புமிக்க உயர்கல்வி நிறுவனங்களை நாம் உருவாக்க வேண்டும். பல துறைகளிலும் நல் ஆளுமைகள் வெளிவர நம் பள்ளியமைப்பே தடையாகவுள்ள இன்றைய சூழல் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்

நன்றி: அருஞ்சொல் (27  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories