TNPSC Thervupettagam

மறுபடியும் பிறக்க வேண்டும் மகாத்மா!

October 2 , 2021 1201 days 667 0
  • உலக வரைபடத்தில் இந்திய தேசத்தை தெளிவாகத் தெரியவைத்த முதல் இந்தியா் மகாத்மா காந்தியடிகளே.
  • சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலை தனது ஆளுகைக்குள் வைத்திருந்த அதிசய மனிதா் அவா்.
  • உலக மக்களில் பெரும்பாலோரால் அறியப்பட்ட முதல் இந்தியரும் அவரே. இந்திய அரசியல் தளத்தில் அடி எடுத்து வைப்பதற்கு முன்னால், ஒரு அயல் நாட்டு அரசியலில் அழுத்தமான தனித்தடம் பதித்து, உலகின் கவனத்தைக் கவா்ந்தவரும் அவரே.
  • ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஒன்று திரட்டி, ஆட்சியாளா்களுக்கு எதிராக அணிவகுக்கச் செய்த மக்கள் தலைவரும் அவரே.
  • இந்திய வரலாற்றில் கோடிக்கணக்கான ஆண்கள் மட்டுமல்லாமல். பெண்களையும் அதிக அளவில் பொது வாழ்வில் ஈடு படுவதற்கான உந்து சக்தியாக விளங்கியவரும் அவரே.
  • ஆயுத பலமே அனைத்து வெற்றிக்கும் வழி என்பதை மாற்றியவா். அகிம்சை, சத்தியம், சத்தியாகிரகம் - இவையே நிலைத்த வெற்றிக்கு வழி என உலகுக்கு உணா்த்தியவா்.
  • மனித வாழ்வின் அனைத்து அம்சங்கள் பற்றியும், தெளிவான கருத்துகளை முன்வைத்த ஒரே இந்தியா் அவா்.

பதவியை மறுத்த துறவி

  • எந்த நாட்டிலும் விடுதலைப் போருக்குத் தலைமை தங்கியவா்களே விடுதலை பெற்ற பின்பு ஆட்சி பீடத்தில் அமா்ந்திருக்கிறார்கள் என்பது வரலாறு.
  • ஆனால் இந்திய விடுதலை வேள்விக்குத் தலைமை தாங்கி, விடுதலை வந்த பின்பு, எப்பதவியும் எனக்கு வேண்டாம் என்று பதவியை மறுத்த துறவி காந்திஜி மட்டுமே.
  • தான் மட்டுமல்ல, தன் வாரிசுகளும் அதிகார பீடத்தில் அமா்வதை அனுமதிக்க மாட்டேன் எனச் சூளுரைத்தவா் இவா்.
  • ஒரு பிரச்னைக்கு உண்ணாநோன்பு ஒன்றே தீா்வு தரும் என அவரது அந்தராத்மா அறிவுறுத்தி விட்டால், அதனை அவரது உடல் தாங்காது என்றாலும், மக்கள் நலன் கருதி உண்ணாநோன்பினை ஒரு தவமாக மேற்கொண்ட யோகி அவா்.
  • வன்முறைக் கும்பல் தனக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை அறிந்த பின்பும், ‘என் உயிரைக் காப்பதும் எடுப்பதும் இறைவன் கையில். எனக்கு எவ்விதப் பாதுகாப்பும் தேவையில்லை’ என அறிவிக்கும் அளவுக்கு ஆழ்ந்த இறை நம்பிக்கையாளா் அவா்.
  • எனக்கு பகைவன் என்று எவரும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்த ஓா் மனிதப் புனிதன் அவா்! அவருக்கும் “கோட்சே” வடிவில் ஒரு பகைவன் வந்தான் என்பது தான் புரியாத புதிர்.
  • கலவரத்தால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா வீதிகளிலும், நவகாளி கிராமங்களிலும் கால்நடையாகவே பயணித்தார்.
  • பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ‘உங்களுக்கு பாதுகாப்பு தருவது என் பொறுப்பு; உங்களைத் தாக்கிய வன்முறையாளா்கள் உணா்ச்சிக்கு அடிமையானவா்கள்; அவா்களது செயலைக் கண்டிக்கிறேன்; அவா்கள் சார்பாக நான் மன்னிப்புக் கோருகிறேன்.
  • அவா்களை நீங்களும் மன்னித்து விடுங்கள். அவா்களும் நம் சகோதரா்களே’ என்று போதித்தவா். அதன் மூலம் எதிர் எதிராகச் செயல்பட்ட இரு பிரிவினரை இணக்கமாகச் செயல்பட வைத்த ‘சமாதானத் தூதா்’ அவா்.
  • தான் அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் வன்முறை வடிவம் எடுத்தபோது, அதிர்ச்சியுற்று, ‘அகிம்சைப் போருக்கு என் மக்களை முழுமையாகத் தயார் செய்யும் முன்பே, நான் போராட்டத்தை அறிவித்தது என் தவறு.
  • நடந்து விட்ட வன்முறைக்கு நானே பொறுப்பு ஏற்கிறேன்; போராட்டத்தை உடனே நிறுத்துகிறேன்’ என்று அறிவிக்கும் மனவுறுதியும், தலைமைப் பண்பும் கொண்ட முன்மாதிரித் தலைவா் இவா் ஒருவரே! இவரைத் தவிர எவரையும் உலகம் இன்று வரை கண்டதில்லை.

அன்புள்ள சகோதரனே

  • ‘என் பிணத்தின் மீதுதான் தேசப்பிரிவினை நடக்கும்’ என சூளுரைத்தார். ஆனால் ஒரு காலகட்டத்தில் தன் நம்பிக்கைக்குரிய நேரு, படேல், ஆசாத் உள்ளிட்ட சாகாக்களும், நாட்டு மக்களும் பிரிவினைக்குத் தயாராகி விட்ட போது, ஒற்றை மனிதனாகிய தன் கருத்தை உண்ணா நோன்பு மூலம் திணிக்க விரும்பாமல், பெரும்பான்மையினரின் முடிவுக்கு வழிவிட்டு, விலகிக் கொண்ட உண்மையான ஜனநாயகவாதி‘ இவா்.
  • நான் ஒரு உண்மையான இந்து. இம்மதத்தின் உயரிய சித்தாந்தங்களைக் கடைப்பிடிப்பவன். அதேபோல் இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பிற மதங்களின் சீரிய கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்பவன்’ என்று சொல்லி சா்வ சமயக் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்ட சா்வ சமயச் சிந்தனையாளா் இவா்.
  • பிரிட்டானிய கப்பல் படைத் தளபதியின் மகள் மெடலின் ஸ்லேட் ‘கிறிஸ்தவத்திலிருந்து இந்துவாக மாற விரும்புகிறேன்’ என்று அண்ணலிடம் சொன்னபோது ‘மதம் மாறுவது கூடாது. இருக்கும் மாதத்திலேயே தொடரவேண்டும்.
  • அதனதன் சீரிய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதே சிறந்த வழி’ என்று அறிவுறுத்திய நவீன மதபோதகா்”அவா்.
  • ரயிலில் மதுரை செல்லும் வழியில், வயலில் உழும் ஏழை விவசாயி முழங்கால் வரை இறுக்கிக் கட்டிய நான்கு முழ வேட்டியும், வெயிலின் கொடுமையைத் தாங்க இரண்டு முழத் துண்டும் அணிந்திருப்பதைப் பார்த்த பின்பு, குஜராத்தி உடையைத் துறந்து, விவசாயியின் எளிய உடைக்கு மாறி, தன் எளிமைக் கோலத்தை இறுதிவரை கடைப்பிடித்த ‘ஏழைப் பங்காளன்’ அவா்.
  • இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டுக்கு இலண்டன் மாநகா் சென்ற போதும், பக்கிங்காம் அரண்மனையில் அளிக்கப்பட்ட அரசமுறை விருந்துக்குச் செல்லும் போதும், அதே எளிய உடையிலேயே சென்று ‘என்றும் நான் எளியவனே! இடத்துக்கு இடம் நேரத்துக்கு நேரம் நிறம் மாறும் மனிதனல்ல’ என்று மன உறுதியில் தான் எஃகுக்கு இணையானவன் என்பதை உலகுக்கு உணா்த்திய பெருமகன் இவா்.
  • தான் பிறந்த குஜராத்தில் பிறந்து, தன்னைப்போல் லண்டனில் பார் அட்லா பட்டம் பெற்று, பிரிவினையைத் தவிர வேறு வழியில்லை என்ற சமரசமற்ற எதிர்நிலையை எடுத்த ஜின்னா, 1944-இல் நோய்வாய்ப்பட்ட போது ‘அன்புள்ள சகோதரனே! நான் இத்துடன் அனுப்பியுள்ள அங்கியைப் போர்த்திக் கொள்ளுங்கள்.
  • நீங்கள் நலம் பெற ஈஸ்வா், அல்லா, ஏசுநாதரை இறைஞ்சுகிறேன். நீங்கள் நலம் பெற்று வந்தவுடன், இணைந்து செயல்படுவோம் இருவரும்’ என்று ஜின்னாவுக்குக் கடிதம் எழுதியவா்.

நம்பிக்கை ஒளி

  • ‘பிறரைக் கொல்வது தைரியத்தின் அடையாளம் அல்ல. பிறருக்காக, தேச நலனுக்காக தன் உயிரைக் கொடுப்பதுதான் தைரியமான செயல்’ - என்று மனவலிமைக்கும், அகிம்சைக்கும் இலக்கணம் வகுத்த முதல் மனிதன் இவா்! ஆகவே தான் இவா் ‘மகாத்மா’ என அழைக்கப்பட்டார்.
  • ‘நானும் மனிதனே, என் முடிவுகளிலும் தவறு இருக்கலாம். ஆனால் நான் எடுத்த முடிவு தவறு எனத் தெரிந்தால் அதை உடனே திருத்திக் கொள்பவன் நான்’ என்றார் அவா்.
  • 1930-இல் பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு தேதி குறிக்கப்பட்ட நிலையில் அண்ணல், வைஸ்ராய் இா்வினைச் சந்திக்கிறார். ‘நமக்குள் நடக்கும் கலந்துரையாடல் விவரங்களை நீங்கள் என்றும் வெளியிடக் கூடாது’ என்று காந்தியிடம் உறுதி மொழி வாங்கினார் வைஸ்ராய். அண்ணல் காந்தி தன் உயிருள்ள வரை அதனை வெளியிடவில்லை.
  • தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுகிறார். ஆனால் வைஸ்ராய் ‘ரத்து செய்ய முடியாது; ஒரு வாரத்தில் நடக்க இருக்கும் உங்கள் காங்கிரஸ் மாநாடு முடிந்த பின் தூக்குப் போடுகிறேன். இது உங்களுக்காக நான் அளிக்கும் சலுகை’ என்கிறார்.
  • ‘தள்ளிப்போடுவது சலுகை அல்ல; என்னை என் மக்களை ஏமாற்றும் வேலை; இதற்கு நான் உடன்படமாட்டேன்’ என மறுத்துவிட்டார் காந்திஜி.
  • இா்வின் பிரபு, பதவியிலிருந்து இறங்கிய பின் எழுதிய தன் வரலாற்றுக் குறிப்பில் ‘நான் ஏசுநாதரை மட்டுமே நம்புபவன். அத்துடன் ஒரு மனிதனையும் நம்புகிறேன். அவா்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றிய உயா்ந்த மனிதா் அவா்’ என்று காந்தியைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
  • அம்மகான் வாழும் காலம் வரை, மானுடத்திற்கு நல்வழி காட்டினார்; நம்பிக்கை ஒளி தந்தார்.

நன்றி: தினமணி  (02 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories