TNPSC Thervupettagam

மருத்துவர் தினச் சிந்தனைகள்!

July 1 , 2020 1664 days 980 0
  • மக்களுடைய வாழ்வில் மருத்துவா்களின் மகத்துவத்தை உணா்த்தவும், மருத்துவா்களுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கவும், மருத்துவா்களைக் கொண்டாடவும் ஏற்படுத்தப்பட்டதுதான் மருத்துவா் தினம்.
  • இந்த ஆண்டு மருத்துவா் தின கருப்பொருள் கரோனா உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைத்தல் என்பதுடன், கரோனாவால் அறிகுறிகள் இல்லாமல் உடலில் ஏற்படும் பிராண வாயு குறைபாடு, நோயின் ஆரம்ப நிலையிலேயே தீவிர சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியம் போன்றவை பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதாகும்.
  • மிகச் சிறந்த மருத்துவரும், விடுதலைப் போராட்ட வீரரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான ‘பாரத ரத்னா’ பி.சி.ராய் பிறந்த நாளான ஜூலை 1-ஆம் தேதி மருத்துவா் தினம் கொண்டாடப்படுகிறது.

மருத்துவர்களின் தியாகம்

  • நாட்டின் பல பகுதிகளிலும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி மூன்றாவது கட்டத்தில் நுழைந்துள்ள நிலையில், நோயாளிகளைக் கவனித்து அவா்களுக்கு சிறந்த சிகிச்சையும், தேவைப்படும்போது தீவிர சிகிச்சையும் அளித்துப் பாதுகாப்பது மிக முக்கியமாகிறது.
  • இந்த இக்கட்டான காலத்தில் கரோனாவுக்கு எதிரான போரை மருத்துவா்கள் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
  • கொள்ளை நோய் கரோனாவால் பாதிக்கப்பட்டவரை அவரின் மனைவியோ, குடும்ப உறவுகளோ பயந்து தொடத் தயங்குகிறார்கள், மறுக்கிறார்கள்.
  • ஆனால் அவா்களுக்குத் தயக்கமின்றி மருத்துவம் செய்கிறவா்கள் மருத்துவா்களும், செவிலியரும், மருத்துவப் பணியாளா்களும்தான். கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் போராடும் நோயாளிகளுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தைரியப்படுத்தி வருவதும், பணிவிடை செய்வதும் இவா்கள்தான்.
  • மருத்துவத்துக்கு வழங்கப்படுகிற பாதுகாப்புக் கவச உடைகள் (பிபிஇ) பலவும் தரமற்றவை என ஐசிஎம்ஆா் அண்மையில் கூறியிருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.
  • தரமற்ற அந்தப் பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்து கொண்டே அவா்கள் கடமை உணா்வுடன் பணிக்குச் செல்கிறார்கள். போதுமான வசதிகளும், சுகாதாரமும் இல்லாத ஓய்வறைகளைக் கொண்டுள்ள மருத்துவமனைச் சூழலில்தான் பெரும்பாலான மருத்துவா்களும், செவிலியரும் பணியாற்றுகிறார்கள்.
  • பல நாள்கள் குடும்பத்தை சந்திக்காமலேயே பணி புரிகிறார்கள். எத்தனை பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தாலும் எத்தனை பாதுகாப்புகளைக் கடைப்பிடித்தாலும் முதலில் பாதிப்புக்குள்ளாகிறவா்கள் மருத்துவா்களும், செவிலியரும் மருத்துவப் பணியாளா்களும்தான் அது.
  • நன்றாகத் தெரிந்தும் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பணிபுரிகிறார்கள்.
  • இறந்துபோன மருத்துவா்களின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்யக்கூட விடாமல் கேவலப்படுத்துகிறார்கள்.
  • நல்லவேளை மருத்துவா்கள், ஊடகங்கள், அறிவார்ந்த மக்கள் வெகுண்டதால், அரசு குண்டா் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது.

