TNPSC Thervupettagam

மற்ற மொழிகளையும் மதிப்பவரே சான்றோர்

November 30 , 2024 5 days 35 0

மற்ற மொழிகளையும் மதிப்பவரே சான்றோர்

  • கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.அருண், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘‘பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது, தமிழர்கள் அவர்களுக்கு அடிமையாக இருந்தனர். ஆனால், கன்னடர்கள் ஒருபோதும் அடிமைகளாக இருந்ததில்லை. இங்கு வாழும் அனைவரும் கன்னடம் கற்றுக் கொண்டு கன்னடத்தில் பேசவேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது பேச்சுக்கு எதிராக தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.குமார், ‘‘நீதிபதிகள் சாதி,மதம், மொழிக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும். கன்டோன்மென்ட் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகி ஞானமணியின் மகன் மகிமைதாஸ் போன்றோரும் நீதிபதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தியாகிகளின் பெயர் பட்டியலை குறிப்பிட்டுள்ளனர்.
  • கர்நாடகாவில் வாழும் மக்கள் கன்னடத்தில் பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பது நீதிபதியின் உரிமை. அதே நேரம் தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நீதிபதிகள் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள கருத்து, நீதிபதிகள் மட்டுமின்றி, நாட்டில் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ள அனைவருக்கும் பொருந்தும். தமிழர்களுக்கும் கன்னட மக்களுக்கும் இடையே பல்வேறு சூழ்நிலைகளால் வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு, பல கலவரங்களை பார்த்தாகிவிட்டது. அத்தகைய கசப்பான உணர்வுகளை மறந்துவிட்டு, சமீபத்தில் தமிழர் – கன்னடர் ஒற்றுமை மாநாடு நடந்து, இருதரப்பினரும் இணக்கமாக நட்புறவு பாராட்டிவரும் இன்றைய காலகட்டத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருப்பவரின் பேச்சு ஏற்க முடியாத ஒன்றாகவே அமைந்துள்ளது.
  • இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தொழில் புரியவும், பணியாற்றவும், சுதந்திரமாக வசிக்கவும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமையை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமையின்கீழ், ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குச் சென்று பணியாற்றுபவர்கள் மற்றும் தொழில்புரிபவர்கள், தலைமுறைகள் கடந்து அங்குள்ள கலாச்சாரம், பண்பாட்டை பின்பற்றி வசித்து வருகின்றனர். அதன்பிறகும் அவர்களது பூர்வீக மாநிலத்தை குறிப்பிட்டு பிரிவினையை தூண்டுவது மிகக் குறுகிய கண்ணோட்டமாகும். பிரிவினை கருத்துகள் ஒருபோதும் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உதவாது.
  • சமீபத்தில் சென்னையில் நடந்த புஷ்பா-2 திரைப்பட வெளியீட்டு விழாவில் பேசிய, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனா, ‘‘நாம் எந்த மண்ணில் இருக்கிறோமோ, அந்த மண்ணின் மொழியில் பேச வேண்டும். அது அந்த மண்ணுக்கு நாம் அளிக்கும் மரியாதை’’ என்று குறிப்பிட்டு தமிழ் மொழியில் பேசினார். அவரது கருத்து முதிர்ச்சியான உயர்ந்த சிந்தனையாகும். நாம் வாழும் பகுதியின் மொழியை கற்றுக் கொள்வதிலும் பேசுவதிலும் தவறில்லை. நம் மொழி மீது எந்த அளவுக்கு பற்று, மரியாதை வைத்திருக்கிறோமோ, அதற்கு இணையான மரியாதையை மற்ற மொழிகளுக்கும் தருவதே பண்பட்ட நிலை. அதுதான் சான்றோர்க்கு அழகு!

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories