- இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்துவந்த தொழிலாளர்கள், குத்தகைக் காலம் முடிவடையவிருப்பதால் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
- 1929இல் சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து சுமார் 8,373 ஏக்கர் நிலத்தை வாடியா குழுமத்துக்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) நிறுவனம் 99 வருடக் குத்தகைக்கு எடுத்தது. விடுதலைக்குப் பிறகு தமிழ்நாடு இனாம் எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் 1948இன்படி 1952இல் சிங்கம்பட்டிக்குச் சொந்தமான மாஞ்சோலைத் தோட்டம், தமிழ்நாடு அரசின் வசமானது. ஏற்கெனவே குத்தகை ஒப்பந்தம் நிலுவையில் இருக்கும் நிலையில் 1958இல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி அந்நிறுவனம் 99 வருடத்துக்கான குத்தகையை அனுபவிக்கலாம் எனத் தீர்மானமானது.
- 1962ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் முண்டந்துறை புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டு, 1976இல் அது நடைமுறைக்கு வந்தது. அதன்படி இந்தத் தோட்டம் அடங்கிய பகுதியும் இந்த வனப் பாதுகாப்புக்குள் வந்தது. இதை எதிர்த்து பி.பி.டி.சி.எல் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. நீண்டகாலமாக நடைபெற்ற இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு அது பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரும் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், குத்தகைக் காலம் முடியும் வரை - புதிய தோட்டங்களை உருவாக்காமல் - இந்தத் தோட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தீர்ப்பில் கூறப்பட்டது. இதன்படி இந்தத் தோட்டத்தை பி.பி.டி.சி.எல் நிர்வகித்துவந்த நிலையில் குத்தகைக் காலம் 2028 பிப்ரவரி 11ஆம் தேதியுடன் முடிவடையவிருப்பதால், அதைத் தமிழ்நாட்டு அரசிடம் ஒப்படைக்கும் பொருட்டே இந்த வெளியேற்றம் நிகழ்த்தப்படுகிறது.
- மாஞ்சோலை எனப் பொதுவாக அழைக்கப்பட்டு வந்தாலும் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதி இது. தேயிலைத் தோட்டத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த ஊர், ஐந்தாறு தலைமுறைகளைக் கண்ட பலருக்கும் உணர்வுபூர்வமாகப் பிணைக்கப்பட்ட பகுதியாகும். இத்தனை ஆண்டுகளில் அஞ்சல் அலுவகம், அரசுப் பள்ளிகள், குழந்தைகள் காப்பகம், கூட்டுறவு நியாயவிலைக் கடை என இந்தப் பகுதி, மனிதர்கள் வாழும் ஒன்றாக உருவாகியிருக்கிறது. இதையெல்லாம் ஓர் ஒப்பந்தம் திடீரென முடிவுக்குக் கொண்டுவருவது பொருளாதார ரீதியிலும் உளவியல் ரீதியிலும் அந்த மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடியது.
- கட்டாய விருப்ப ஓய்வில் ஊழியர்களை நிர்வாகம் வெளியேற்ற நிர்ப்பந்தித்து வருகிறது. அவர்களில் பலரும் இந்தத் தோட்ட வேலையே கதி எனத் தலைமுறைகளைக் கழித்தவர்கள். அவர்களுக்குச் சொந்த ஊராகிப் போனதும் இந்தத் தேயிலைத் தோட்டக் குடியிருப்புதான். இந்த நிலையில் மாஞ்சோலையிலிருந்து வெளியேற்றுவது அவர்களது எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்கு உரியதாக மாற்றும். 1999இல் கூலி உயர்வு கேட்டு திருநெல்வேலி மாவட்ட அலுவலகத்தை நோக்கிச் சென்ற மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியால் தாமிரபரணியில் மூழ்கி 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம், இன்றைய சூழலில் நினைவுகூரத்தக்கது. தொழிலாளர்களை வெளியேற்றும் முடிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அத்துடன் வெளியேறும் தொழிலாளர்கள் எங்கு குடியேற விரும்புகின்றனர் என விருப்ப மனுக்களை அரசும் சேகரித்துவருகிறது. தொழிலாளர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் அரசும் நிறுவனமும் செயல்பட வேண்டியது அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 06 – 2024)