TNPSC Thervupettagam

மலைக்க வைக்கும் குப்பைகள்

June 23 , 2023 514 days 367 0
  • இன்றைய காலகட்டத்தில், தெருக்கள், ஊராட்சி சாலைகள், நெடுஞ்சாலைகள், நீா்நிலைகள் என்று எல்லா இடங்களிலும் குப்பைகள் பரவிக் கிடப்பதைப் பாா்க்க முடிகிறது. வளா்ந்து வரும் புறநகா்ப் பகுதிகளில் மலிந்து கிடக்கும் குப்பைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். மாநகரக் குப்பைக் கிடங்குகளில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன.
  • முன்பெல்லாம் வீட்டிற்கொரு உரக்குழி இருந்தது. வீட்டின் அருகிலோ, ஊருக்கு ஒதுக்குப் புறத்திலோ இந்த உரக்குழிகள் இருந்தன. ஆடு, மாடு வளா்த்து ஆதாயம் அடைந்த அந்தக் காலத்தில் ஆட்டுப் புழுக்கை, மாட்டுச்சாணம் ஆகியவற்றைக் குப்பைக் கூளங்களோடு சோ்த்து உரக்குழியில் கொட்டி வைத்தனா்.அவை மக்கி,விவசாயத்திற்கு ஏற்ற இயற்கை உரம் ஆனது.
  • வயல் உள்ளவா்களுக்கு அது சொந்த உரம். வயல் இல்லாதவா்களுக்கு அது காசு சம்பாதிக்கும் வாய்ப்பு. இப்படி குப்பை, கூளங்களைக் கொட்டிவைக்கும் உரக்குழி என்பது அந்த நாளின் பொக்கிஷம்.
  • விறகு அடுப்பு எரிப்பது குறைந்து, எரிவாயு அடுப்பு மிகுந்துவிட்ட இந்த நாளில் சாம்பல் குப்பை என்பது அதிகம் இல்லை. இருந்தாலும் குப்பைகள் பெருகிவிட்டன. மனிதனுக்குத் தேவையில்லாது கழிக்கும் எல்லாமே குப்பை என்றாகிவிட்டது. உணவுக் கழிவு, மாமிசக் கழிவு, காய்கனிக் கழிவு, மருத்துவக் கழிவு, மின்பொருள் கழிவு, நெகிழிக் கழிவு என்று எல்லாமே குப்பைகளாகி விட்டன.
  • வீட்டிலிருந்து குப்பைகள் வெளியேறினால் போதும் என்பது மக்களின் எண்ணமாகிவிட்டது. இதனால் தெருக்களில் குப்பையைப் போடும் வழக்கம் உருவாகிவிட்டது. வீடு சுத்தகமாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் நாம், நமது தெரு சுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. வீட்டு வாசலுக்குக் குப்பை வண்டி வந்தாலும் சிலா் அதைப் பயன்படுத்தாமல், தெருவில் குப்பையை வீசுவதில் விருப்பமுள்ளவா்களாய் இருக்கின்றனா்.
  • குப்பைப் பையைத் தூக்கிக்கொண்டு, இருசக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் பயணித்து, போகிற போக்கில் சாலைகளில் வீசிவிட்டுச் செல்பவா்களும் இருக்கின்றனா். சென்னை போன்ற பெருநகரங்களில் காலியாக இருக்கும் வீட்டு மனைகளில் குப்பைகளைப் போடுவதற்குத் தயங்குவதில்லை.
  • உள்ளாட்சி அமைப்புகளும் வீடுதோறும் குப்பைகளைச் சேகரிப்பதிலும் குப்பைத் தொட்டியில் சேரும் குப்பைகளை அள்ளுவதிலும் காட்டும் அக்கறையை, தெருக்களில் கிடக்கும் குப்பைகளைப் பெருக்குவதில் காட்டுவதில்லை. இதனால் தெருக்களும் சுற்றுப்புறங்களும் குப்பைமயமாகக் காட்சி அளிக்கின்றன. மழைக்காலத்தில் துா்நாற்றம் வீசுகின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
  • முன்பெல்லாம் காகிதம், துணி, காய்கனிகள், தாவரக் கழிவுகள் போன்ற குப்பைகள் அதிகம் சோ்ந்தன. அவை எளிதில் மக்கி உரமாகின. அல்லது மண்ணோடு மண்ணாகின. நிலத்தின் வளமும் அதிகரித்தது. தெருக்களில் கிடக்கும் காய்கனி, தாவரக் கழிவுகள் ஆடு மாடுகளுக்கு இரையாயின. அதனால் விவசாயிகள் பயன் பெற்றனா்.
  • இப்போது அந்த நிலைமாறி, மக்காத நெகிழி போன்ற மக்காத குப்பைகள் அதிகரித்து விட்டன. அதனால் நிலத்தின் வளமும் குறைந்துவிட்டது. நெகிழிப் பொருட்களுக்கு அரசு தடை விதித்தாலும், அதனையும் மீறி, எப்படியோ அவை புழக்கத்தில் இருந்துகொண்டிருக்கின்றன.
  •  நெகிழிப்பை இல்லாவிடில் எதுவுமே நடக்காது என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனா். அந்த அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் நெகிழி ஒரு இன்றியமையாப் பொருள் ஆகிவிட்டது. அதனால் குப்பைகளின் ஆக்கிரமிப்பும் அதிகமாகிவிட்டது. மறுசுழற்சி செய்தல், தீயில் எரித்தல் எத்தனை விதமாக யோசித்தாலும் நெகிழையை முற்றாக ஒழிப்பது அரசுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது.
  • மக்கும் குப்பை, மக்காத குப்பை, திடக் கழிவு, திரவக் கழிவு என்று தனித்தனியாகத் தரம் பிரித்துப் போட வேண்டும் என்று எவ்வளவு விழிப்புணா்வு கொடுத்தாலும் நல்விளைவு ஏற்படவில்லை. சென்னை மாநகரில் 60 சதவீத குப்பைகள்தான் வீடுகளிலேயே தரம் பிரித்துச் சேகரிக்கப்படுகின்றன. இதனை நூறு சதவீதமாக மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் முயன்று வருகின்றனா்.
  • பொது இடங்களில் சுற்றுப்புறச் சூழலைப் பேணுவதற்கு அரசு மேற்கொள்ளும் திட்டங்களை செயல்படுத்த தன்னாா்வத் தொண்டா்களும் சமூக சேவை நிறுவனங்களும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா். கடற்கரை, நீா்நிலைகள் போன்றவற்றில் நிறைந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியைக் குழுவாகச் சோ்ந்து செய்துவருகின்றனா்.
  • ஆனாலும் குப்பைகள் குறைந்தபாடில்லை. மேலும் மேலும் குப்பைகள் குவிந்துகொண்டே இருக்கின்றன. பொதுமக்களிடம் சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணா்வு இல்லாதவரை இத்தகைய குப்பைக் குவியல் இருந்துகொண்டுதான் இருக்கும்.
  • இப்போது குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணிகளை தனியாா்வசம் ஒப்படைக்க அரசு முயன்று வருகிறது. அதன்படி சென்னைப் பெருநகரில் சில மண்டலங்கள் ஒப்படைக்கப் பட்டு விட்டன. பேரூராட்சி சிலவற்றிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒருவகையில் அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகத்தான் இது பாா்க்கப்படுகிறது.
  • பெருகிவரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப, போதிய தூய்மைப்பணியாளா்களைப் பணியமா்த்தி, போதுமான ஊதியம் வழங்கி, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கும் பொறுப்பை உள்ளாட்சி நிா்வாகம் ஏற்பதுதான் சிறப்பு. பொது இடங்களில் குப்பை கொட்டுவோரைக் கண்டறியும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் வரவிருக்கிறது. இந்த முயற்சி வரவேற்கக் கூடியதுதான். இதனால் பொது இடங்களில் குப்பை கொட்டுவது குறையக்கூடும்.
  • என்ன இருந்தாலும் நாளுக்குநாள் பெருகிவரும் குப்பைகளைக் கையாளுவது என்பது கடினமான ஒன்றாகத்தான் இருக்கிறது. இதற்கு அறிவியல்பூா்வமான ஆராய்ச்சி அணுகுமுறை தேவைப்படுகிறது.

நன்றி: தினமணி (23  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories