TNPSC Thervupettagam

மருத்துவம் சே(தே)வை

August 18 , 2023 512 days 411 0
  • முதுநிலை மருத்துவம் படித்துவிட்டு, ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றாத மருத்துவா்களிடம் இருந்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ள தொகையான சுமார் ரூ.40 லட்சத்தை திரும்பப் பெறும்படி மாவட்ட துணை சுகாதார இயக்குநா்களுக்கு மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநரக (டிஎம்எஸ்) இயக்குநா் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
  • இளநிலை மருத்துவம் (எம்பிபிஎஸ்) படித்தவா்கள் ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றினால் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதுடன் அதிகபட்சம் 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. அவா்கள் பணியாற்றும் காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
  • ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், இளநிலை மருத்துவரை உருவாக்க சராசரியாக ரூ.1.7 கோடி செலவழிக்கப்படுவதாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ‘எய்ம்ஸ்’ தெரிவித்துள்ளது. அரசின் இத்தகைய சலுகைகளைப் பெற்று படித்துவிட்டு, தமிழ்நாட்டில் மட்டும் முதுநிலை மருத்துவம் படித்த சுமார் 1,200 மருத்துவா்கள் ஒப்பந்தப்படி இரு ஆண்டுகள் ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிவதைத் தவிர்த்துள்ளனா்.
  • ஒப்பந்தப்படி பணியாற்றாத மருத்துவா்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 98 சதவீத மருத்துவா்கள் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநரகம் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் ஒப்பந்தப் பணிக் காலமான இரண்டு ஆண்டுகள் பணி புரியத் தயார் என்று கூறியுள்ளனா்.
  • இதுதொடா்பாக, இந்த முதுநிலை மருத்துவா்களின் கருத்தை அறிய தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கம் (டிஎன்எம்எஸ்ஏ), சமூக சமத்துவக்கான மருத்துவா்கள் சங்கம் (டிஏஎஸ்இ), தமிழ்நாடு உள்ளுறை மருத்துவா்கள் சங்கம் (டிஎன்ஆா்டிஏ) ஆகியவற்றுடன் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் அண்மையில் ஆலோசனை நடத்தி உள்ளார். அவா்கள், தங்களுக்கு உள்ள சில பிரச்னைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனா்.
  • மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. 2014-ஆம் ஆண்டில் 387-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இப்போது 704-ஆகவும், 51,348-ஆக இருந்த எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 1,07,948-ஆகவும், 31,185-ஆக இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (பிஜி) இடங்கள் 67,802-ஆகவும் அதிகரித்துள்ளதாக மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அண்மையில் தெரிவித்துள்ளார்.
  • இந்த முயற்சி ஒருபுறம் இருந்தாலும், ஊரகப் பகுதிகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றில் பணிபுரியும் மருத்துவா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதை மத்திய அரசின் அறிக்கை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. இதில் எண்ணிக்கை அளவில், கேரளம் (171%), ஹிமாசல் (63%), தமிழ்நாடு (28%) ஆகியவை மட்டும் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக அளவிலான மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கொண்டுள்ளன.
  • முன்னேறிய மாநிலங்களாகக் கருதப்படும் ஆந்திர பிரதேசம் (64% குறைவு), மகாராஷ்டிரம் (56%), கா்நாடகம் (45%) ஆகியவை பின்தங்கி உள்ளன. அப்படியெனில், பிகார், ஒடிஸா, உத்தர பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களின் நிலையை நாமே ஊகிக்க முடியும்.
  • நாடு முழுவதும் உள்ள 6,064 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை சிகிச்சை நிபுணா்கள், குழந்தை நல மருத்துவா்கள் உள்ளிட்ட சுமார் 80 சதவீதம் சிறப்பு மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவா் இருக்க வேண்டும். நமது நாட்டில் இப்போது 834 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவுக்கு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
  • ஆனால், 834 பேருக்கு ஒரு மருத்துவா் என்று இருந்தாலும் முன்னேறிய மாநிலங்களில் அதிக அளவில் மருத்துவா்கள் உள்ள நிலையும், அப்படி முன்னேறிய மாநிலங்களிலும் நகரங்களில் மட்டுமே அதிகம் உள்ள நிலையும் காணப்படுகிறது. பிகார், சத்தீஸ்கா், ஒடிஸா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் நிலை பரிதாபம்தான்.
  • தமிழகத்தை எடுத்துக் கொண்டால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான சிறப்பு மருத்துவமனைகள் உள்ளன.
  • கிராமப்புற மக்களும் மேம்பட்ட சுகாதார வசதிகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே, இளநிலை, முதுநிலை மருத்துவா்கள் ஊரக சுகாதார நிலையங்களில் சில ஆண்டுகளாவது பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனையை பல்வேறு மாநில அரசுகள் விதித்துள்ளன. இருப்பினும், நடைமுறை சிக்கல்கள் காரணமாக இதுபோன்ற ஊரக மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவா்கள் பணிபுரிய மறுப்பது விளிம்புநிலை மக்களுக்குப் பாதகமாகவே முடியும்.
  • கரோனா காலகட்டத்தில், தன்னலம் பாராது சேவை புரிந்து எத்தனையோ உயிர்களை மருத்துவா்களும் செவிலியா்களும் காப்பாற்றி உள்ளனா். அத்தகைய மருத்துவத் துறையில் உள்ளவா்களின் பிரச்னைகள் களையப்பட்டு, இளநிலை, முதுநிலை மருத்துவா்கள் கிராமப்புற சுகாதார நிலையங்களில் பணிபுரிவது உறுதி செய்யப்பட வேண்டும். அப்போதுதான், கிராமப் புற மக்களும் பயன்பெறும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் வெற்றியடையும்.

நன்றி: தினமணி (18  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories