TNPSC Thervupettagam

மறுசீரமைப்பு

August 22 , 2019 1980 days 1085 0
  • நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்படுவதையும், மாவட்டங்கள் பிரிக்கப்படுவதையும், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்கப்படுவதையும் தவிர்க்க முடியாது. விடுதலைக்குப் பிறகு பெரிய மாநிலங்கள் பல பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சிறிய மாநிலங்களேயானாலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதற்கு ஹரியாணாவும் சத்தீஸ்கரும் எடுத்துக்காட்டுகள்.
    ஒன்றுபட்டிருந்த சென்னை ராஜதானியில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்னாற்காடு, தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோவை, நீலகிரி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி என்று 12 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து 13-ஆக உயர்ந்தது.
5 மாவட்டங்கள்
  • கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இதுவரை ஐந்து புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். எட்டு மாதங்களில் மிக அதிகமான மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. நீண்டகால கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படுகின்றன என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம். 
    கடந்த ஜனவரியில் கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டது.
  •  திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டமும், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும் உருவாக இருப்பதாக ஜூலை மாதத்தில்  தெரிவிக்கப்பட்டது. இப்போது தனது சுதந்திர தின உரையில் வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக இருப்பதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் மொத்தமுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக உயரப்போகிறது. 
நிர்வாக வசதிக்காக....
  • தமிழகத்தைப் பொருத்தவரை, மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக மட்டுமல்லாமல், அரசியல் காரணங்களுக்காகவும் பிரிக்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்துக்கு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அண்ணாவின் பெயரைச் சூட்டியதும், திமுக ஆட்சி அமைந்தபோது காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அண்ணாவின் பெயரைச் சூட்டியதும் அரசியலல்லாமல் வேறென்ன? 
  • மக்கள்தொகைப் பெருக்கம் ஒருபுறம், மக்களுடைய எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பது இன்னொருபுறம், நிர்வாகத் தேவைகள் விரிவடைந்திருப்பது மற்றொருபுறம், ஒட்டுமொத்த சமஸ்தானத்தை திவான் ஒருவரே நிர்வகித்து வந்ததும், மாநிலங்களை ஆங்கிலேயே ஆளுநர்கள் தங்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் பழங்கதை. இன்று சாத்தியம் அல்ல.
  • மாவட்டங்கள் பிரிக்கப்படுவதும், சிறிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதும் தவிர்க்க முடியாதவை. மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் நிர்வாகச் செலவு கூடும் என்பதில் அர்த்தமில்லை. வரி வருவாய் அதிகரிக்கிறது என்பதையும் கணக்கில் கொண்டால், சிறிய மாவட்டங்கள் விரைவான வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதை உணர முடியும்.
  • மாவட்டங்களைப் பிரிக்கும்போது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பிரிப்பதால், தேவையில்லாத பிரச்னைகளும் முரண்களும் ஏற்படுகின்றன. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாகப் பிரிக்கப்படாமல் திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதன் விளைவால், இப்போதும் மயிலாடுதுறை மக்கள் மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்துக்கு திருவாரூர் வழியாகச் செல்ல வேண்டிய அவலம் தொடர்கிறது. 
தற்பொழுது
  • இப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து, அரக்கோணத்தை ராணிப்பேட்டை மாவட்டத்துடன் இணைக்காமல் காஞ்சிபுரத்துடன் இணைக்கவும், ஆம்பூரை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைக்காமல் வேலூரில் தொடரவும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
    நாடாளுமன்றத் தொகுதிகள் மாவட்டமாக இருக்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டால், நிர்வாகம் மேம்படும் என்பது மட்டுமல்லாமல், அந்தந்த மாவட்ட மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கு அது வழிகோலக்கூடும். 
    நாடாளுமன்ற உறுப்பினரும், அப்படி அமையும் மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களும்  தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழங்க முடியும். அதுபோன்ற வரைமுறையை ஏற்படுத்தாமல் அரசியல் காரணங்களுக்காக மாவட்டங்கள் உருவாகும்போது, எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படாமல் போகும். 
  • மாவட்டங்களைப் பிரிப்பதற்கு முன்னால், முறையான ஆய்வு நடத்தப்பட்டு பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டு மக்கள் நலன், நிர்வாக வசதி ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்குவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
  • வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டமாக திகழும் சேலம் பிரிக்கப்பட வேண்டுமென்றும், பொள்ளாச்சி தனி மாவட்டமாக வேண்டுமென்றும், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. இப்படியே போனால், பேரூராட்சிகளெல்லாம் மாவட்டமாக வேண்டும் என்கிற கோரிக்கை எழக்கூடும்.
  • மாவட்ட சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டு அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, நாடாளுமன்றத் தொகுதிகள் மாவட்டங்களாக அறிவிக்கப்படுவதுதான் நிரந்தரமான தீர்வாகஇருக்கும்!

நன்றி: தினமணி(22-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories