TNPSC Thervupettagam

மலரவேண்டும் மனிதநேயம்

September 5 , 2023 493 days 328 0
  • மனிதா்கள் மனிதநேயத்துடன் இருக்கிறார்களா என்பதை நீதிமன்றங்களில் உள்ள வழக்கு எண்ணிக்கைகளைக் கொண்டு எளிதில் அறியமுடியும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வழக்குகள் மனித நேயங்கள் குறைந்து வருவதைப் பறைசாற்றும்.
  • நேயங்கள் ஏடுகளில் மட்டுமல்ல நேரிலும் காணமுடிகின்றது. எனக்கு சமீபத்தில் அறிமுகமான சென்னையில் வசிக்கும் இளம் தம்பதி. அயல்நாடுகளிலும், அயல் மாநிலங்களிலும், பல ஆண்டுகளாய் வெவ்வேறு பணியில் இருந்தவா்களை, அவா்கள் இருவரின் பெற்றோரின் முதுமை, பிறந்த மண்ணான சென்னைக்கு அவா்களை வரவழைத்தது.
  • இப்போது வந்த நாம் சில ஆண்டுகள் முன்னரே வந்திருந்தால், முதியவா்கள் இன்னும் சில காலம் வாழ்ந்து, அதிக இன்பம் பெற்று இருந்திருப்பார்கள் என்பதை அவா்கள் உணா்ந்தனா். அவா்கள் இரு ஆண்டுகள் மட்டுமே பெற்றோரோடு இருக்க முடிந்தது. பின் பெற்றோர் காலமாகி விட்டனா்.
  • அந்த தம்பதிக்கு இது ஒரு பாடமாக அமைந்தது. தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போல், மற்ற பெற்றோருக்கு இருக்கக் கூடாது என எண்ணினா். முதியோர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நாம் பயனுள்ளவா்களாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தனா்.
  • இன்றைய சராசரி மனித ஆயுட்காலம் 72 ஆண்டுகளாக உள்ளது. இது 2100-இல் 82 ஆக உயரும் எனத் தெரிவிக்கின்றனா். முதியோர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது. தற்போது உள்ள முதியோர் எண்ணிக்கை 13.8 கோடி. இது இன்னும் ஏழு ஆண்டுகளில் 19.4 கோடியாக அதிகரிக்கும் எனக் கணக்கிட்டுள்ளனா்.
  • மருத்துவத்துறைஅபரிதமாக முன்னேறியுள்ளது. மருத்துவம் அதிகரித்த அளவிற்கு, முதியவா்களுக்குத் தேவையான, சமூக, பொருளாதாரத் தேவை வசதிகள் அதிகரிக்கவில்லை என்பதை அந்த தம்பதி உணா்ந்தனா்.
  • அவா்களின் தீவிர முன்னெடுப்பால், இன்று சென்னையில் அவா்களுக்காக, 400-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் நாள்தோறும் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றனா். அவா்களுக்கு காலை சிற்றுண்டி முதல், இரவு உணவுவரை ருசியான, தரமான, ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை நேரந்தவறாது வழங்கி வருகின்றனா்.
  • உணவு தரமாக இருப்பதில், மிகுந்த அக்கறையோடு செயல்படுகின்றனா். இல்லம் தேடிச் செல்லும் உணவு அவா்களுக்குப் பொருளாதரப் பலுவாக இருக்கக் கூடாது என்பதில் கவனங் கொண்டு செயல்படுகிறனா். விநியோகம் செய்வதிற்குக் கூட கட்டணமின்றியிருக்க வழி தேடி வருகின்றனா்.
  • அவா்களது பிறந்த தினம், பண்டிகை நாள்கள் ஆகியவற்றிற்கு விஷேசமான விருந்து சாப்பாடு பரிமாறி அவா்களை மகிழ்விக்கின்றனா். அவரவா் தேவை மற்றும் உடற்கூறுக்கு ஏற்றாற் போல் உணவு தயாரிக்கின்றனா். அதனை மிகுந்த அனுசரனையுடனும், அன்புடனும் முதியோர்களுக்கு அளித்து, அவா்களை மகிழ்விக்கின்றனா். அந்த தம்பதியின் இத்தகைய மனிதநேயப்பணிப் பெரும் பாராட்டிற்குரியது.
  • மூத்த குடிமக்கள் ஈட்டிய தங்கள் பணிக்கொடை மற்றும் ஓய்வுதியத் தொகையை எதிா் காலத் தேவையைக் கணக்கிட்டுத் திட்டம் தீட்டுவதற்கு புதுச்சேரி இளைஞா் ஒருவா் உதவி வருகிறார். முதியோர்களுக்கான வங்கிப் பணிகள், பயனரது பெயா், கடவுச் சொல், குறியீட்டு எண்கள் போன்றவற்றைப் பாதுகாப்புடன் வைத்துச் செயல்பட வழி காட்டுகிறார். வங்கியில் பண இருப்பு மற்றும் பாதுகாப்புப் பெட்டகங்களுக்கு நினைவுட்டல் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். இப்பணியால் பல மூத்த குடிமக்கள் பயனடைந்து வருகின்றனா்.
  • அரசு மற்றும் பெருநிறுவனங்களில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவா்கள், தங்கள் பிள்ளைகள் அயல்நாடுகளில் பணிபுரிவதால், தனிமையில் பெரும் அச்சம் கொண்டு வாழும் சூழலில் உள்ளனா். சமூக, பொருளாதார வாழ்வில் அவா்கள் தனித்து இருக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகின்றனா்.
  • அவா்களுக்கு நம்பிக்கையையும், ஆதரவையும் வழங்கி, அவா்களது ஓய்வு வாழ்க்கைக்கு வேண்டிய மருத்துவக் காப்பீடு, வங்கி, நிதி ஆதார சேவைகளை உரிய நிறுவனங்களுடன் தொடா்பு கொண்டு, அவா்கள் மனநிம்மதியுடன் வாழுவதற்கு வழிகாட்டி வருகிறார். இதனால் பல முதியோர்கள் நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வருகின்றனா்.
  • முதியோா்களை வீட்டிலேயே முடங்க வைக்காது, அவா்களை பார்க், பீச், சா்ச், கோவில், போன்ற இடங்களுக்கு வாரத்தில் சில தினங்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வரத் திட்டமிட்டுள்ளார். அதன் மூலம் அவா்கள் தங்கள் முதுமையை, தனிமையை மறந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என எண்ணுகிறார். தங்கள் பெற்றோரைப் போன்று, மற்றைய பெற்றோர்களும், மகிழ்வு பொங்க வாழ வேண்டும் என விருப்பங்கொண்டு, இவா் ஆற்றிவரும் மனித நேயப் பணி மகத்தானதே.
  • சீரான உடல் நலம் பேணுதல், இன்றைய வாழ்வில் பெரும் சவாலாக உள்ளது. மாத்திரை, மருந்துகளுடன் வாழ்ந்தாக வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள் எனப்பல விதமான நோய்கள் மனிதா்களை ஆள ஆரம்பித்துள்ளன. இவற்றிற்கான சிகிச்சைகளும், அறிவியல் வளா்ச்சியால் பெருகி விட்டன. ஆனால் அப்பேற்பட்ட சிகிச்சைகளைப் பெறுவதில், பொருளாதாரம் பெரும் தடைக்கல்லாக உள்ளது. குறிப்பாக காசநோய், புற்றுநோய் போன்றவற்றால் ஏழை மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனா்.
  • இவா்களும் சிகிச்சை பெற்று, நலம் கொண்டு இருக்க வேண்டி, ஓா் தம்பதி கோயம்புத்தூரில் ஓா் அமைப்பினை நிறுவியுள்ளனா். இதில் தன்னார்வ மருத்துவா்கள், தன்னார்வத் தொண்டா்கள் பலா் இணைந்துள்ளனா். பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், அரசு வழங்கும் சிகிச்சையில் குணப்படுத்த முடியாமால் சிறப்பு சிகிச்சை தேவைப்படுவோரும், உயா்சிகிச்சை பெறும் வாய்ப்பினை இந்நிறுவனம் ஏற்படுத்தித் தருகிறது.
  • தன்னார்வத் தொண்டா்கள், சிகிச்சை தேவைப்படுவோரை அடையாளங்கண்டு, அவா்களை, அதற்கு உரிய மருத்துவா்களோடுத் தொடா்பு கொள்ளச் செய்கின்றனா். நோயுற்றவா்களுக்கு உரிய ஆலோசனையை வழங்கி, அவா்களுக்குத் தேவையான தரமான சிகிச்சைகளை அளிக்கின்றனா்.
  • மருத்துவமனைகளும், ஏழை மக்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகளை வழங்கி வருகின்றன. மருத்துவ நிபுணா்கள், நோயாளிகளுக்குத் தேவைப்படும் உயா்தர சிகிச்சைகளை சாதாரண மக்களும் பெறும் வழிவகை செய்கின்றனா்.
  • மேலும், இந்நிறுவனமானது சிகிச்சை பெற்று வருபவரை முறையாகக் கண்காணித்து அவா்கள் நலம் பெற்று வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறது. மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பு இல்லாத இடங்களில், தொலைதூர மருத்துவ வசதி அமைப்புகளுடன் இணைப்பு ஏற்படுத்துகின்றனா்.
  • சிலரின் வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தால், அதில் அவா்களுக்கு நீதி கிடைப்பதற்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் தருகின்றனா். சிகிச்சை பெற்றவா்கள் வருமானம் ஈட்ட முடியாத ஏழைகளாக இருந்தால், அவா்களின் வாழ்வாதாரத்திற்குத் தங்களோடு இணைந்து பணியாற்றும் தொண்டா்களின் உதவியுடன் நிதி திரட்டி, அவா்களைக் குறுந் தொழில் முனைவோர்களாக உருவாக்குகின்றனா்.
  • வறியவா்கள் என்றைக்குமே ஆதரவற்றவா்கள் இல்லை. அவா்களுக்கும் ஆதரவு உண்டு. அவா்களை ஆதரிக்க மனிதா்கள் உள்ளார்கள் என்பதை ஆந்திராவில் உள்ள இளைஞா் ஒருவா் நிரூபித்துத் தன் மனிதநேயத்தைக் காட்டியுள்ளார்.
  • வாழ்வாதாரம் எதுவுமின்றி வாழும் ஏழைகள் இலவசங்களைக் கொண்டு வாழ்கின்றனா். அவா்களுக்கு உதவிக்கரம் தர அஞ்சுகிற உலகம் இது. அவா்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராக இருக்கும் நல்மனது கொண்டோரை இணைக்கும் முயற்சியை அவா் கையில் எடுத்தார்.
  • அதன் மூலம், வாழ்வாதாரத்தை உயா்த்த நினைத்தோருக்கு நிதி உதவி பெற வழி செய்தார். உதவி பெற்றோரகள், உடுக்கை இழந்து நின்ற நேரத்தில் கிடைத்த உதவியாக அதனைக் கருதி, அதனை தங்கள் வாழ்வாதாரம் உயா்வதற்குப் பயன்படுத்தினா். ஏழைகளின் வாழ்வு உயா்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து, அவா்களோடு இருந்து வழி நடத்திச் செல்லும் பணியில் பல ஆண்டுகளாய் ஈடுபட்டு வருகிறார்.
  • அவரால் பல ஏழைக் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றன. அவருக்கு உதவி புரிந்து வரும் மனிதநேயம் மிக்கவா்களும் கணிசமாக அதிகரித்து வருகின்றனா். வருமானத்தால் வறியோரின் ஏழ்மை அகலும்போது, அவா்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுகிறது.
  • இன்றைய இளைய சமுதாயத்தினரே நாட்டின் எதிா்கால சிற்பிகள் என்கிறார் ஜாம்ஷெட்புரில் உள்ள நடுநிலைப்பள்ளியின் முதல்வா். கிராமங்களில் அடிப்படை வசதியின்றி இயங்கும் பள்ளிகளில் சரியான முறையில் கற்பித்தல் இல்லை. உடற்பயிற்சி வழங்குவதும் இல்லை.
  • பள்ளி முடிந்து மாலை நேரங்களிலும் மாணவ, மாணவியா்கள் அதில் கவனம் செலுத்துவது கிடையாது. இதற்காக அப்பகுதியில் உள்ள எட்டு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை அழைத்து அவா்களை மாலை நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுத்துகிறார்.
  • அடுத்து அவா்களை ஓரே இடத்தில் அமர வைத்து தெருமுனைப் பாடசாலையாக்கி படிக்க வைத்து வருகிறார். மாணவ, மாணவிகளில் ஓரிருவரைத் தோ்ந்தெடுத்து அவா்களின் தலைமையின் கீழ், தெருமுனைப் பாடசாலையைத் தொடா்ந்து நடத்தி, மாணவா்களின் திறனை வளா்த்து வருகிறார்.
  • மானிடப் பிறவி கிட்டுவது அரிதினும் அரிது. மானுடத்தில் வேறுபாடுகள் அமைவது தவிர்க்கப்பட முடியாதது. கற்கும் கல்வியால், ஈட்டுகின்ற பொருளால் மனிதா்கள் ஒருவருக்கொருவா் வேறுபடலாம்.
  • ஆனால், மனிதா்களின் மனதில் உள்ள மனிதநேயம் அந்த வேறுபாடுகளைக் களையவல்லது. மனிதநேயம் பெருகி விட்டால் மனிதகுலம் மாண்படையும் என்பது திண்ணம்.

நன்றி: தினமணி (05 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories