TNPSC Thervupettagam

மறதிநோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க

August 27 , 2023 316 days 332 0
  • இந்தியாவில் ஆண்டுதோறும் 3,50,000 முதியவர்கள் அல்சைமர், டிமென்ஷியா (Alzheimer's and dementia) மறதி நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், 2050இல் 15.2 கோடிப் பேர் அல்சைமர் நோய்க்கு ஆளாவார்கள் என்று உலகளாவிய அல்சைமர் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • 30 வயதை எட்டும்போது உடல் தேய்மானம் மெல்ல ஏற்படத் தொடங்குகிறது. இந்தத் தேய்மானத்தின் பாதிப்பை 55 வயதில் நமது உடல் வெளிப்படுத்தும். இதுவே நமது மூளையைத் தாக்கி முதுமையின் ஆரம்பத்தில் மறதி நோயை (அல்சைமர்) ஏற்படுத்துகிறது.

மறதி நோய் ஏன் ஏற்படுகிறது?  

  • பெருமூளையின் மேற்பரப்பில், போர்வையால் போர்த்தியதுபோல நரம்பணுக்கள் அமைந்திருக்கின்றன. அவை கணினியின் மின் அலைகளைப்போலச் செயல்படுகின்றன. பெருமூளையின் மேற்பரப்பில் உள்ள நரம்பு அணுக்கள்உடல் இயக்கம், உணர்வு, மொழி ஆகியவற்றை அறிய, பகுத்தறிவுடன் யோசிக்க, இயற்கையை ரசிக்க, கற்றதை ஞாபகத்தில் சேமித்து வைக்க உதவுகின்றன. மொத்தத்தில் மனித உடலின் அறிவுக் கருவியாக இந்தப் பெருமூளையின் மேற்பரப்பு அமைந்திருக்கிறது. இங்கே உள்ள நரம்பணுக்களில் பல ஆண்டுகளாக ஏற்படும் தேய்மானத்தால் அல்சைமர், டிமென்சியா மறதிநோய் முதியவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆளுமை மாற்றம்

  • மறதி நோயின் தீவிரத்தை நமது ஆளுமையில் நிகழும் மாற்றத்தின் மூலம் அடையாளம் காணலாம். அதன் முதல்படி நாம் யார் என்பது முதலில் மறந்துபோகும். பல ஆண்டுகளாக நாம் கடைப்பிடித்து வந்த கட்டுப்பாடுகளும் சமூகப் பொறுப்புகளும் நம் நினைவிலிருந்து அகலத் தொடங்கும். நாம் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதே மறந்து போகும்.

விழிப்புலன் பாதிப்பு

  • மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு காட்சி மாயைகள்மீண்டும் மீண்டும் தோன்றி மறையும். விலங்குகள் ஜன்னல் வழியே வீட்டினுள் நுழைவதாகவும் தெருவில் விளையாடும் பேரன், பேத்திகள் அந்தக் காட்சியைப் பார்த்ததாகவும் கூறுவார்கள். ஆனால், அவை எல்லாம் அந்த முதியவர்கள் கண்ட காட்சி மாயை. மூளையின் பின் பகுதி மடல், விழிப்புலன் உணர்வைப் பெற்றதும் அது காணும் காட்சிகளை நமக்கு உருவகப்படுத்தித் திரையிட்டுக் காட்டும். முதுமையில் இப்பகுதி தேய்வதாலும் தூக்கம் இல்லாமல் இருப்பதாலும் காட்சி மாயைகள் தோன்றுகின்றன.

பேசுவதில் தடுமாற்றம்

  • மறதி நோயால் மொழி ஆளுமையில் மாற்றம் ஏற்படும். அன்றாட உரையாடலின்போது, வார்த்தைகள் கிடைக்காமல் சிரமப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டறிவதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே, மொழியைக் கையாள்வதில் அவர் சிரமத்தை எதிர்கொண்டார்.

காட்சிப் பிழை

  • கண்களுக்கு இயல்பாகப் புலப்படும், முப்பரிமாணக் காட்சிகள், அதன் தொலைவு, பொருளின் அகலம், உயரம், நீளம், தன்மை, நிறம் உள்ளிட்ட அனைத்தும் பிழைகள் நிறைந்து தோன்றும். இந்நோயுற்றோர் வாகனம் ஓட்டும்போது இதன் ஆபத்தை உணரக்கூடும்.

நோயின் அறிகுறிகள்

  • ஆரம்பத்தில் சாப்பிடுவது, சிந்திப்பதில் சிக்கல் ஏற்படும். வாசித்தல், எழுதுதல், வாகனம் ஓட்டுதல் போன்று நன்கு அறிந்த செயல்பாடுகளை மறக்க நேரிடும். நினைவுக் குறைபாடு அதிகரிக்கும். உதாரணத்துக்கு, சாவியை வைத்த இடம் மறந்து தினம் தினம் தேடுவது அன்றாட நிகழ்வானால் மறதி நோய் எச்சரிக்கை மணி அடிக்கிறது என்று பொருள்.
  • மின் விசிறியை நிறுத்தாமல் போவது, சமையல் எரிவாயு சிலிண்டரை அணைக்க மறப்பது, திறந்த குழாயை மூடத் தவறுவது என்பது போன்ற குறைபாடுகள் இந்நோயின் அறிகுறிகளே. எழுதுகோல் போன்ற பொருளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முதியவர்கள், மறதி நோய் வந்தபின் அவற்றின் பெயர், அவற்றின் பயன்பாடுகளைக்கூட மறந்து போவர்.
  • முதுமையில் மறப்பது இயல்பு. பிற நோயற்ற முதியவர்களுக்கு அவர்களின் மறதியைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வார்கள். ஆனால், அல்சைமர் - டிமென்சியா மறதி நோயுற்றோர் பிழைகளைத் திருத்திக்கொள்ள முயன்றாலும், அவர்களால் பிழைகளைத் தவிர்க்க முடியாது.
  • பொருளாதார இழப்பு: மூளையின் சிறப்புச் செயல்பாடான முடிவெடுக்கும் ஆற்றல், மறதி நோயால் சிதைந்து போகும். இவ்வாறான சூழலில் எடுக்கப்படும் முடிவுகள் பொருளாதாரத்தில் பெரும் இழப்பு ஏற்பட வழிவகுத்துவிடும். கணக்கில் சிறப்பு ஆளுமை படைத்தவர், மறதி நோயால் சிறிய கணக்கில்கூடப் பிழைகள் புரிவார். பணம் தொடர்பான கொடுக்கல், வாங்கல் பிரச்சினை ஏற்படும். பணி இழப்பைச் சந்திக்கலாம்.

மனரீதியான பாதிப்பு

  • மறதி நோயால் அறிவாற்றல் அழிந்து போகும். வாழ்க்கை மீது எந்தவோர் ஆர்வமும் பிடிப்பும் இல்லாத நிலை ஏற்படும். குடும்ப, சமூக அக்கறைகளை இழந்துவிடுவர். இந்த நிலையில் உளவியல் பரிசோதனைகள் நிச்சயம் அவசியம்.
  • குடும்ப உறுப்பினருக்கு ஆபத்தோ துன்பமோ ஏற்பட்டால், பச்சாதாபம் இல்லாமல் அந்நியரைப் போல் நடந்துகொள்வர். மறதி நோயின் இறுதியில் அவர் யார் என்பதை மறந்து, குடும்ப உறுப்பினர்களையும் மறந்துவிடுவர்.
  • மறதி நோயைத் தடுக்கும் வழி: முதுமையில் மறதி நோயைத் தடுப்பதற்குக் குடி, புகைபிடிக்கும் பழக்கங்களைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளை அன்றாடமாக்கிக் கொள்ள வேண்டும்.
  • ரத்தசோகை, தைராய்டு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உதறுவாதம் போன்ற நோய்களுக்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். உடலில் போலிக் அமிலம், வைட்டமின் பி6, பி12 குறைபாடுகள் உள்ளனவா எனக் கண்டறிந்து சரி செய்துகொள்ள வேண்டும்.
  • மீன், வால்நட் பருப்பு, பாதாம் பருப்பு, பூசணி விதை, முலாம்பழ விதை, ஆளி விதை, கடலை போன்ற உணவு வகைகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், மூளையின் அணுக்களைப் புதுப்பித்து நன்மை தரும். பால், பழங்கள், காய்கள் நிறைந்த உணவு வகைகளை உண்பது நன்மை பயக்கும். மரபணுக் கூறு பிழை இருக்கும்பட்சத்தில் நோய் தடுக்கும் வழிமுறையைப் பின்பற்றிப் பாதிப்பைத் தள்ளிப்போடலாம்.
  • நல்ல எண்ணங்களையும் குணங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். போதுமான உடல் உழைப்பு, எட்டு மணி நேரம் உறக்கம், மன அமைதி ஆகியவை நிச்சயம் தேவை. வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது நல்லது. புதியவற்றைக் கற்பது, எழுதுவது, இயற்கையை ரசிப்பது ஆகியவை உடலுக்கும் மனத்துக்கும் நன்மையை ஏற்படுத்தி மறதி நோய் வராமல் தடுக்க உதவும்.

நன்றி : இந்து தமிழ் திசை (27 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories