மருத்துவர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை!
- சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர், கடந்த நவம்பர் 13 அன்று நோயாளியின் மகனால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அதே நாளில் ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர், நோயாளியால் தாக்குதலுக்கு ஆளானார். மூன்று மாதங்களுக்கு முன், கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவர்கள் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற வன்முறைகள் மருத்துவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
- ‘இந்தியாவில் 75% மருத்துவர்கள் பணியிட வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று இந்திய மருத்துவச் சங்கம் 2017இல் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 63% மருத்துவர்கள் மனதுக்குள் அச்சத்துடன் நோயாளிகளை அணுகுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
- தகாத வார்த்தைகளால் திட்டுவது, கையாலோ ஆயுதத்தாலோ தாக்குவது, பெண் மருத்துவர்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வது போன்றவை மருத்துவர்கள் பணியிடத்தில் எதிர்கொள்ளும் வன்முறைகளில் அடங்கும். பெரும்பாலும் நோயாளிகளின் உதவியாளர்களே இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
- மருத்துவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகளுக்குப் பெரும்பாலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக இருப்பதில்லை. அதிகக் கூட்டம் காரணமாக நீண்ட நேரக் காத்திருப்பு, போதுமான மருத்துவர்கள் இல்லாதது, குறைவான பாதுகாப்பு அம்சங்கள், நோயின் நிலை அல்லது நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த தகவல் தொடர்பில் போதாமை, சிகிச்சைக்கு ஆகும் செலவு, மருத்துவமனை நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள் குறித்துக் குறைதீர்ப்பதற்கான நபர்களோ மையங்களோ இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதுபோன்ற வன்முறைகளுக்கு வித்திடுகின்றன.
- மருத்துவர்கள் பற்றாக்குறையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சில நேரம் வாரத்துக்கு 120 மணி நேரத்துக்கு அதிகமாக மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற சூழலில் வேலைப்பளு, சோர்வு, அயர்ச்சி, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மருத்துவர்களால் நோயாளிகளிடமோ பார்வையாளர்களிடமோ போதிய நேரம் ஒதுக்கிப் பேச முடிவதில்லை. இதுவும் மருத்துவர்கள் மீதான வன்முறைக்குக் காரணமாக அமைகிறது.
- கொல்கத்தா பெண் மருத்துவரின் மரணத்தைத் தொடர்ந்து, இந்திய மருத்துவச் சங்கத்தின் கேரளப் பிரிவு 2024 ஆகஸ்ட் மாதம் இந்திய அளவில் நடத்திய ஆய்வில் 35% மருத்துவர்கள் பணியிடத்தில் பாதுகாப்பின்மையை உணர்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களிடம் நடைபெற்ற இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில் 60%க்கும் அதிகமானவர்கள் பெண் மருத்துவர்கள். இரவுப் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்குப் போதுமான ஓய்வறைகள் இருப்பதில்லை.
- பாதிக்கும் குறைவான மருத்துவர்களுக்கே ஓய்வறைகள் ஒதுக்கப்படுகின்றன. அவையும் மருத்துவமனையில் இருந்து தள்ளி இருப்பதோடு ஆளரவமற்ற, இருட்டான பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஓய்வறைகளில் கழிப்பறைகள் இருப்பதில்லை. இதனால் பல மருத்துவர்கள் தங்கள் வார்டிலேயே காலியான படுக்கையில் ஓய்வெடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.
- அவசர சிகிச்சைக்குக் கூட்டமாக வருகிறபோது பாதிக்கப்பட்டவரோடு உடன் வருகிறவர்கள் மருத்துவர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவது, கூட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு தகாத முறையில் தொடுவது போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். மது அருந்திவிட்டு வருகிறவர்களாலும் மருத்துவர்கள் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். தொடர்ச்சியான வேலை, சமூக – மருத்துவமனை நிர்வாகத்தின் நிர்ப்பந்தம் போன்றவற்றால் பலர் இதைப் புகாராகப் பதிவுசெய்வதுகூட இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
- அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாத வரை சட்டங்கள் மட்டும் தீர்வாகாது. மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, பார்வையாளர்களை அனுமதிப்பதில் தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்வது, பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும். ஆரோக்கியமான சமூகத்துக்கு அடித்தளமிடும் மருத்துவர்களின் பாதுகாப்பில் அரசும் மருத்துவமனை நிர்வாகமும் அக்கறை செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்!
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 11 – 2024)