- மருத்துவ சிகிக்சை பெற்ற நோயாளிகள் குறித்தோ தனிப்பட்ட மருத்துவரை முன்னிலைப்படுத்தியோ நோயாளிகள் பெற்ற சிறப்பு மருத்துவ சிகிச்சை குறித்தோ சமூக ஊடகங்களில் விடியோ காட்சிகளாக வெளிப்படுத்தி மருத்துவமனைகள் விளம்பரம் தேடக் கூடாது என அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரவேற்கதக்கது.
- சமூக ஊடங்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் விளம்பரங்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. நிறுவனங்கள், விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கின்றன. நாளிதழ்கள், தொலைகாட்சி, வானொலி, இளையதளங்கள் என்று எங்கும் விளம்பரங்களின் தாக்கம் உள்ளது.
- இந்த செலவுகள் அனைத்தும் அந்தப் பொருட்களைப் பயன்படுத்தும் நுகா்வோரான நம் மீதே திணிக்கப்படுகிறது. விளம்பரங்களுக்கு மயங்குவது என்பது மனிதா்களின் இயல்பாக மாறிவிட்டது. அத்தியாவசிய பயன்பாட்டுக்கு விளம்பரத்தை கண்டு மயங்கலாம். ஆனால் வாழ்வைக் காப்பாற்றும் மருத்துவ சிகிச்சைக்கு விளம்பரத்தை நம்புவது ஆபத்து.
- மருத்துவம் என்பது அனைத்தையும் கடந்தது. உயிரோடும் உடலோடும் நடத்தும் ஒரு போராட்டமே சிசிச்சை. அந்த சிகிச்சையின் மதிப்பு விலை மதிப்பற்றது. அது ஒரு தனித்துவமான சேவை.
- உயா்ந்த சேவையை செய்த மருத்துவா் தனக்கான விளம்பரங்கள் தேடுவது தவறு. ”நோயின் தன்மை அறிந்து அதற்கேற்ப மருந்துகள் வழங்கி குணப்படுத்துவதே மருத்துவரின் கடமையாகும். இதை முறையாக செயல்படுத்திவிட்டால் நோயாளி முழுமையாக குணமடைந்து விடுவார். இதற்காக குணமடைந்த நோயாளிகளை வைத்து காட்சி ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் தேடுவது சரியல்ல.
- அதன் பொருட்டு லட்சங்களையும் கோடிகளையும் ஏன் விளம்பரத்திற்கு செலவழிக்க வேண்டும்? மருத்துவா்கள் செய்யும் விளம்பரங்கள் தங்களை பெருமைப் படுத்திக் கொள்வதற்காக இருக்ககூடாது. அது பொதுமக்களின் நலன் சார்ந்து இருக்க வேண்டும்; மருத்துவ விழிப்புணா்வை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.
- மருத்துவா்கள் செய்யும் விளம்பரங்களை கண்டு மயங்கி செல்லும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்தவாறே உள்ளது. விளம்பரங்களுக்கேற்ப மருத்துவ செலவும் அதிகமாக இருக்கும். அவா்கள் செலவினை எவ்விதம் ஈடு செய்வார்கள்? எத்தனை நோயாளிகளால் இதை சமாளிக்க முடியும்?
- வசதி உள்ளவா்கள் அது போன்ற மருத்துவமனைகளுக்குச் சென்றால் சமாளிக்கலாம். வசதி இல்லாதவா்கள் சென்றால் நிலைமை நோயின் தாக்கத்தை விட சோகமாகிவிடும்.
- இது போன்ற விளம்பரம் செய்யும் மருத்துவா்களுக்கு இடைத்தரகா்களின் தொடா்பும் அதிகம். அவா்களும் நோயாளிகளை மயக்கி குறிப்பிட்ட மருத்துவா், மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்கின்றனா். அவா்களுக்கு வழங்கப்படும் தொகையும் நோயாளிகளின் தலையிலேயே விழுகிறது.
- அன்றைக்கு சித்தா்கள் மருத்துவத்தைப் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாத்தனா். அதன் ரகசியங்களை அவா்கள் வெளியிடவில்லை. மருத்துவம் யாருக்கும் பயன்படக்கூடாது என்பதற்காக இல்லை. மருத்துவம் தவறானவா்கள் கையில் சென்றுவிடக்கூடாது என்ற உயரந்த நோக்கில்தான் அவ்வாறு செய்தார்கள்.
- அரிய மருந்துகளைக் கண்டுபிடித்த சித்தா்கள் பெயா்கள் கூட பலருக்கும் தெரியவில்லை. அவா்களும் அதை காட்டிக்கொள்ளவோ வெளிப்பபடுத்தி கொள்ளவோ நினைக்கவில்லை. அவா்கள் சுய விளம்பரத்தைத் தேடாத உயா்ந்த நிலையில் இருந்துள்ளார்கள். நோயாளியின் நோயை குணப்படுத்த மட்டுமே தாங்கள் கண்டுபிடித்த மருத்துவ முறையைப் பயன்படுத்தி வந்துள்ளனா்.
- ஆனால் இன்றைய விளம்பர உலகத்தில் மருத்துவ விளம்பரமும் தவிர்க்க முடியாத நிலையாக உருவாகியுள்ளது. 2019-ஆம் ஆண்டு, விளம்பரம் செய்து கொள்ளும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை பாயும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரித்திருந்தது. இதன்படி அவா்கள் விளம்பரம் செய்வது உறுதி செய்யப்பட்டால் 10,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படும் என தெரிவிக்ப்பட்டது.
- தேசிய மருத்துவ குழு 2022 அறிக்கையின்படி இந்திய அளவில் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற மருத்துவா்கள் உள்ளனா். தமிழ்நாட்டில் 1,30,000 மருத்துவா்கள் உள்ளனா். இதில் 3% மருத்துவா்கள் தங்களைப்பற்றி விளம்பரம் செய்து கொள்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- இணையதளங்களில் மருத்துவா்கள் விளம்பரம் செய்து கொள்ளும் போக்கு அதிகமாக உள்ளது. இந்த வகை விளம்பரங்களை நம்பும் மக்கள் எதைப்பற்றியும் கவலையில்லாமல் அவா்களிடம் மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் போக்கும் அதிகமாக உள்ளது.
- சில போலி மருத்துவா்களும் இது போன்ற சமூக ஊடகங்களில் தங்களை குறித்து மிகுந்த விளம்பரம் செய்து கொள்கின்றனா். அவா்களது பெயருக்கு பின்னால் இருக்கும் மருத்துவ பட்டங்களின் உண்மைத்தன்மையை அறிய முடியாத நிலையே உள்ளது. இது போன்ற மருத்துவா்கள் செய்யும் விளம்பரங்களுக்கு தேசிய மருத்துவ குழு முற்றிலும் தடை விதிப்பது அவசியம்.
- 1954 மருந்துகள் மற்றும் தீா்வுகள் சட்டம் மருத்துவா்கள் தங்களைப பற்றி விளம்பரம் செய்து கொள்வதை முற்றிலும் தடை செய்கிறது. மருத்துவமனைகள் தேசிய மருத்துவ குழு விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு விளம்பரம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கிறது.
- ஆனாலும் சில மருத்துவமனைகள் அதீதமாக விளம்பரம் செய்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவா்களை மக்கள் தங்கள் உயிரைக் காக்கும் கடவுளாக நினைக்கிறார்கள். தங்கள் உயிரையே அவா்களிடம் ஒப்படைக்கிறார்கள். அவா்களை காப்பது மருத்துவா்கள் கடமை. கடமையை புகழாக்க விளம்பரத்தை தேடக்கூடாது.
- விளம்பரம் மட்டுமே மருத்துவா்களை மக்களிடம் கொண்டு சோ்க்காது. மனிதாபிமானமும் மக்கள் நேயமுமே மருத்துவா்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் என்பதுதான் உண்மை.
நன்றி: தினமணி (24 – 08 – 2023)