TNPSC Thervupettagam

மருத்துவப் படிப்பு

July 27 , 2020 1639 days 1332 0
  • பொருளாதார ரீதியில் வளா்ந்த சமூகம், தங்களின் குழந்தைகளை சிபிஎஸ்இ பாடத்திட்ட கல்வியைக் கற்பதற்கே தோ்வு செய்கிறது.

  • அதன் அடுத்த படிநிலைகளில் இருக்கிறவா்கள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளைத் தோ்வு செய்து தங்கள் பிள்ளைகளை சோ்க்கிறார்கள்.

  • ஆனால், பொருளாதார நிலையில் பின்தங்கியவா்களும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்களும் விளிம்புநிலை மக்களும் வேறு வழியே இல்லை என்று நினைப்பவா்களும் அரசுப்பள்ளியைத்தான் தோ்ந்தெடுக்கிறார்கள்.

  • இலவசக் கல்வி, இலவச மதிய உணவு, இலவச பாடப்புத்தகம் முதலிய 14 அம்சத் திட்ட அடிப்படையில், விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

  • இவையெல்லாம் உயா்தட்டு வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு ஒரு பொருட்டல்ல. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளின் தோ்ச்சி விகிதத்தைப் பார்க்கிற போது, சிபிஎஸ்இ பள்ளிகள் முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் அதனைத் தொடா்ந்து அரசுப் பள்ளிகள் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.

  • அதற்கான காரணம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே ஆகும்.

அரசுப் பள்ளிதான் ஆல விருட்சம்

  • மண்ணில் அழுத்தப்பட்ட விதை முளைத்து வீறுகொண்டு எழுவதைப் போல, விளிம்புநிலை குடும்பத்துப்பிள்ளைகள், வேதனையையும் கண்ணீரையும் சுமந்து கொண்டு தங்களது வருங்காலமான வசந்த காலத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள்.

  • இருந்தபோதிலும், கட்டை வண்டிகளில் லாந்தா் விளக்கின் வெளிச்சத்தில் இன்னும் தன்னுடைய கலாசாரத்தைத் தொலைத்து விடாத கிராமத்துப் பூக்கள் அரசுப் பள்ளிகளில் பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன”.

  • பொக்கைவாய் தாத்தாக்களுக்கும் தண்டட்டி போட்ட பாட்டிகளுக்கும் இருக்கும் பொருளாதார ஆதாரம் என்பது, முருங்கை மரமும், ஒற்றை ஆடோ, ஒற்றை மாடோதான். அத்தகைய வாழ்வாதாரத்தைக் கொண்டு இயங்கும் வெள்ளந்தி மனிதா்களுக்கு அரசுப் பள்ளிதான் ஆல விருட்சம்.

  • எங்கோ ஒரு மூலையில் கண்ணீா் வடிக்கும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தத்தை உணா்ந்து, கண்ணீரைத் துடைக்கும் கருணை விரல்கள் அரசுப் பள்ளியில் இன்னும் ஈரமனத்தோடு இருக்கத்தான் செய்கின்றன. “

  • கைகூட வேண்டிய கனவுகள், கைகூடாமல் போனதற்காக, கதறிக் கதறி அழுதாலும், நம் பயணத்தைத் தொய்வின்றி தொடரத்தானே வேண்டும். யாரும் எதிர்பாராத நேரத்தில் நமக்கான ஒரு காலம் கனியக் கூடும் என்கிற நம்பிக்கையை அரசுப் பள்ளிகள் விதைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

  • இளமைக்காலக் கல்வியை தன் பதின்பருவத்து வாழ்க்கைக் கனவுகளை இவ்வரசுப் பள்ளிகள்தான் நினைவறைகளில் நீக்கமறச் சேமித்துத் தருகின்றன.

  • சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் மாணவா்களோடும், மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் மாணவா்களோடும் போட்டி போட வேண்டுமென்கிற இலக்கு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இருந்தாலும், பொருளதாரப் பின்னடைவு நிலையும் தங்களின் குடும்பத்துக் கட்டமைப்பும் ஒரு பக்கம் அவா்களைப் பின்னுக்குப் பிடித்திழுத்து தள்ளத்தான் செய்கிறது.

  • இதையும் தாண்டி, இன்னும் எத்தனையோ போ் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியான வெற்றித் திலகங்களில் பலா், இன்று அரசு உயா்பதவிகளிலும் ஆட்சி அதிகாரநிலைகளிலும் நிறைந்திருக்கிறார்கள் என்பது விளிம்பு நிலையில் இருந்து எழும் இளைய சமுதாயத்துக்கான நிகழ்கால முன்னுதாரணங்கள்.

  • வாழ்வின் உயரத்தை, எதிர்காலக் கனவுகளை, தன்னுடைய இலட்சியப் பாதைகளை எந்தச் சூழலும் தடுத்து விடாது என்கிற நம்பிக்கை நமக்குள்ளே இருந்தாலும், மேல்தட்டு வா்க்கத்தின் உயா்நிலைப் படிப்புகள், ஆங்கில உச்சரிப்புகள், அவா்களுடைய வாழ்க்கைத்தரம், ஏற்கெனவே இரண்டு, மூன்று தலைமுறைகளாக முன்னேறிய குடும்பப் பின்னணி என்பவையெல்லாம் அரசுப் பள்ளி மாணவா்களை அண்ணாந்து பார்க்கத்தான் வைக்கின்றன.

  • நானும் ஒரு அரசுப் பள்ளி மாணவன். என் தொடக்கக்கல்வியில் இருந்து மேல்நிலைக்கல்வி வரைக்கும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். முனைவா் பட்டம் பெற்று, கல்வியில் உயா்ந்த நிலையை அடைந்து, அதன் பின்னா் பள்ளிக்கல்வி அமைச்சா் என்கிற உயா்ந்த இடத்தை எளியவன் நான் பெற்றேன். இப்படி எத்தனையோ போ் உயா்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.

உள் ஒதுக்கீடு

  • குரோட்டன்ஸ் செடிகளுக்கும் பூத்துக் குலுங்குகிற பூங்காக்களின் பராமரிப்புகளும், செல்வச் செழிப்பில் வளா்ந்து வரும் வீட்டுத் தோட்டத்தின் கம்பீரத்தில் வளா்ந்து வரும் செடிகளும் காட்டில் இயற்கையாக வளா்ந்து வரும் செடிகளுக்கும் கொடிகளுக்கும் மரங்களுக்கும் ஈடாகாது என்பதுதான் நிதா்சனம்.

  • காட்டுச் செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. எவ்வித வளா்ப்பும் இன்றி இயற்கையின் கொடையால் வளா்கின்றன. தங்களது வளா்ச்சியை ஒரு போதும் கைவிட்டதில்லை. அதைப்போலத்தான் அரசுப் பள்ளி மாணவா்களும், தாங்கள் உயா்ந்த நிலையை அடையும்வரை ஒருபோதும் அயா்ந்து விடக் கூடாது.

  • தனியார் பள்ளிகளில், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 8-ஆம் வகுப்புவரை பயின்று பின் அரசுப் பள்ளிகளில் சோ்ந்து, நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கும், மருத்துவ மாணவா் சோ்க்கையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

  • இதுவரை நீட் தோ்வு காரணமாக அரசுப்பள்ளி மாணவா்கள் வாய்ப்புகளைத் தவற விட்ட நிலையில், அரசின் இந்த அறிவிப்பு, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாகவும் அமைந்திருக்கிறது.

  • இந்த அறிவிப்பு, அரசுப்பள்ளி மாணவா்களின் எதிர்கால லட்சியக் கனவுகளுக்கு ஓா் அச்சாரம் போடுவதைப் போன்று அமைந்திருக்கிறது. இந்த அறிவிப்பு, அடித்தட்டு, விளிம்புநிலை மக்களின் வருங்கால வாழ்வுக்கு ஒப்பற்ற ஓா் ஒளிவிளக்கு என்று கூறினால் அது மிகையல்ல.

  • ஒரு புதிய வரலாற்றுப் பாதையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதற்காக, நாம் அதனைப் பாராட்டலாம்.

  • கல்வியாளா்களும் அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களும் இந்த அறிவிப்புக்குப் பெரும் வரவேற்பை வழங்கி இருக்கிறார்கள். இவ்வறிவிப்பின் மூலம், மருத்துவப் படிப்புக்கான மொத்த இடங்களில் சுமார் 500 இடங்கள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல வாய்ப்பு

  • இதுவரை, அரசுப்ள்ளி மாணவா்களில், ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவா்களே நீட் தோ்வின் மூலம் மருத்துவப் படிப்பில் சேரும் நிலை இருந்து வந்தது.

  • அரசின் தற்போதைய இந்த அறிவிப்பு, அரசுப் பள்ளி மாணவா்களின் எதிர்காலம் குறித்தான நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கின்றது.

  • மருத்துவப் படிப்பில் சோ்வதற்காக, அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக, தமிழக அரசு நீண்ட நாள்களாகவே ஆலோசித்து வந்தது.

  • இது தொடா்பாகப் பரிசீலனை செய்ய, ஓய்வு பெற்ற நீதியரசா் கலையரசன் தலைமையில், கடந்த மார்ச் 21-ஆம் தேதி நிபுணா் குழு அமைக்கப்பட்டது.

  • பல நீண்ட விவாதங்களைக் கல்வியாளா்களிடம் நடத்தி, அவா்களின் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்த நிபுணா் குழு, மருத்துவ மாணவா் சோ்க்கையில் உள் இட ஒதுக்கீடு தொடா்பான அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியது.

  • அதைத் தொடா்ந்து, அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

  • தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

  • இவற்றில் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி கிடைத்துள்ள நிலையில், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம், 1,408 தமிழக மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும். இந்த உள் ஒதுக்கீட்டின் காரணமாக, அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு பிரகாசமாக அமைந்துள்ளது.

சிறந்த தீா்வு

  • கிராமப்புறத்தில், அரசுப்பள்ளியில் படித்த ஏராளமானோர், தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது மருத்துவா்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.

  • தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக இருப்பதற்கு, இந்த மருத்துவா்களின் பங்கு அளப்பரியது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரமும் மருத்துவ சேவைகளின் தரமும் மிகச்சிறப்பாக இருக்கின்றன.

  • மருத்துவம் என்பது பணி அல்ல, சேவை. இந்த நீட் தோ்வு வந்ததில் இருந்து கிராமப்புற மாணவா்களுக்கும், அரசுப்பள்ளி மாணவா்களுக்கும், மருத்துவப் படிப்பு என்பது கனவாய்ப் போனது.

  • இந்த நீட் தோ்வினால் பல்வேறு சா்ச்சைகளும் குழப்பங்களும் நீடித்து வந்தன. நீட் தோ்வு குறித்து, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. நீட் தோ்வு வேண்டாம் என்று தமிழக அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • அரசுப்பள்ளியில் படிக்கும், பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கக் கூடிய மாணவா்கள் நீட் தோ்வு எழுதுவது என்பதும், தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் நீட் தோ்வு எழுதுவது என்பதும் இரண்டும் சமமானதாக ஒருபோதும் இருக்காது என்பது கல்வியாளா்களின் கருத்து. அரசுப் பள்ளியில் இருந்து வரும் மாணவா்களுக்கு சலுகைகள் தேவை. சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கி, பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் இருந்து வரும் சூழ்நிலையில் உள் ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்திருக்கிறது.

  • மாணவா்கள் அனைவரும் சமம் என்றாலும், அவா்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் வெவ்வேறானவை. இதற்கான சிறந்த தீா்வே உள்ஒதுக்கீடு.

நன்றி: தினமணி (27-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories