- இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பினை இந்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது. மல்யுத்தக் கூட்டமைப்பைச் சுற்றி கடந்த ஓராண்டாக நிகழ்ந்துவரும் சர்ச்சைகளின் பின்னணியில், இந்த இடைநீக்கம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஜனவரியில், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் அப்போதைய தலைவரும் பாஜக-வைச் சேர்ந்த நடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் கூட்டமைப்பைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் சிலர் மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்றனர்.
- இதையடுத்து, அவர் பதவி விலக நேர்ந்தது. ஆனால், நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெல்லி காவல் துறை வழக்குப் பதிவுசெய்தது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மல்யுத்தக் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகளாகக் கடந்த வாரம் நியமிக்கப்பட்டனர். மொத்தமுள்ள 15 நிர்வாகப் பதவிகளில், தலைவர் சஞ்சய் சிங் உள்பட 13 பேர் பிரிஜ் பூஷண் சிங்கின் ஆதரவாளர்கள். இதை எதிர்த்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் போர்க்கொடி எழுப்பினர். சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டிலிருந்தே விலகுவதாகக் கண்ணீர் மல்க அறிவித்தார்.
- பஜ்ரங் பூனியா, மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் ஆகியோர் பத்ம விருதைத் திருப்பியளிப்பதாக அறிவித்தனர்.
- இந்தச் சூழலில், மல்யுத்தக் கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை இடைநீக்கம் செய்திருப்பதற்கு விளையாட்டு அமைச்சகம் முன்வைத்திருக்கும் காரணங்கள், மல்யுத்த வீரர்கள் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தத்தக்கவை. தலைவரானவுடன், நிறுத்தப்பட்டுவிட்ட போட்டிகளை மீண்டும் தொடங்குவதாக சஞ்சய் சிங் அறிவித்தார். ஆக, கூட்டமைப்பின் அடிப்படை விதிகளின்படி பொதுச் செயலாளரைக் கலந்து ஆலோசித்த பிறகே புதிய போட்டிகளை அறிவிக்க வேண்டும் என்னும் விதியை சஞ்சய் சிங் அப்பட்டமாக மீறியுள்ளார்.
- இப்படிப் பல்வேறு சர்ச்சைகள் தேசிய அளவில் பேசுபொருளான நிலையில்தான் இந்த நடவடிக்கையில் இந்திய விளையாட்டு அமைச்சகம் இறங்கியிருக்கிறது. மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகள் இதற்கு முன்பு பதவியில் இருந்த நிர்வாகிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் செயல்படுவதாக விளையாட்டு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் நிர்வாகிகளுக்குச் சொந்தமான வளாகங்கள் - குறிப்பாக, பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட இடங்களிலிருந்து கூட்டமைப்பின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்போதைக்கு ஒரு தற்காலிக அமைப்பை உருவாக்கி, மல்யுத்தக் கூட்டமைப்பை நடத்துமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
- மறு தேர்தல் நடத்தப்படவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பில் தவறு செய்தவர்களையும் அவர்களுக்குத் துணைபோனவர்களையும் களையெடுப்பதற்கும் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து மல்யுத்தக் கூட்டமைப்பை அனைத்து வீரர்களுக்கும் பாதுகாப்பானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் மாற்றுவதற்குமான வாய்ப்பு அமைந்திருக்கிறது. அரசு அதற்கான முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுவே, மல்யுத்தத்துக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய விளையாட்டுத் துறைக்கும் நீடித்த நன்மை பயக்கும். நீதியும் நிலைக்கும்!
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 12 – 2023)