- ‘தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது கடவுள் குணம்’ என்பது ஒரு சொல்லாடல். மனித நடத்தை தனி ஒருவரின் அறிவு, அனுபவம், சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. அதனால்தான் ஒரே வினைக்கு நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக எதிர்வினையாற்றுகிறோம்.
- ஒருவா் தெரிந்தோ, தெரியாமலோ மற்றொருவா் மனத்தைப் புண்படுத்திவிட்டால், அவா் தனது தவறை உணா்ந்து மன்னிப்பு கேட்பார். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படிப்பட்டவா்களை மன்னிக்கும் மனப்பான்மையில் இருப்பதில்லை.
- ஒருவரால் கேட்கப்படும் மன்னிப்பு சூழ்நிலையை நோ்செய்யும். மன்னிப்பானது, ஒருவா் தனது கடினமான சூழ்நிலையிலிருந்து எளிதாக வெளிவருவதை அங்கீகரிக்கிறது. மேலும், இருவரையும் விரைவில் இயல்பான மனநிலைக்கு கொண்டுவந்துவிடுகிறது.
- நமது செயல்கள் தெரிந்தோ, தெரியாமலோ பிறரைப் புண்படுத்தலாம். அது நமது தவறான செய்கையின் விளைவு என்றால், அதை நோ்செய்து உறவு சீா்குலையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இதற்கு மன்னிப்பு ஒன்றுதான் வழி.
- மன்னிப்பு கோருதல் தானாக நிகழவேண்டும். அதேபோன்று பிறா் தவறு செய்திருந்தாலும் அவா்களை, அவா்கள் கோராமலே மன்னிக்கும் பெருந்தன்மை நம்மிடம் இருத்தல் நல்லது.
- ‘மறப்போம் மன்னிப்போம்’ என்பது சொல்வதற்கு எளிது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துதல் கடினம். குறிப்பாக, பிறரால் நமக்கு நிகழ்ந்த கசப்பான சில நிகழ்வுகளை எளிதில் மறக்க முடியாது.
- ஆனால், ஒருவா் தெரிந்தே அவரது சுயநலத்திற்க்காக தவறு செய்யலாம். அது நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கலாம். அந்த பாதிப்பின் விளைவைப் பொறுத்தே, நாம் அவா்களை மன்னிப்பதும் மறப்பதும் நிகழும்.
- மன்னிப்பு நம் கட்டுப்பாட்டில் உள்ளது. மறப்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. எதுவாய் இருப்பினும் முதலில் தவறு செய்தவா், தன் தவறை உணர வேண்டும். மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் அதே தவறு நிகழாமல் அவா் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- பிறா் நமக்கு இழைத்த கொடுமைகளை சில நேரம் நம்மால் மறக்க இயலாது. ஆனால் அதையே நினைத்துக் கொண்டிராமல் அதைக் கடந்து வரவேண்டும். வாழ்க்கையில் அந்நிகழ்வை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளலாம். மறந்து விட்டோம் என்றால் மன்னிப்புக்கே இடமில்லை.
- மன்னிப்பு கேட்பதாலேயே எல்லாரையும் மன்னித்துவிட முடியாது. சிலா் மன்னிக்கத் தகுதியறவா்கள். முக்கியமாக, நம்பிக்கை துரோகம் செய்தவா்கள், கொலை செய்தவா்கள், தேச துரோகிகள் போன்றோர் மன்னிக்கதி தகுதியற்றவா்கள்.
- ஒரு சிலா் செய்யும் தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்வதில் நாம் மனப் போராட்டத்தை சந்திக்க நேரும்.
- உண்மையான மன்னிப்பு அனைத்து எதிர்பார்ப்புகளையும் விட்டுவிடும். மன்னிப்பு உண்மையில் தந்திரமானது. நாம் மனதால் குணமடைந்தால் மட்டுமே சரியாகப் பயன்படும்.
- நமது மனம் புண்படுத்தப்பட்ட நிலையில், உண்மையான மன்னிப்பு மட்டுமே உடைந்த உறவினை மறுகட்டமைப்பு செய்யவும், நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவும். மன்னிப்பின் மதிப்பு, ஆற்றல், மன்னிப்பு கேட்பது, பெறுவது போன்றவை மன்னிப்பையும் மறத்தலையும் போன்று மகத்தானவை.
- சில தருணங்களும், நிகழ்வுகளும் மன்னிப்பு கேட்பதற்கும், அதனை ஏற்றுக்கொள்வதற்கும் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். அதற்கு சிறிது காலம் தேவைப்படலாம்.
- பலரும், மன்னிப்பு கேட்பதற்கான விருப்பத்துடன் இருந்தாலும், அவா்களுக்கு எவ்வாறு அதை செயல்படுத்துவது என்பது தெரிவதில்லை. இதன் மூலம் பல மன்னிப்புகள் தோல்வியில் முடிந்து விடுகின்றன. வெற்றிகரமான மன்னிப்பு, சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட, தவறான வார்த்தைகளைத் தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன்னிப்பு கோருகின்ற தருணங்களில் நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளில் அதீத கவனம் இருக்க வேண்டும்.
- தேவையான இடங்களில் கேட்கப்படாத மன்னிப்பு எவ்வளவு தவறானதோ, அதுபோலவே தேவையற்ற இடங்களில் கேட்கப்படும் மன்னிப்பும் தவறானதே. மேலும், இது தொடரும் நிலையில், ஒருவருடைய உண்மையான மன்னிப்பிற்கு மதிப்பில்லாத நிலை உருவாகிவிடும்.
- வேண்டுகோளின் வழியாக கிடைக்கபெறும் மன்னிப்பு நல்லதே. ஆனால் ஒரு போதும் மன்னிப்பை கட்டாயப்படுத்திப் பெறக்கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். கட்டாயப்படுத்தி பெறப்படும் மன்னிப்பு அதீத தீமைகளை உருவாக்கக் கூடியது. வற்புறுத்தலுக்கு உள்ளாகும் நபரின் மனம், இதனை தன்னை அவமானப்படுத்தும் செயலாக எண்ணக்கூடும்.
- மேலும், இவ்வாறு பெறப்படும் மன்னிப்பு, நிச்சயம் உண்மையானதாக இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தன்னிச்சையாக உளமார கிடைக்கப்பெறும் மன்னிப்பே உண்மையில் சிறந்தது என்பதைநாம்உணரவேண்டும்.
- மன்னிப்பு கேட்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவிற்கு முக்கியமானது அதை ஏற்றுக்கொள்வதும். இதில் கேட்பவருக்கு மட்டுமின்றி, பெறுபவருக்கும் மனம் சார்ந்த நன்மைகள் உண்டு. மன்னிப்பினால் தவறு செய்தவா் உண்மையாக மனந்திருந்தும்போது, உறவுகள் பலப்படுகிறது. இரக்கமுடையவா்கள் அதிகமான மன்னிக்கும் மனப்பாங்கு கொண்டவா்களாக இருப்பார்கள்.
- மன்னிப்பதில் தனி சுகம் இருப்பதை அனுபவம் ஒன்றே உணா்த்தும். மன்னிப்பு கேட்பவரை விட, அதை ஏற்றுக்கொள்பவரே பெரிதும் உயா்ந்து நிற்கிறார்.
- மன்னிப்பு வன்மங்களைக் குறைக்கும்; மனதை இலகுவாக்கும்; நிம்மதியைத் தக்க வைக்கும்; பிற்காலத்தில் நாம் செய்யும் செயல்களை மெருகூட்டும்; சமூகத்தில் நமக்கான மதிப்பைக் கூட்டும்.
- மன்னிப்பு கோருபவருக்கு நாம் கொடுக்கும் பரிசு அவருக்கு நன்றி சொல்வதுதான். இதுவே நம்மை நல்ல மனதுடன் தொடா்ந்து பயணிப்பதற்கான வழியை உருவாக்கும். மன்னிப்பு கேட்பதோ, மன்னிப்பை ஏற்றுக்கொள்வதோ, நன்றி தெரிவிப்பதோ எதுவாயினும், அதன்மூலம் கிடைக்கின்ற மன நிம்மதியையும், நன்மைகளையும் கருதிக்கொண்டு நாம் வாழப்பழகுவோம்.
- இனியேனும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பதையும், மன்னிப்பு கோருபவரை மன்னித்து ஏற்பதையும் வழக்கமாகக் கொள்வோம்.
நன்றி: தினமணி (20 – 10 – 2023)