மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம்: முழு உண்மை வெளிவர வேண்டும்
December 12 , 2023 429 days 288 0
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ராவின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருப்பது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியின் எம்.பி.யாக இருந்த மஹுவா, தொடர்ச்சியாக பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துவருபவர். அதானி குழுமம் தொடர்பாக மக்களவையில் கேள்வியெழுப்புவதற்காக துபாயில் வசிக்கும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் அவர் பணம்-பரிசுப் பொருள்களை லஞ்சமாகப் பெற்றார் என்கிற குற்றச்சாட்டை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே எழுப்பினார்.
மஹுவாவின் முன்னாள் இணையர் என்று கூறப்படும் வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹத்ராய் என்பவரிடம் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக துபே கூறியிருந்தார். லஞ்சக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மஹுவா, ஹிராநந்தானியிடம் தனது நாடாளுமன்ற இணையக் கணக்குத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதை மறுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், பாஜக உறுப்பினர் வினோத் குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, மஹுவாவிடம் நவம்பர் 9 அன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின்போது அநாகரிகமான கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறி மஹுவாவும் நெறிமுறைக் குழுவில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
நெறிமுறைக் குழு வெளியிட்ட அறிக்கை, மஹுவாவைப் பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், மஹுவாவைப் பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் டிசம்பர் 8 அன்று மக்களவையில் நிறைவேறியது. அறிக்கை குறித்துப் பேச நேரம் ஒதுக்க வேண்டும் என்கிற மஹுவாவின் கோரிக்கையும் அறிக்கைமீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்கிற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டன. இதற்கு முன்னோடியாக, 2005இல் ஓர் ஊடகத்தில் வெளியானசெய்தியின் அடிப்படையில், கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய 11 எம்.பிக்கள் விவாதம் நடத்தப்படாமல் பதவிநீக்கம் செய்யப்பட்டதை ஆளும்கட்சியினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆனால், அந்தப் புகாருக்குக் காணொளி ஆதாரம் இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இணையத் தகவல்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது நடைமுறையில் உள்ள வழக்கம்தான் என்பதை நெறிமுறைகள் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், வெளிநாட்டில் வசிக்கும் ஹிராநந்தானியிடம் மஹுவா அவற்றைப் பகிர்ந்தது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குழு கூறியிருக்கிறது. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கினார் என்பதற்கான நேரடி ஆதாரம் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை. பதவிநீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு குற்றம்சாட்டப்பட்டவருக்குத் தனது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்கு அவகாசம் தரப்பட்டிருக்க வேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறது.
லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஹிராநந்தானியிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்ற கேள்வியும் சரியானதே. அதேநேரம் வெளிநாட்டில் உள்ள தொழிலதிபருக்குத் தனது இணையத் தகவல்களை ஏன் பகிர்ந்தார் என்பதற்கு மஹுவா முறையான விளக்கம் எதையும் அளிக்கவில்லை. மஹுவா மீது எடுக்கப்பட்டது பழிவாங்கல் நடவடிக்கை அல்ல, அவர் உண்மையிலேயே பதவிநீக்கத்துக்குரிய குற்றத்தைச் செய்திருக்கிறார் என்பதை ஆதார பூர்வமாக உணர்த்த வேண்டியது ஆளும்கட்சியின் கடமை. பதவிநீக்கத்தை எதிர்த்து மஹுவா உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை வைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கக் கூடாது. தேர்தல் மூலம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் உறுப்பினரின் செயல்பாடுகள் குறித்த முழு உண்மையும் மக்களுக்குத் தெரிய வேண்டியது அவசியம்.