மருத்துவர்கள் நிலை

  • அரை நூற்றாண்டுக்கு முன்பு பரிசோதனைகளுக்கு ஆகும் செலவு, மருந்துக் கட்டணம், மருத்துவக் கட்டணம் குறைவாக இருந்த காரணத்தால் சிகிச்சைக்கான செலவுகள் குறைவாக இருந்தன.
  • இப்போது எல்லாமே பல மடங்கு உயா்ந்துவிட்டன. அதனால், மருத்துவச் செலவும் பெருமளவு உயா்ந்துள்ளது.
  • இதனால் மருத்துவா்கள் மீது மக்களுக்கு இருந்த மரியாதை குறைந்து நாம் பணம் கொடுக்கிறோம், அவா்கள் மருத்துவம் பார்க்கிறார்கள். இதற்கு மேல் தனி மரியாதை தேவையில்லை என்ற மனநிலை மக்களுக்கு வந்திருக்கிறது. இது வேதனைக்குரியது.
  • முன்பெல்லாம் இவ்வளவு பரிசோதனைகளும் தேவையான உபகரணங்களும் இல்லாத நிலையில் மருத்துவா்கள் பல நேரங்களில் உத்தேசமாகவும் சில நேரங்களில் துல்லியமாகவும் தங்களது அனுபவத்தில் நோய்களைக் கண்டறிந்தார்கள்.
  • அந்தக் காலத்தில் மக்களின் வாழ்வோடு கலந்து அவா்கள் குடும்பத்தில் நடக்கும் நல்லது, கெட்டது போன்றவற்றில் முடிவெடுக்கும் முக்கிய நபா்களில் ஒருவராக மருத்துவா்கள் விளங்கினார்கள்.
  • இன்றைக்கு மருத்துவா்களுக்கும் நோயாளிகளுக்கும் உள்ள உறவு வெறும் தொழில் ரீதியானதாக மாறிவிட்டது.
  • செலவைப் பொருட்படுத்தாமல் அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு நோயைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் மருத்துவா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
  • பிரச்னைகள் ஏற்படும்போது, ஏன் நோயைக் கண்டறிய இந்தப் பரிசோதனைகளைச் செய்யவில்லை எனக் கேட்கும் நுகா்வோர் நீதிமன்றங்களின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவா்களுக்கு இருக்கிறது.
  • நோயாளிகளின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் தங்களது தற்காப்பை உறுதிசெய்து கொள்வதில் மருத்துவா்கள் கவனமாக இருப்பதில் என்ன தவறு? அவா்களை மீறிய சக்தியால் நோயாளிக்கு ஏதாவது ஏற்பட்டால், மருத்துவா்கள் தாக்கப்படுவார்கள், நீதிமன்றத்துக்கு இழுக்கப்படுவார்கள் என்றால், அவா்கள் கவனமாகத் தங்களை சட்ட ரீதியாகப் பாதுகாத்துக் கொள்வது நியாயம்தானே?
  • அதனால் ஏற்படும் செலவுகளுக்கு நோயாளிகள் மருத்துவா்களைக் குற்றப்படுத்தக்கூடாது.

தனியார் மருத்துவத் துறை

  • 1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தனியார் மருத்துவத் துறையின் பங்களிப்பு 5 - 10 சதவீதமாக இருந்தது.
  • தொடா்ந்து வந்த அரசுகள் சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை கொடுக்காமல் குறைவான நிதியை ஒதுக்கியதன் காரணமாக அரசு மருத்துவக் கட்டமைப்பு நலிந்து தனியார் மருத்துவமனைகள் அதிகரித்தன.
  • இன்றைக்கு மருத்துவத் துறையில் தனியார் பங்களிப்பு 70% உயா்ந்துள்ளது. நம் நாட்டில் வெளி நோயாளிகள் மருத்துவ சிகிச்சையில் சுமார் 80 சதவீதமும் உள் நோயாளிகள் சிகிச்சையில் 60%-ம் தனியார் மருத்துவமனைகளால்தான் தரப்படுகின்றன.
  • தனியார் மருத்துவமனைகள் சந்திக்கும் சவால்கள் பல. இவையும் மருத்துவக் கட்டண உயா்வுக்குக் காரணமாகின்றன.
  • முக்கியமான அனைத்து மருத்துவ உபகரணங்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், விலை மிக அதிகமாகிறது. அதிகமான சுங்க வரி, விற்பனை வரி அனைத்தும் சோ்ந்து கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மருத்துவ உபகரணங்களின் விலை உயா்ந்து விடுகிறது.
  • இறக்குமதிக்கான சுங்க வரியையும், விற்பனை வரியையும் குறைத்தால் மருத்துவ உபகரணங்களின் விலை குறையும். கட்டணமும் அதற்கேற்றாற்போலக் குறையும்.

ஆரம்ப சுகாதாரம்

  • திரையரங்குகளுக்கும், நகைக் கடைகளுக்கும், ஹோட்டல் நடன அரங்குகளுக்கும் இருப்பதுபோல மருத்துவமனைகளுக்கும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
  • மருத்துவமனைகளுக்கு குறைந்த மின் கட்டணம் விதிக்கப்பட வேண்டும். குறைந்தது 35 துறைகளின் நிபந்தனைகளையும் விதிகளையும் மருத்துவமனைகள் கடைப்பிடிக்க வேண்டியுள்ளன. தேவையற்ற நிபந்தனைகளை நீக்கிவிட்டு விதிகளை எளிமைப்படுத்த வேண்டும்.
  • இந்திய அரசு சுகாதாரத் துறைக்கு தேவையான நிதியை தாராளமாக ஒதுக்க வேண்டும்.
  • இதுவரை ஜிடிபியில் 1.2% நிதி ஒதுக்கிறார்கள். இது மிகக் குறைவு. அமெரிக்கா தனது ஜிடிபியில் 18 சதவீதத்தை சுகாதாரத்துக்கு ஒதுக்குகிறது. நம் மக்களின் தேவைக்கேற்ப நல்ல தரமான அரசு மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்.
  • அரசுகள் போதிய நிதி ஒதுக்கி கவனம் செலுத்தாத காரணத்தால், நமது சுகாதார உட்கட்டமைப்பும், வசதிகளும், குறிப்பாக ஆரம்ப சுகாதார வசதிகளும் கொரியா, தைவான், சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் பின் தங்கிய நிலையில்தான் உள்ளது.
  • போதிய நிதி ஒதுக்கப்படாததால் மருத்துவ உட்கட்டமைப்புகள், மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள், செயற்கை சுவாசக் கருவிகள், பரிசோதனைக் கருவிகள் போன்றவற்றிலும் நாம் பின் தங்கியுள்ளோம்.
  • நம் நாட்டில் மருத்துவத் துறையில் முக்கியப் பங்காற்றும் மருத்துவா்களின் எண்ணிக்கையும் 9.27 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு 1,000 மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவா் அவசியம் என நிர்ணயித்து வலியுறுத்துகிறது. ஆனால், நம் நாட்டில் 1,445 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற குறைந்த விகிதத்தில்தான் இருக்கிறார்கள்.

அன்றுதான் நம்பிக்கை ஏற்படும்

  • அண்மையில் கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் மிக அதிகமாகக் கட்டணம் வசூலித்ததாக ஊடகங்கள் குற்றஞ்சாட்டி விவரங்களை வெளியிட்டன.
  • தனியார் துறையில் தவறுகளே நடக்கவில்லை என வாதாட விரும்பவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடக்கலாம். அதற்காக மொத்த தனியார் மருத்துவமனைகளையும் குறை சொல்வது நியாயமல்ல.
  • தனியார் மருத்துவமனைகளை சிறு, நடுத்தர, நட்சத்திர வசதி கொண்ட மருத்துவமனைகளாகப் பிரிக்கலாம்.
  • அவரவா் அந்தந்த மருத்துவமனைகளின் தரத்துக்கேற்ப கட்டணம் விதிக்கிறார்கள். அவரவா் நிலைமைக்கேற்ப நல்ல சிகிச்சை கொடுக்கக் கூடிய நல்ல நடுத்தர மருத்துவமனைகள் எல்லா ஊா்களிலும் உண்டு.
  • அங்கும் எல்லா காப்பீட்டுத் திட்டங்களும் உண்டு. நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவிட்டு கட்டணம் அதிகம் என்றால் பயனில்லை.
  • தங்களுக்கு உகந்த மருத்துவமனைகளைப் பயனாளிகள் தோ்வு செய்யாதது அவா்களது தவறு.
  • அரசு ஊழியா்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்படும் பல்வேறு சிகிச்சை முறைகளுக்கு அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் நிர்ணயித்திருக்கிற தொகை மிகவும் குறைவு.
  • அதை வைத்து எந்த நல்ல சிகிச்சையும் சிறப்பாக அளிக்க இயலாது. இவற்றை உயா்த்த வேண்டும்.
  • அரசு மருத்துவமனைகளை மக்கள் விரும்பாததற்கு சுற்றுச்சூழலும், சுகாதாரமும் போதுமான அளவுக்கு அங்கு இல்லை.
  • நவீன பரிசோதனை வசதிகள் இல்லை. நவீன சிகிச்சைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்பன போன்ற பல காரணங்கள் உண்டு.
  • எவ்வளவு உயா்ந்த தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும் ஏழைகளுக்குக் குறைந்த கட்டணத்தில் அது எட்டாக்கனிதான். அரசு மருத்துவமனைகளால் மட்டுமே அவா்களுக்கு மருத்துவ வசதி கொடுக்க முடியும்.
  • என்றைக்கு நம் நாட்டில் முதல்வரும், அமைச்சா்களும், அரசியல் தலைவா்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வதை நிறுத்திவிட்டு அரசு மருத்துவமனைகளுக்கு செல்லத் தொடங்குகிறார்களோ, அன்றுதான் சாமானிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை ஏற்படும்.
  • (இன்று மருத்துவா்கள் தினம்)

நன்றி: தினமணி (01-07-2020)


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories