- தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்குவதற்கு முன்பே மழைக் கால நோய்கள் பரவத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 4,148 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கொசுக்கள் மூலம் பரவும் நோய்த் தடுப்புக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதுவரை, நான்கு வயதுச் சிறுவன் உள்பட மூவர் டெங்கு பாதிப்பில் இறந்துள்ளனர்.
- இந்நிலையில், நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகள்தோறும் மாநிலம் முழுவதும் குறைந்தது 1,000 இடங்களில் நோய்த்தடுப்பு முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கொசுக்கள் மூலம் பரவும் டெங்குக் காய்ச்சல், சிக்குன் குன்யா, மலேரியா போன்றவற்றோடு தண்ணீர் மூலம் பரவும் காலரா, டைபாய்டு போன்றவற்றைக் கண்டறிய இந்த முகாம்கள் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- நோய்களைப் பொறுத்தவரை வரும் முன் காப்பதே சிறந்தது. கொசுக்களின் உற்பத்தியைக் குறைப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் குடியிருப்புப் பகுதிகளில் மருந்து தெளிப்பது, காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறியும் வகையில் வீடு வீடாகப் பரிசோதிப்பது போன்ற நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவது பாராட்டத்தக்கது. ஆனால், அவை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளனவா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
- குறிப்பாக, மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதிகளிலும் சுகாதாரக் கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள கிராமப்புறப் பகுதிகளிலும் அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டும். டெங்குவைத் தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கென சிறப்புச் சிகிச்சையும் நடைமுறையில் இல்லை என்பதால், கொசு ஒழிப்பில் தீவிரம் காட்டத் தவறிவிடக் கூடாது.
- மழைக் கால நோய்களில் பெரும்பாலானவை நீரின் மூலம் பரவுபவை என்பதால், குடிநீர்த் தேக்கத் தொட்டிகளின் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்தப்பட வேண்டும். மழைக் காலத்தில் சாக்கடைகள் அடைத்துக்கொண்டு குடிநீரோடு கழிவுநீர் கலந்துவிடும் ஆபத்து அதிகம். அதனால், குடிநீர்த் தேக்கத் தொட்டிகளைச் சீரான இடைவெளியில் சுத்தம் செய்வதோடு, ஒவ்வொரு வீட்டுக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். குடிநீர்க் குழாய்கள்,கழிவுநீர்க் குழாய்களின் பராமரிப்பும் மிக அவசியம். அவற்றில் சிக்கல் ஏற்படுகிறபோது உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
- பொதுக் கழிப்பிடங்களின் சுகாதாரக் குறைபாடே பெரும்பாலான நோய்களின் பரவலுக்குக் காரணம். எனவே, கழிப்பிடங்களைச் சுழற்சி முறையில் சுத்தப்படுத்துவதற்கான பணிகளில் அரசு அக்கறை காட்ட வேண்டும். கொசுக்களின் உற்பத்திக்குக் குப்பைத் தேக்கமும் காரணம். மழைக் காலத்தில் திடக்கழிவைச் சரியாகக் கையாளாதபோது கொசுப் பெருக்கம் அதிகரித்து, நோய்ப் பரவலுக்கு வித்திடுகிறது. வீடுகள்தோறும் குப்பையை அகற்றுவதில் தொடங்கி, குப்பையை மறுசுழற்சி செய்வதுவரை எந்த இடத்திலும் தேக்கம் இல்லாத வகையில் இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.
- சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியே மழைக்கால நோய்களைக் கட்டுக்குள் வைக்கும். இந்த மூன்று பிரிவினரையும் இணைத்துச் சரியான முறையில் செயல்படுவதும் நோய்ப் பரவல் அதிகரிக்கிறபோது, அதை எதிர்கொள்கிற அளவுக்கு மருத்துவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருப்பதுமே அரசின் தற்போதைய தலையாய பணி.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 11 – 2023)