- கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், ரஷ்யாவில் மருத்துவர்களுக்கு முதலில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அது குறித்து, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த புதின், “ஒரு மருத்துவர் இறந்தால், இன்னொரு மருத்துவரை உருவாக்க 30 வருடங்களாகும். கோடிக்கணக்கில் பணமும் செலவழிக்க வேண்டியிருக்கும். அதாவது ஒரு மருத்துவர் இறந்தால், அடுத்த 30 வருடங்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், மக்களில் பலர் உயிரிழக்க நேரிடும்” எனக் குறிப்பிட்டார். மருத்துவர்கள் உடல்நலத்துடன் இருந்தால்தான் மக்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இளம் வயதில் மருத்துவர்கள் மரணமடைவதாகச் சமீபகாலமாக வெளியாகும் செய்திகள் மருத்துவச் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
பாரமாக மாறும் பணிச்சுமை
- வலுவான மருத்துவக் கட்டமைப்புடன் சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அதேநேரத்தில் ஒவ்வொரு ஆட்சியிலும் புதிது புதிதாகப் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. ஆனால், அந்தப் பணிகளுக்காக, போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனால் ஏற்கெனவே அதிக வேலைப்பளுவில் சிரமத்துடன் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பணிச்சுமை மேலும் அதிகமாகிறது. கூடவே சிக்கலான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது ஏற்படும் மன அழுத்தம், சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் உயர் அதிகாரிகளின் மனப்போக்கு, உரிய ஊதியம் மறுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் இருக்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருவர் அல்லது இரண்டு பேர் மட்டுமே இருக்கும் நிலையில், மருத்துவர்கள் இயல்பாகவே அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
- தொழிலாளர் உரிமைச் சட்டத்தின்படி எட்டு மணிநேர உழைப்பைப் பற்றியெல்லாம் பேசப்படும் இந்தக் காலத்தில், முதுகலை மருத்துவ மாணவர்கள் 24, 36, 48 மணிநேரத் தொடர் பணிச் சுமையை எதிர்கொள்கின்றனர். பணி முடித்துவிட்டு வீடு திரும்பும் நேரங்களில் பல மருத்துவர்கள் தூக்கக் கலக்கத்தில், வாகன விபத்தில் சிக்கி இறந்திருக்கிறார்கள்.
கவனம் செலுத்த மறுக்கும் அரசு
- மன அழுத்தம், போதுமான தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாதது ஆகியவை மருத்துவர்களிடையே பொதுவான ஆபத்து காரணிகளில் சில. மருத்துவர்களின் ஆயுள்காலம் பொதுமக்களைவிட 10 ஆண்டுகள் குறைவு என்கிறார் மூத்த இதய சிகிச்சை நிபுணர் தீபக் கிருஷ்ணமூர்த்தி. “மன அழுத்தம் ரத்தக் குழாய்களின் உள் சுவரை எதிர்மறையாகப் பாதிக்கும். இது இறுதியில் இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
- எனவே ஆரோக்கியமான சமநிலையைப் பேணுவதும், மனதுக்கும், உடலுக்கும் போதுமான ஓய்வு கொடுப்பதும் மிக முக்கியம்” என்கிறார் பிரபல இதய சிகிச்சை நிபுணர் பி.காமத். உயிருக்குப் போராடும் நோயாளிக்குச் சிகிச்சை தரும்போது, எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்போடு மருத்துவர்கள் செயல்படுகிறார்கள். அப்போது மருத்துவர்களுக்கு அட்ரினலின் (Adrenaline) என்னும் ஹார்மோன் உடலில் அதிகமாகச் சுரக்கிறது. இது மருத்துவரின் உடல் ஆரோக்கியத்துக்கு, குறிப்பாக இதயத்துக்கு நல்லதல்ல.
- பெரும்பாலான அரசு மருத்துவர்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும், முதல் தலைமுறை மருத்துவர்களாகவும் இருக்கும் நிலையில் பொருளாதாரத் தேவை மிக அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு தரப்படும் உதவித் தொகையைவிட (Stipend), தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவர்களுக்கு, மிகவும் குறைவான ஊதியம் தரப்படுகிறது.
- மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியத்தைவிட, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ரூ.40,000 குறைவாகத் தரப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியம், நீதிமன்ற எழுத்தர்களின் ஊதியத்தைவிடவும் குறைவாக இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றமே வேதனை தெரிவித்த பிறகும் அரசு உரிய கவனம் செலுத்த மறுக்கிறது.
அரசு என்ன செய்ய வேண்டும்
- அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றது போல மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பது, மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்குக் கற்பித்தல் என்ற இரண்டு பணிகள் மட்டுமே மருத்துவர்களுக்குத் தரப்பட வேண்டும்.
- ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையில் நடத்தப்படும் ஆய்வுகள் துறை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர, மருத்துவர்களை மன வேதனைப்படச் செய்வதாக இருக்கக் கூடாது.
- அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் கிடைத்திட,முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வெளியிட்ட அரசாணை 354ஐ நடைமுறைப்படுத்தி, 12 ஆண்டுகளில்ஊதியப்பட்டை நான்கு கிடைத்திட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
- மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும். 24 மணிநேர பணி முறையை ரத்து செய்ய வேண்டும்.அதை ஈடுசெய்யும் வகையில் ‘ஷிஃப்ட்’ முறைப் பணியை ஏற்படுத்த வேண்டும். இதற்காக, 3 மடங்கு மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
- எங்காவது ஓர் உயிரிழப்பு ஏற்பட்டால், மருத்துவர்கள் அதற்கான காரணத்தை அலசி ஆராய்ந்து, இனி அதுபோன்ற உயிரிழப்பு ஏற்படாத வகையில் தீர்வை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
- அதேநேரத்தில் இந்தச் சமூகத்தையே உயிரோட்டமாக வைத்திருக்க, தங்கள் பங்களிப்பை வழங்கிவரும் 20,000 அரசு மருத்துவர்களைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது என உறுதியாக நம்புகிறோம்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 01 – 2024)