TNPSC Thervupettagam

மலேசிய பாமாயிலுக்கான இந்திய மறுப்பும் தமிழர்கள் துயரமும்!

February 4 , 2020 1808 days 894 0
  • 2019-ம் ஆண்டின் கடைசி நாளன்று, தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து கச்சா பாமாயில் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டு வந்த வரி 40%-லிருந்து 37.5% ஆகக் குறைக்கப்பட்டது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் பட்ஜெட்டின்படி, இறக்குமதி வரி 37.5%-லிருந்து 44% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பாமாயில் இறக்குமதியாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். பட்ஜெட்டில் என்ன சொல்லப்பட்டிருந்தாலும், தென்கிழக்காசிய நாடுகளுக்கான தனி வரி விகிதம் தொடரும் என்று விளக்கங்கள் அளிக்கப்பட்டுவருகின்றன.
  • பாமாயில் இறக்குமதியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு, உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்திக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கப்போகிறது; சீனா உள்ளிட்ட பக்கத்து நாடுகளில் பரவிவரும் வைரஸ் நோய்த் தொற்றுகளால் உலகம் முழுவதுமே பாமாயில் இறக்குமதி சரிவைச் சந்தித்துள்ளது என்று ஏகப்பட்ட காரணங்கள் உலா வருகின்றன. ஆனால், பாமாயில் இறக்குமதி தொடர்பான இந்திய அரசின் கெடுபிடி பார்வை காஷ்மீர் விவாகரத்தை ஒட்டியே தொடங்கிவிட்டது.
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் 70% சமையல் எண்ணெய், இறக்குமதியின் வாயிலாகவே பெறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பாமாயிலைப் பொறுத்தவரை மூன்றில் இரண்டு மடங்கு அதாவது, ஆண்டொன்றுக்குச் சுமார் 1.5 கோடி டன் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் பெருமளவு தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.

அறிவிக்கப்படாத தடை

  • காஷ்மீர் மாநில மக்கள் உரிமைகள் தொடர்பாக மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளைப் பற்றி, மலேசிய நாட்டின் பிரதமர் அதிபர் மஹாதீர் பின் முகம்மது கடுமையாக எதிர்த்திருந்தார். இதனால், காலம் காலமாகத் தொடர்ந்துவரும் இந்திய - மலேசிய உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய வணிகர்கள் அதைப் புறக்கணித்திருக்கிறார்கள். வணிகர்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும்கூட, புறக்கணிக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதாவது, ஏறக்குறைய அறிவிக்கப்படாத தடை.
  • பாமாயில் இறக்குமதியை வணிகர்கள் புறக்கணித்திருப்பது, மலேசிய பொருளாதாரத்தில் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், அந்த நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஏற்றுமதி மட்டும் 4.5%. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பெருமளவுக்கு இந்தியாவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் முன்னேறிய சமூகங்களில் பாமாயில் எண்ணெய் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அது உணவுக்கு ஏற்றதல்ல என்ற விவாதமும் அங்கு தொடர்ந்து நடந்துவருகிறது. ஆனால், தெற்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பாமாயில் பயன்பாடு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இந்தியாவைப் பொறுத்த அளவில் அது ‘சாமானிய மக்களின் எண்ணெய்’ என்றே இன்று ஆகிவிட்டது.

நமக்கு என்ன பாதிப்பு?

  • மலேசிய பாமாயிலை இந்திய வணிகர்கள் புறக்கணித்தது, இந்தியாவிலும் பாதிப்பையே ஏற்படுத்தும்; குறிப்பாக எளிய மக்களுக்கு இது கூடுதல் சுமை என்பது நாம் கவனம் கொள்ள வேண்டியது. முன்பு ரூ.60ஆக இருந்த ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய், ரூ.96-க்குச் சென்றிருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.34 அளவுக்கு, ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. அதாவது மூன்றில் ஒரு பங்கு விலை உயர்ந்திருக்கிறது. மாற்றாக, சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாலும், அதுவும் 25% அளவுக்கு விலை உயர்ந்திருக்கிறது. பாமாயில் தட்டுப்பாட்டின் தொடர் விளைவுதான் இது! ஏற்கெனவே, பொருளாதார மந்தநிலையின் பாதிப்பிலிருக்கும் மக்கள், பாமாயில் விலை உயர்வால் மேலும் தடுமாறிப் போவார்கள். அன்றாடம் உணவில் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை தாறுமாறாக எகிறிக் கிடக்கிறது. அந்தப் பாதிப்பிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், தற்போது பாமாயில் எண்ணெய் விலை உயர்வும் அவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
  • இந்தியாவின் உள் விவகாரங்களில் மலேசியா தலையிடுவதை இந்திய அரசு விரும்பாததே அறிவிக்கப்படாத பாமாயில் தடைக்கான காரணம். இந்தோனேஷியா போன்ற மற்ற நாடுகளிலிருந்து அதிக அளவில், சுத்திகரிக்கப்படாத கச்சா பாமாயிலை இறக்குமதி செய்து, அதைச் சுத்திகரித்து விநியோகிக்கலாம் என்று அரசுத் தரப்பு கூறுகிறது. மாற்று ஏற்பாடாக அப்படியொரு ஏற்பாட்டை இந்திய அரசால் செய்ய முடியும்தான். ஆனால், மலேசியாவின் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெயின் விலையை விட, மற்ற நாடுகளில் இருந்து கச்சா பாமாயிலை இறக்குமதி செய்து சுத்திகரிக்கப்படும் பாமாயிலின் அடக்க விலை அதிகமாகி விடக்கூடும். எப்படியிருந்தாலும், பாதிப்பு ஏழைகளுக்குத்தான்.

பாதிக்கப்படும் தமிழர்கள்

  • காஷ்மீர் பிரச்சினை பற்றிய மலேசிய பிரதமரின் கருத்தாலும் அதற்கான இந்தியாவின் எதிர்வினையாலும் பாமாயில் இறக்குமதிக்கு மட்டும் சிக்கல் வரவில்லை, இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக மலேசியாவுக்குச் சென்றவர்களின் நிலையும் மோசமாகிவருகிறது. குறிப்பாக, ராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் மலேசிய நாட்டில் பணியாற்றிவருகின்றனர். வேற்று நாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், தமிழர்கள் பாதுகாப்பாக உணரும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்திலேயே மலேசியா சென்ற தமிழக மக்கள், அங்கு தோட்டத் தொழிலாளர்களாக பணியில் இருக்கின்றனர். பல்வேறு இன மக்களைக் கொண்ட மலேசியாவின் மொத்த மக்கள்தொகை மூன்று கோடி என்றால், அதில் தோட்டத் தொழில்செய்யும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 20 லட்சத்தைத் தாண்டுகிறது. அவர்களையெல்லாம் வேற்று மனிதர்களாக அங்கிருக்கும் அரசு சார்புடையோரும், ஆட்சி நிர்வாகத்தில் இருப்போரும் எண்ணக்கூடிய நிலை உருவாகுமோ என்ற அச்சத்தை சமீபத்திய நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. வெகு காலமாகத் தொடர்ந்துவரும் சுதந்திரமான நிலையைத் தொடர முடியுமா என்ற கேள்வியை மலேசியாவில் பணிபுரியும் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

பல்நோக்குப் பார்வை அவசியம்

  • தமிழகத்திலிருந்து வேலைக்குச் செல்பவர்கள் மலேசியாவில் பல்வேறு துறைகளில் பணியில் இருந்தாலும், பெரும்பாலானோர் பாமாயில் எண்ணெய் சார்ந்த தொழில் நிறுவனங்களில்தான் பணியில் இருக்கின்றனர். பாமாயில் இறக்குமதிக்கு அறிவிக்கப்படாத தடையை விதித்திருப்பதன் மூலமாகப் பாதிக்கப்படுவது மலேசியா மட்டுமல்ல... அங்கு பணிபுரியும் இந்தியர்களும்தான். விவசாயம் பொய்த்து வெளிநாடுகளில் வேலைதேடிப் பிழைக்கும் ராமநாதபுர, தஞ்சை மாவட்ட மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
  • அரசியல்ரீதியில் இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை, உலக நாடுகளில் ஒன்றாக மலேசியா கண்டித்து கருத்துக் கூறியது என்பதற்காக, இந்திய அரசு, மலேசியாவைப் பகைத்துக்கொள்வதன் மூலம், இரு நாட்டு அரசுகளுக்கும் இழப்பு ஏற்படுவது தடுக்க முடியாதது. இதில் மலேசியாவுக்குக் கூடுதல் பாதிப்பு இருக்கும் என்பதாலேயே, இந்த நிலையை எப்படி எதிர்கொள்வது என்ற யோசனையில் மலேசிய அரசு இருக்கிறது. என்றாலும், பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க வழிகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம் என்று மலேசிய அதிபர் மஹாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார்.
  • வரலாற்றுரீதியாகவே இந்தியாவும் மலேசியாவும் நெருக்கமானவை. நேற்று வரையில், தொழில், வர்த்தகம், கல்வி, நிதி, அரசியல், சட்டம், காவல் என எல்லா நிலைகளிலும், இந்திய - மலேசிய நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இருந்துவந்தது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு ஈடாக ரயில்வே துறை, கட்டுமானத் துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு இந்தியா தொழில்நுட்ப உதவி செய்துவந்தது. அந்த நல்லுறவைத் தொடர்வதற்கான வாய்ப்பை இரு நாட்டு அரசுகளும் தேர்ந்தெடுக்க வேண்டும். வெளியுறவுத் துறை தொடர்பான அணுகுமுறையில் பல்நோக்குப் பார்வை வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories