- இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக, டெல்லியின் ஜந்தர் மந்தரில் இரண்டு வாரங்களுக்கு மேலாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 18 வயது நிறைவடையாத வீராங்கனை உள்பட ஏழு மல்யுத்த வீராங்கனைகள் அவர்மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
- இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வீராங்கனைகள் சில மாதங்களுக்கு முன்னர் போராடிய நிலையில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. போஷ் சட்டம் (POSH - Prevention of Sexual Harassment at the Workplace Act) வலியுறுத்தும் ‘உள்ளுறைப் புகார்க் குழு’ (ICC) என்கிற அமைப்பே இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பில் இல்லை என்பது அந்த விசாரணை குழுவின் மூலம் தெரியவந்தது. இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
‘போஷ்’ சட்டம் என்றால் என்ன?
- பணியிடத்தில் ஏற்படும் பாலியல் சித்திரவதையிலிருந்து பெண்களைத் தடுத்து, காத்து, தீர்வு பெற வழிவகுக்கும் ‘போஷ்’ சட்டம், 2013இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்கீழ் பாலியல் துன்புறுத்தல்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, புகாருக்கான வழிமுறைகள், விசாரணைக்கான நடைமுறைகள், அத்துமீறலில் ஈடுபடுவோரின்மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இச்சட்டத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
‘போஷ்’ எப்படி வந்தது?
- 1992இல் ராஜஸ்தானைச் சேர்ந்த சமூக சேவகரான பன்வாரி தேவி, ஒரு வயதுகூட நிரம்பாத பெண் குழந்தைக்கு நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த தீவிரமாக முயன்றார். அதன் காரணமாக, ஒரு கும்பலால் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டார். பன்வாரி தேவிக்கு நீதி கேட்டு, விசாகா உள்ளிட்ட மகளிர் உரிமைக் குழுக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அந்த வழக்கில், 1997இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ‘விசாகா’ வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டன. 2013இல் நிறைவேற்றப்பட்ட ‘போஷ்’ சட்டம், விசாகா வழிகாட்டுதல்களை விரிவுபடுத்தியது.
‘போஷ்’ என்ன சொல்கிறது?
- 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒவ்வோர் அலுவலகத்திலும் அல்லது கிளையிலும் அதன் உரிமையாளர் ஓர் ‘உள்ளுறைப் புகார்க் குழு’வைக் கட்டாயம் அமைக்க வேண்டும். இச்சட்டத்தின்கீழ், பாதிக்கப்பட்ட பெண் எந்த வயதினராகவும் இருக்கலாம்; பணியிடத்தில் பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரால் புகார் அளிக்க முடியும்.
‘போஷ்’ சட்டம் வரையறுக்கும் பாலியல் குற்றங்கள்:
- உடல்ரீதியான தொடுதல், அத்துமீறல், பாலியல் தொடர்பான கோரிக்கை, பாலியல் சார்ந்த பேச்சு, ஆபாசக்காணொளிகளைக் காட்டுதல், விரும்பத்தகாத உடல்மொழி,வாய்மொழி, செயல்வழி பாலியல் நடத்தை போன்றவை இச்சட்டத்தின்கீழ் பாலியல் குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
புகாருக்கான நடைமுறை:
- பாதிக்கப்பட்டவர்கள்தான் ‘உள்ளுறைப் புகார்க் குழு’விடம் புகார் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அவரால் முடியாதபட்சத்தில், அந்தக் குழுவின் எந்த உறுப்பினரும், பாதிக்கப்பட்டவருக்கு எழுத்துபூர்வமாகப் புகார் அளிப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
- உடல்ரீதியிலான அல்லது மனரீதியிலான இயலாமை அல்லது இறப்பு அல்லது வேறு காரணங்களால், பாதிக்கப்பட்ட பெண்ணால் புகார் அளிக்க முடியாவிட்டால், அவருடைய சட்டபூர்வ வாரிசு புகார் அளிக்கலாம். சம்பவம் நடந்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புகார் அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட காலத்துக்குள் பாதிக்கப்பட்டவர் புகார் அளிப்பதைத் தடுக்கும் சூழ்நிலைகள் இருந்தன என்பதை நிரூபிக்க முடிந்தால், இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க முடியும்.
- ‘உள்ளுறைப் புகார்க் குழு’வானது, பாதிக்கப்பட்டவரின் புகாரைக் காவல் துறைக்கு அனுப்ப வேண்டும் அல்லது 90 நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணை முடிந்ததும், இந்தக் குழு அதன் அறிக்கையை 10 நாள்களுக்குள் அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் வழங்க வேண்டும். அந்த அறிக்கை இரு தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும். பெண்ணின் அடையாளம், பிரதிவாதி, சாட்சி, விசாரணை, பரிந்துரை, எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய எந்தத் தகவலும் அதில் வெளியிடப்படக் கூடாது.
அறிக்கை தாக்கலுக்குப் பிறகு என்ன நடக்கும்?
- பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நிறுவனத்தின் சேவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க ‘உள்ளுறைப் புகார்க் குழு’ பரிந்துரைக்கும். பெண்ணுக்கு ஏற்பட்ட வேதனை, மன உளைச்சல், தொழில் வாய்ப்பு இழப்பு, அவருடைய மருத்துவச் செலவு, பிரதிவாதியின் வருமானம், நிதி நிலை ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் இழப்பீடு தீர்மானிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண் அல்லது பிரதிவாதி ‘உள்ளுறைப் புகார்க் குழு’வின் நடவடிக்கையில் திருப்தி அடையவில்லை என்றால், அவர்கள் 90 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
நன்றி: தி இந்து (10 – 05 – 2023)