TNPSC Thervupettagam

மருந்து, மாத்திரை இல்லாமல் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியுமா?

March 1 , 2025 4 hrs 0 min 10 0

மருந்து, மாத்திரை இல்லாமல் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியுமா?

  • “சார், எனக்குச் சர்க்கரை வியாதி உள்ளது. மருந்து, மாத்திரை எல்லாம் வேண்டாம். எனக்கு இருக்கும் நீரிழிவு நோயை உணவு மூலமாகச் சரிசெய்ய முடியுமா?” என்கிற கேள்வியைப் பலரும் கேட்பதுண்டு. நாட்டின் எல்லையில் அத்துமீறல் என ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால் தகுந்த நடவடிக்கைகள் மூலம் தேசத்தைக் காப்பாற்றிவிடலாம். அதேபோல ரத்தத்தில் சர்க்கரை அளவு எல்லையைத் தாண்டுவதையும் தொடக்க நிலையிலே அறிந்து விட்டால் உடலைக் காப்பாற்றிவிடலாம். குறிப்பாக, இரண்டாம் வகை நீரிழிவு நோயால் (Type 2 Diabetes) பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டுரை இது.

நம்பிக்கையும் சிகிச்சைகளும்:

  • இரண்டாம் வகை நீரிழிவு நோய் என்பது பரம்பரை காரணமாக ஏற்படுவதால் இன்சுலின் சிறப்பாகச் செயல்பட முடியாது; இன்சுலின் சுரப்பும் குறைவாக இருக்கும். ஒருகட்டத்தில் இன்சுலின் குறைந்து கொண்டே வந்து நாளடைவில் சுரக்காமலே போய்விடும்.
  • இதன் காரணமாக இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகள் தேவைப்படும். ஒரு கட்டத்தில், இன்சுலின் மருந்து கொண்டுதான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். ஏனென்றால் இவ்வகை நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் நாளடைவில் செயலற்றுப் போய் விடும் என்று நம்பப்பட்டது.

ஆராய்ச்சிகளும் புதிய சிகிச்சைகளும்:

  • பல்வேறு சமீபத்திய ஆராய்ச்சிகள், கணைய பீட்டா செல்கள், இன்சுலின் மட்டுமே இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு காரணமல்ல எனத் தெரிவிக்கின்றன. இவற்றுடன் ஆல்ஃபா செல்கள், கல்லீரல், குடல், அதன் சில ஹார்மோன்கள் (incretins), மூளை, தசை, உள்ளுறுப்பு கொழுப்பு, சிறுநீரகம், அழற்சி பாதிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்குக் காரணங்களாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுக்கான தொடர்பை ஆய்வுகளும் உறுதிப்படுத்தி உள்ளன.
  • குறிப்பாக, உள்ளுறுப்புக் கொழுப்பும், உடல் எடையும், உடற்பயிற்சியின்மையும், தவறான உணவுப் பழக்கங்களும்தான் முக்கிய அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன. எனவே இவற்றைச் சரிசெய்வதன் மூலம் இன்சுலின் சுரப்பைச் சீராக்கலாம்; சிறப்பாகச் செயல்படவைக்கலாம்.
  • இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் உடற்பயிற்சிகளை முறையாக மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்து, உள்ளுறுப்புக் கொழுப்பைக் கரைத்து, உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலம் ரத்தத்திலுள்ள சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்திவிடலாம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

வயிற்றுப் பகுதி கொழுப்பு:

  • இன்சுலின் சிறப்பாகச் செயல்படாமல் போவதற்கு உடல் பருமனும், உள்ளுறுப்பு கொழுப்பும் (Obesity & Visceral fat) முக்கியக் காரணங்களாகும். இதில் உள்ளுறுப்புக் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் ஆழமாக இருக்கும் இரைப்பை, கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பாகும். இந்தக்கொழுப்பானது ரத்தத்தில் அதிக வினைப் பொருள்களை (Inflammatory cytokines) உருவாக்கி, இன்சுலின் செயல் படுவதற்கான சமிக்ஞைகளைத் (Impair insulin signaling) தடுத்துவிடும்.
  • இதனால், கல்லீரலில் இருந்து அதிக சர்க்கரை வெளிப்படும். இதன் தொடர்ச்சி யாகக் கல்லீரலில் இன்சுலின் செயல்படாத நிலை உருவாகும்; தசைகளில் இன்சுலின் செயல்படாத நிலை (Insulin resistance in muscle) ஏற்படும். இதனால், தசைகளால் குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாது.
  • இதைத் தொடர்ந்து கணைய பீட்டா செல்கள் நலிவுறும் (Beta cell dysfunction). இதனால், இன்சுலின் சுரப்பு குறையும். ஏற்கெனவே இன்சுலின் செயல்படுவதற்கான சமிக்ஞையும் குறைந்து இருப்பதால் நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை அளவு (Hyperglycemia) அதிகரிக்கும். உடலில் ஏற்படும் இம்மாற்றங்கள் இரண்டாம் வகை நீரிழிவு நோயை உருவாக்கிவிடும்.

திருப்புமுனை:

  • செயல்படாத இன்சுலினைச் சிறப்பாகச் செயல்பட வைப்பதுதான் இரண்டாம் வகை நீரிழிவு நோயைச் சீராக்குதலில் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. உடல் எடை குறைப்பாலும், வயிற்றுப்பகுதி கொழுப்பைக் கரைப்பதாலும் உடலில் அழற்சி பாதிப்புகள் குறை கின்றன. கல்லீரல் கொழுப்பும், கணையக் கொழுப்பும் கரைகின்றன. இதனால், இன்சுலின் செயல்படுவதற்கான சமிக்ஞை அதிகரித்து இன்சுலின் செயல்திறனும் மேம்படும். தேவையற்ற குளுக்கோஸ் கல்லீரலில் இருந்து வெளிப்படாது; ரத்தத்திலும் சேராது.
  • உடற்பயிற்சி செய்கிறபோது உடலில் குளுக்கோஸ் முறையாகப் பயன்படுத்தப் படுகிறது. இதனால், ரத்தச் சர்க்கரை நன்கு கட்டுக்குள் வந்துவிடுகிறது. இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையைக் குறைக்க எடுத்துக் கொள்ளும் மருந்துகளை மெல்லக் குறைத்துப் பின் முற்றிலுமாக நிறுத்திக்கொள்ளலாம்.

என்னென்ன பரிசோதனைகள்?

  • உடல் நிறைக் குறியீடு (பிஎம்ஐ), இடுப்புச் சுற்றளவு, வயிற்றுப்பகுதி சிடி, எம்ஆர்ஐ பரிசோதனைகள். உடல் பருமன் மற்றும் வயிற்றுப்பகுதி கொழுப்பு அளவுகளைத் துல்லியமாக அறிவது, சர்க்கரையைச் சீராக்கும் முயற்சிக்கு உதவும்.

உணவு - வாழ்க்கை மாற்றங்கள்:

  • இந்தியாவில் மக்கள் மூன்று வேளையும் அதிக அளவு மாவுச்சத்து உணவையே சாப்பிடுகிறார்கள். எனவே, உணவு முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, குறைந்த கலோரிகள், சீரான உடற்பயிற்சிகள் மூலம் உடல் பருமன், வயிற்றுக் கொழுப்பு, கல்லீரல், கணையத்தில் உள்ள கொழுப்புகளைக் குறைத்து உடலில் சுரக்கும் இன்சுலினைச் சிறப்பாகச் செயல்பட வைத்து, அதன் மூலமாக ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைத்துவிடலாம். ஆனால், இவ்வகை முயற்சியை ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் மேற்கொள்ள வேண்டும்.

அடுத்து என்ன?

  • உடல் எடை அதிகரிக்காமல் உணவு மாற்றங்களை, உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இடையே ரத்த குளுக்கோஸ் அளவைப் பரிசோதித்துப் பார்ப்பதுடன், தங்களது மருத்துவரிடமும் ஆலோசிக்க வேண்டும். இத்துடன் புகைப்பழக்கம், மதுப் பழக்கங் கள் இருந்தால் அவற்றை மூட்டைகட்டி வைத்து விட வேண்டும். மனச்சோர்வைத் தவிர்த்து, 7-8 மணி நேர உறங்க வேண்டும் வாழ்க்கை மாற்றங்களால் உடல் எடை யைக் குறைத்து சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உடல் பருமன் உடையவர் களுக்கு இரைப்பை, குடல் அறுவைசிகிச்சை செய்து ரத்தச் சர்க்ரையைச் சீராக்கலாம்.

விட்டுவிடாதீர்கள்:

  • நீரிழிவு நோய் குணமாகிவிட்டது, இனி எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என மீண்டும் கட்டுப்பாடில்லாத உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால், ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரித்து மீண்டும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்பட்டுவிடும்.

யாரால் முடியும்?

  • சர்க்கரை நோய் வருவதற்கு ஆரம்ப நிலையில் உள்ளவர்கள்
  • கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டு அதன் பிறகுள்ள காலக்கட்டம்
  • மனச்சோர்வு உள்ளவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்
  • மருந்துகளால் ஏற்படும் சர்க்கரை நோய்.
  • ரத்தத்தில் போதுமான அளவு சி பெப்டைடு (c peptide) உள்ளவர்கள்
  • சர்க்கரையைக் கட்டுப்படுத்த மிகக் குறைந்த அளவே மருந்து தேவைப்படும்.
  • சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ளவர்கள்.
  • புதிய நீரிழிவு நோயாளிகள்.

யாரால் முடியாது?

  • முதல் வகை நீரிழிவு நோயாளிகள்
  • நீண்ட காலமாகச் சர்க்கரை நோய் உள்ளவர்கள
  • பல்வேறு உடல்பாதிப்பு/ உறுப்பு பாதிப்பு ஏற்பட்டவர்கள்
  • முற்றிய நிலையிலுள்ள சர்க்கரை நோயாளிகள்
  • கணையப் பாதிப்பினால் ஏற்பட்ட சர்க்கரை நோயாளிகள்
  • ரத்தத்தில் டிரைகிளிசரைடு, காமா ஜிடி மிகுதியாக உள்ளவர்கள்

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories